Saturday, February 5, 2011

"அது" வாக ஒரு கவிதை...!



மெல்லிய மழை இரவில்
நிகழ்ந்து விட்ட
அது குறித்த யோசனையில்
ஈரம் சொட்ட உள்நுழைகிறது
எதுவாகவும் இல்லாத அது!

அவசரப் பட்டிருக்கக்கூடாது
என்கிற நிகழ் நிதானம்
வாய்க்காமல் போகலாம்.....

அதுவாகி விடுவோமா
என்கிற அவஸ்தையின் அடையாளம்
சதா அதுவாகவே யோசிக்கிறது!

அதுவாக வாய்க்காத பொழுது
இதுவாகவே இருந்துவிட்டுப்போகட்டும் ...!
அதுவரை கவிதையென்றும்
சொல்லிக்கொள்ளலாம் இதை...!

-ரா.நாகப்பன்.

Wednesday, January 19, 2011

இயல்பாகவே இருந்தாலும்.....1



நண்பர்களால்
கட்டமைக்கப்படுகிறது
ஒரு ஞாயிறு....!

மிதிப்படும் நிழலும்
உதிர்ந்த பூக்களுமாய்
வியாபித்திருக்கும் சாலையில்
அந்நியப்படாமல்
பயணிக்கிறது
மெல்போர்ன் தேவதையின்
மிதிவண்டி!

நண்பர்கள் தெருவை
தமிழ் படுத்திய பின்மாளைபோழுதில்
பிலிப்பினித் தோழனின் நெற்றியில்
திருநீறு இடுகிறாள் ரோஸ்மேரி!

அல்லாப்பிச்சையின்
கடைவாசலில்
அதிகமாய் விற்கிறது
மிளகாய் பஜ்ஜியுடன் காதல் கவிதைகளும்...

நண்பரின் நண்பன்
என்கிற அபரிமிதமான
தகுதி மட்டுமே
போதுமானதாய் இருக்கிறது
பலநேரங்களில் நண்பர்களைப் பெற...!

கைக்குலுக்கிய
பிறகுதான் தெரிகிறது
நாணயசுண்டுதலுக்கு
முன்வரை இல்லாத களைப்பு!

எல்லைகள்
இயல்பாகவே இருந்தாலும்
எதிரிகள் இயல்பாக இருப்பதில்லை!

-ரா.நாகப்பன்.

Wednesday, January 12, 2011

இது மார்கழி மாத கோலம்...!


தீமூட்டிகுளிர்
காய்கிறதுவாழ்க்கை
மார்கழி கனவு ...!

புன்னகையுடன்
புகைப்படம்
புழுதி படிந்து....

தெரு கடக்கிறது
நதி
கண்களில் ஈரம்!

மனசின்
ஜன்னல் திறக்கும்
மழலை!

தோட்டம்
பூக்களை பறிக்கவே
நீட்டுகிறது விரல்...

வானம்
ரோட்டோரத்தில்
ஆடும் கண்ணாமூச்சி ...

இது
மார்கழி மாத
கோலம்...!
வரட்டும்
போகியில் எரிக்கிறேன்
சோகத்தையும்
தொலைந்து கொண்டிருக்கும்
புகைப்படங்களையும்!

*புகைப்படம: விஜயகுமார்.ஜெ

neelam enbathu song