Wednesday, October 29, 2008

அதுவரை இல்லாத கரிசனம்....!


எந்த ஒரு இரைச்சலின்
வெளிப்பாடாய் தென்பட்டிருக்கும்
இந்த அமானுஷ்யம்!

மௌனிக்கிற
வார்த்தைகளின் பிணம்
இரைச்சல் ஈக்களால்
மொய்க்கப்பட்டிருக்கும் தருணம்
அந்த உதடு உதிர்த்த அமைதியில்
வந்திருந்தது அது.......

எல்லாம் தெளிவாக
காதுகளை தொடும் சத்தங்களில்
கேட்காமல் விடப்படும்
சத்தங்களின் தூரிகை
தீட்டிக்கொண்டிருந்தது!

சந்தர்பங்களை மறுதலிக்கும்
சலன ஓவியம்
மௌன வண்ணங்களால்
அதன் புன்னகை
அழகுப் படுத்தபட்டிருந்ததை மறுப்பதற்கில்லை!

குழந்தைகளின்
விளையாட்டைப்போல் இனிமையானது
அழுகை மறந்து மீண்டும்
மணல் வீடு கட்டுவது!

இருந்தும்
அதுவரை இல்லாத கரிசனத்துடன்
கேட்க வேண்டியுள்ளது
"என்ன ரொம்ப மௌனமாய்
இருக்கீங்க போல கோபமா"

Saturday, October 25, 2008

தீபாவளி வாழ்த்துகள்!


மழையுடன் துவங்கும் தீபாவளி
தைத்த துணி வாங்க
டைலர் கடைக்கு செல்ல நினைக்கும்
அவசரம் நனைய
பட்டாசு கொள்ளுத்துவோம்...!

பட்டன் கட்டாத சட்டையுடன்
சிரிக்கும் சிநேகம்
எந்த டைலரையும்
பார்க்கமுடியாமல் போகிறது இப்போது!

ரெடிமேட் துணிகளில்
ஒட்டிக்கொள்ளும் உடம்பு
மனசு மட்டும் ஓட்டமறுத்து
கதவுக்கு வெளியே வெடிச்சத்தத்தில் பயந்தபடி!

எல்லா தீபாவளியின் இனிப்பையும்
வாரியிரைத்துவிட்டு
போவதில்லை கனவுகள்!

தலைதீபாவளியும்
சியக்காய் விலையேற்றத்தில்
கண்கள் கசக்க எண்ணெய் வடிய
திருதிருவென விழிக்கும் தீபாவளி பட்ஜெட்!

போதும் என்பதான
அதிசய வெயில் எட்டிப்பார்க்க
குளித்துவிட்டு வந்திருக்கும் நிஜம்!
தீபாவளிகளில் எப்போதும்
வேடித்துச்சிதறுவது
பட்டாசுகளோடு பற்றாக்குறை வாழ்க்கையும்!

இருந்தும் சொல்லிக்கொள்ளவே செய்கிறோம்
"தீபாவளி வாழ்த்துகள்"

neelam enbathu song