Monday, July 28, 2008

இருப்பின் அவசியம்.......


நீண்ட பிரயாணத்தில்
குறைந்திருந்தது
உலகின் நீளம்......

உதிரும்
ஒரு சிறகில்
வெளிப்பட்டது
பறவையின் வரலாறு....

நங்கூரம்
இட்டப்பிறகுதான்
காற்றுக்கு
ஈடுகொடுக்க முடிந்தது கப்பல்....

மின்தடை
வருகிறபோதுதான்
உணரமுடிகிறது
இருப்பின் அவசியம்!

நிழலை
தொட்டுச்சென்ற பகலில்
இருட்டின் கைரேகை .....

நிஜமாகவே
உப்புக்கரிக்கிறது கண்ணீர்......
-ஆனந்தமாய் அழுகிறபோதும்!

Friday, July 25, 2008

இதயம் பேசட்டும்.....

மழை போர்த்தும்
குளிர் ஆடையுடன்
உள் நுழைகிறாய்.....


ஈரம் லேசாய்
கோலங்கள் கிறுக்க
மனதாழ்வாரத்தின்
ஜன்னல்கள் திறக்கிறேன்....


எதிரெதிர் புறமாய்
நின்றபடி
அலசிக்கொள்ள
காத்திருக்கிறது
நமது இடைவெளி ...


எப்போதுமே
உரைப்பதுஎதுவாயினும்
உதடுகளை முன் நிறுத்தும்
வழக்கத்தை கட்டி
காப்பாற்றுகிறோம்


இதயம் பேசினால் என்ன
மௌனித்தால் என்ன
வார்த்தைகள் புரியாதபோது........

இருப்பதாக எதையும் .....



எப்போதும்
நிகழ்வதில்லை
இருப்பினும்
நிழலாக போகும் சுவட்டை
தவிர்ப்பதற்க்கில்லை......


ஆரம்பிக்கிற
எழுத்தின் வளைவில்
உட்க்காரும் மனசு
நாற்காலி தேடும்
இனிப்பை
புறம்தள்ளும் வாழ்க்கை
கனவில்
எறும்பு மொய்த்தப்படி சிரிக்கும்....

ஒருகை மூடி
மறுகை நீட்டுகிற
திமிரின்
உச்சபட்சம்
அழவைக்கிற செயலில்
மும்முரமாய் இருக்கும்....

வரும்போதும்
போகும்போதும்
இருப்பதாக எதையும்
சொல்லிக்கொள்ளாத சமயம்
பட்சியாக மாறி
எச்சமிடலாம்
நிகழ்கால மானுட சிலைகளின் மேல்!

neelam enbathu song