Saturday, February 5, 2011

அன்பு நண்பர்களே...!

"கேப்டன்" தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் "இயக்குனர் ஈஸ்வரன்" என்கிற தொடர் ஒளிப்பரப்பாகிறது...இத்தொடரின் தலைப்பு பாடலை எழுதி இருக்கிறேன்...இதன் இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன் முடிந்தால் பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=Qu4wQFoEEC8

ஈரமண்ணின் நேசத்துடன்,

ரா.நாகப்பன்

"அது" வாக ஒரு கவிதை...!மெல்லிய மழை இரவில்
நிகழ்ந்து விட்ட
அது குறித்த யோசனையில்
ஈரம் சொட்ட உள்நுழைகிறது
எதுவாகவும் இல்லாத அது!

அவசரப் பட்டிருக்கக்கூடாது
என்கிற நிகழ் நிதானம்
வாய்க்காமல் போகலாம்.....

அதுவாகி விடுவோமா
என்கிற அவஸ்தையின் அடையாளம்
சதா அதுவாகவே யோசிக்கிறது!

அதுவாக வாய்க்காத பொழுது
இதுவாகவே இருந்துவிட்டுப்போகட்டும் ...!
அதுவரை கவிதையென்றும்
சொல்லிக்கொள்ளலாம் இதை...!

-ரா.நாகப்பன்.

Wednesday, January 19, 2011

இயல்பாகவே இருந்தாலும்.....1நண்பர்களால்
கட்டமைக்கப்படுகிறது
ஒரு ஞாயிறு....!

மிதிப்படும் நிழலும்
உதிர்ந்த பூக்களுமாய்
வியாபித்திருக்கும் சாலையில்
அந்நியப்படாமல்
பயணிக்கிறது
மெல்போர்ன் தேவதையின்
மிதிவண்டி!

நண்பர்கள் தெருவை
தமிழ் படுத்திய பின்மாளைபோழுதில்
பிலிப்பினித் தோழனின் நெற்றியில்
திருநீறு இடுகிறாள் ரோஸ்மேரி!

அல்லாப்பிச்சையின்
கடைவாசலில்
அதிகமாய் விற்கிறது
மிளகாய் பஜ்ஜியுடன் காதல் கவிதைகளும்...

நண்பரின் நண்பன்
என்கிற அபரிமிதமான
தகுதி மட்டுமே
போதுமானதாய் இருக்கிறது
பலநேரங்களில் நண்பர்களைப் பெற...!

கைக்குலுக்கிய
பிறகுதான் தெரிகிறது
நாணயசுண்டுதலுக்கு
முன்வரை இல்லாத களைப்பு!

எல்லைகள்
இயல்பாகவே இருந்தாலும்
எதிரிகள் இயல்பாக இருப்பதில்லை!

-ரா.நாகப்பன்.

Wednesday, January 12, 2011

இது மார்கழி மாத கோலம்...!


தீமூட்டிகுளிர்
காய்கிறதுவாழ்க்கை
மார்கழி கனவு ...!

புன்னகையுடன்
புகைப்படம்
புழுதி படிந்து....

தெரு கடக்கிறது
நதி
கண்களில் ஈரம்!

மனசின்
ஜன்னல் திறக்கும்
மழலை!

தோட்டம்
பூக்களை பறிக்கவே
நீட்டுகிறது விரல்...

வானம்
ரோட்டோரத்தில்
ஆடும் கண்ணாமூச்சி ...

இது
மார்கழி மாத
கோலம்...!
வரட்டும்
போகியில் எரிக்கிறேன்
சோகத்தையும்
தொலைந்து கொண்டிருக்கும்
புகைப்படங்களையும்!

*புகைப்படம: விஜயகுமார்.ஜெ

Friday, December 31, 2010

ஜனனம்....!சத்தியமாய்
என்னை மறக்க வைத்துவிட்டாய்...

தொலைந்திருந்த
என் பிம்பம்
உன் நிழல்பட்டு
பிரதிபளித்தது கண்ணாடியில்!

பிரகாரத்தின் உச்சியில்
பட்டுத்தெறித்த
மழைத்துளியில்
கண் விழித்துக் கொண்டது சர்வமும்...!

நீ தான்
எல்லாமுமான
என் இதயம்
தடைப்பட்டிருந்தது

மறுபடியும் எழுகிறது
உன் உதட்டின்
லேசான துடிப்பில்
இனி கிளம்பலாம்
வீரியமான படைப்புகள்
உன்னிடம் இருந்து எனக்கு....!

-ரா.நாகப்பன்.

Friday, December 12, 2008

அறைகளின் வெளியே...!


வீதியில் இருந்து
அன்னியப்பட்டிருந்தது
அந்த அறை நம்மை இணைத்த
நம் வீட்டைப்போல்!

பழகிய சாலை
பார்த்த முகங்கள்
அடையாளங்களை வைத்தே
அடைந்துவிடுகிறோம் சுலபமாய்....!

ஆணியில் தொங்கும்
சட்டைப்பை உள்ளிருக்கும்
சில்லரைப்போல்
சும்மா இருந்துவிடுகிறோம்
அவசியமில்லாத நேரங்களில்!

பந்துப்பட்டு
உடையாத கண்ணாடி ஜன்னல்
அழைப்புமணியோ கதவுத்தட்டலோ
கேட்காத அறை
எறும்புகள் பார்க்காத
விஷேச தின கோலம்
குழந்தைகள் கிறுக்காத சுவர்கள்
-எதோ ஒன்றில்
உட்கார்ந்திருக்கும்
நம் தாம்பத்தியம்!

மின்விசிறியின்
புழுக்கம் தாளாமல்
கதவுக்கு வெளியே காத்திருக்கலாம்
சில கவிதைகளும்
சில கனவுகளும்
குடை இல்லாமல்
மழையில் நனைந்தபடி!

Thursday, December 11, 2008

நிறவொவ்வாமை...!


துடைக்க மறந்து
வெளிறிப்போன
பவுடர்பூச்சு!

நாணய அளவுகளைத் தாண்டும்
நெற்றி கன்னம்
நிறைத்தபோட்டு
நிற வொவ்வாமையில்!

பின்னிய கூந்தல்
அகல்விளக்காய்....
தனித்திருக்கும் கார்த்திகையில்!

கூரை ஏறிய
பூசணிக்கொடியில்
தென்பட்டு மறையும்
செங்கல் சூளை.....

அப்பாவின் சட்டை
அம்மாவின் புடவை
மாறிய வடிவங்களில்....!

அரிக்கேன் விளக்காய்
செம்மண் சாலைகளில்
எப்போதாவது நிற்கும் பேருந்துகள்!

அமாவாசை பகல்பொழுதுகளில்
மின்மினி பொறுக்கும்
மரப்பாச்சி பொம்மைகள்!

எத்தனை எறும்புகள்
செத்ததோ
யாருக்குத் தெரியும்
சீனி டப்பாவின் பக்கத்தில்!