Tuesday, May 29, 2018

15 -01-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 216
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மருத நிலத்தில் இருந்து
மேய ஆரம்பித்தது என் ஆநிரைகள் ...
மேய்ச்சலை மறந்திருந்த பொதி சுமக்கும் வேளை
அசைபோடஆரம்பித்தது என்னை போல் அதுவும் ...
தாடி வளர்த்த ஆட்டுக்கிடாவும்
கொம்பு முளைத்த காங்கேயமும்
தொழுவங்கள் மறந்து என்னைப்போல்
திசைக்கொன்றாய் அலைமோதியது ...
மேய்ப்பனைத்தேடும் நிலங்களில்
நெய்தலை விதைத்திருந்தது கோடை ..
கரம்புக்காடாக மாறிய பொட்டலில்
முளைக்க ஆரம்பித்தது
குழலில் இருந்து விலகியிருந்த மூங்கில் ..
மூக்கணாங்கயிறு பூட்டிய நுகத்தடிகளில்
வாலால் விசிறிக்கொண்டிருந்தன
எங்கள் வீட்டு செல்ல பசுக்கள்...
-நாகா
16 -01-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 217
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முன்வாசல் வழியாக உள் நுழைகிறது
ஒரு செல்ல பூனையாய் காதல்...
தோட்டம் கடந்து வந்த அதன் உடலெங்கும்
ஒட்டிக்கிடந்தது பூக்களின் வாசனை...
நேற்றைய பனித்துளியை சுமந்துவந்த அது
முற்றம் எங்கும் கொட்டிப் போகிறது ஒரு மேகத்தை போல ...
உள்ளங்கை தொட்டு மெல்ல
என்னை ஏந்திக்கொண்ட அதன் கதகதப்பில்
வெளுக்க ஆரம்பிக்கிறது என் ஆகாயம் ...
அதன் கால்களை கட்டிக்கொண்டு
வளைய வருகிறேன் ஒரு சிறுவெயிலைப்போல நான்...
பூனைக்கு இன்று பிறந்த நாள்
காதல் பிறந்திருக்கிறது என்கிறேன்
அதன் கண்களில் தெரியும் என் பிம்பத்தில்
அசடுவழிகிறது பூங்கொத்துகளுடன்
அணைத்துக்கொள்ளும் அதன் நேசம் ..
-நாகா
17 -01-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 218
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
வீசி செல்கிறது ஆகாயம்
நிலவின் துணுக்குகளில் சிதறுகிறது அறை...
சாளரம் எங்கும் ததும்பும் பௌர்ணமி
நனைத்து போகும் நினைவில்
துவட்டிச்செல்கிறாள் செல்லமாக...
ஈர கூந்தலில் சொட்டுச்சொட்டாய்
வரைகிறது தூரிகையில்லாமல் காதல்...
எனக்காக விழிக்கும் அவள்
தனக்காக எழுப்புகிறாள் என்னை...
போர்வைக்குள் இருந்து உதறி எழுகிறது
ஒரு சிறு மேகமென கவிதை ...
ஒன்றாக பறக்க ஆகாயம் தேடும்
அவள் சிறகில் உருவாகிறது எனக்கான கூடு..
என் தனிமை பயணத்தில் துணையாக
தொடர்கிறது அவள் அன்பு ...
உதடு திறக்க வார்த்தைகளாக அவள்
இதயம் திறக்கிறாள் துடிப்பாக நான் ..
அந்த சிறு வீட்டுக்குள் இருந்து
வானம் பார்க்கிறோம் ...
ஒரு நட்சத்திரமாக எங்களை
கவனித்து கொண்டிருந்தது அந்த பூமி ...
- நாகா
18 -01-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 219
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தரையிறங்கும் ஒரு பறவையை போல
காற்றில் மிதக்கிறேன் அவளுடன் ..
மேக கிளையில் அமர்ந்து போகும்
அந்த நதியில் நனைகிறது எங்கள் சிறகு ...
ஈரம் உலர்த்தும் கந்தர்வ நொடியில்
குளிர் காய்கிறது எங்கள் தனிமை ...
வெயில் சுமக்கும் பகலில்
ஒற்றை துளியில் ஆவியாகிறது நேசம்...
பயணங்களின் தொலைவை தீமானிக்கும்
திசைகளில் தொலைகிறோம் ஆனந்தமாக..
ஒரு செல்ல இடைவெளியில்
கொத்திக்கொன்டு பறக்கும் அவளிடமிருந்து
விடுபடாத என்காதல் இறையாகிறது
புசிக்க தன்னை இரையாய் கொடுத்த படி ....
பறவையாய் நான் மாறிக்கொண்டிருக்கிறேன்
ஆகாயமாய் அவள் வேர்விடத்தொடங்குகிறாள் ..
-நாகா

21 -01-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 220
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கத்தரிச்செடியில் பூ பூத்ததில்
சிலாகிக்கிறது என் காலை பொழுது ...
உள்ளங்கை தொட்டு தந்த விதை
முளைக்க ஆரம்பித்தது அன்றைய தோட்டம் ...
மொட்டுவிட்டிருந்த முல்லைக்கொடியுடன்
உள் நுழைவாள் ஒரு தட்டானாக அவள் ...
ஜன்னல் கம்பிக்கு வெளியே
தலைநீட்ட ஆரம்பிக்கும் பிரியம் ...
மேயாத தோட்டத்தில்
வெறுமனே கிடந்தது கம்பி வேலிகள்...
மீன் தொட்டியில் மூழ்கி கிடந்தது
செல்லுபடியான காலம்
காலணா அரையணா நாணயங்களாக ...
பூச்சி அரித்த கத்தரிச்செடியும்
ஆடு மேய்ந்த முல்லைக்கொடியுமாக
காற்றில் அசைகின்றன காதலும் இன்ன பிறவும்…..
- நாகா
22 -01-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 221
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முக நூலில் பார்க்க முடிகிறது
பழைய நண்பர்களை சிரித்த முகங்களுடன் ...
சுயமிகளில் உறைந்த புன்னகை
தேடி எடுக்க வேண்டியிருந்தது நேரில் சந்தித்த போது ...
இருந்துவிடலாம் போலிருக்கிறது
இன்ஸ்ட்டாகிராமிலும் டுவிட்டரிலும்....
முகம் பார்த்து பேசும் தோழமைகளை
அலைபேசியில் தேடி கண்டடைகிறது நட்பு ...
நொறுங்குகிறது கண்ணாடி இதயம்
வார்த்தை கல் பட்டு நிதானமாக ..
வலைத்தளங்களில் சிக்கிக்கொள்கின்றன
துருத்திக் கொண்டு திரியும் வார்த்தைகள்...
சொல் கொண்டு வீழ்த்தும் யுத்தத்தில்
நிராயுதபாணியாக நிற்கிறது மௌனம் ...
- நாகா
24 -01-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 222
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முகம் தொலைக்கும் பிரியத்தில்
வாங்க ஆரம்பிக்கிறேன் முகமூடிகளை ...
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ...
பொருந்தாத முகங்களைவிட
பொருந்திக்கொள்ளும் முகமூடிகள் வரவேற்புக்குரியவை ...
நேற்றைய முகத்தை சிலாகிக்கும் நிஜங்களுக்கு
இன்றைய முகமூடிகள் கொஞ்சம் ஆறுதல்...
அகத்தை வெளிப்படுத்தும் அதன் கருணை
சுயத்தின் மீது பூசுகிறது சுண்ணாம்பு ...
வன்மத்தை மறைத்து எப்போதும்
புன்னகையுடன் திரியும் அதன் வீதியில்
கேட்க முடிவதில்லை நிஜ முகங்களின் அழுகையை...
உறைந்திருக்கும் ஒப்பனை முகங்களில்
முகமூடிகளின் நிழல் தங்கிவிடுகிறது நிரந்தரமாய் ...
- நாகா
25 -01-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 223
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தீண்டலும் தீண்டல் நிமித்தமுமாய்
அந்த ராத்திரியில் அரங்கேறியது அது....
நிலா உமிழ்ந்த இருட்டில்
சர்பங்களின் புணர்தலை தலையசைத்து கவனித்தது
அந்த வேலியோர ஓணாய்....
அதரங்களில் வெளியேறும் ஜுவாலையில்
விளக்கேற்றிக் கொண்டது காமம்...
உடல் தின்று பசியாறும் காதலை
முதல் முறையாய் தரிசித்தது அந்த இடம்...
இமைகளில் அனல் துண்டுகள்
இடைவெளிகளில் பனித்துண்டங்கள்
மாறி மாறி சண்டையிட்டு தோற்றன...
உடல் கடத்தும் ஒரு அத்வைதம்
நனைத்து கொண்டிருந்தது அந்த துளசி செடியோரம் ...
- நாகா
31 -01-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 224
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

உடைந்த அலைபேசியில்
உடையாமல் ஒலிக்கிறது அவள் குரல் ...
வண்ணங்களில் தோய்ந்த குரல்
வானவில்லை வரைந்து போகும் சில நேரம் ...
ஒரு கலாபமாக வலம் வருகிறது
அன்பில் நனைந்த அந்த குரல் ...
குளிர்சட்டையாக தண்ணீர் பந்தலாக
மாறிவிடுகிறது ஒரு ஒற்றை பறவையாய் அந்த குரல் ...
ஊடலில் கரையும் அந்த குரலில்
மூழ்கிவிடுகிறது சோகங்கள்...
மழையின் நிழலில் மறையும் அந்த குரல்
தலைதுவட்டி போகிறது எனக்குள் ...
எனக்கான வார்த்தைகளை
சேகரிக்கும் அந்த குரல்
முதல்முறையாக தனக்காக பேசுகிறது ...
ஒலிக்கும் குரலில் ஒளிந்துகொள்கிறேன்
ஒரு கங்காருக்குட்டியைப்போல ....
- நாகா
01 -02-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 225
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அதென்னவோ பொட்டுகளை
வட்டமாக பார்த்தே பழகிவிட்டது மனசு ..
ஒற்றைரூபாய் நாணய அளவில்
சிரிக்கும் கீரைக்கார கிழவியின் பொட்டு
காலணா அளவிற்கு சிக்கனமாய்
இருக்கும் அம்மாவின் பொட்டு
தடயம் தேடி துப்பறியச்சொல்லும்
எதிர்வீட்டு மாமியின் பொட்டு ...
வட்டங்களை கடந்த வடிவ பொட்டுகளை
அக்காவிடம் பார்த்தேன் பிற்பாடு...
ஸ்டிக்கர் பொட்டுகளால்
நிரம்பியிருந்த குளியறையில்
பாம்பு பொட்டு பார்த்து அலறிப்போனேன் ...
நெற்றிக்கு மேலே புருவங்களுக்கு மத்தியில்
ஒட்டிக்கொள்ளப்படுகின்றன பொட்டுகள்...
வீட்டுக்கு வந்து செல்லும் சுமங்கலி பெண்களுக்கு
இன்றுவரை அம்மா தரும் குங்குமத்தில்
வட்டமாகத்தான் இட்டு கொள்ளப்படுகின்றன பொட்டுகள்...
ஒப்பனையில்லாவிட்டாலும் பொட்டில்லாத
அவள் நெற்றி ஏற்றிவிடுகிறது கோபத்தை எனக்குள்...
முத்தங்களால் இட்ட பொட்டுக்குள்
ஒட்டிக்கொண்டது என் உதடுகள் ...
வேண்டும் ண்ண வண்ண பொட்டுகளில்
கழுத்தை கட்டிக்கொள்ளும் மகளின்
உள்ளங்கையில் கொட்டிக்கொண்டிருந்தது
வெட்கத்தின் பொட்டு ஒன்று ...
- நாகா
04 -02-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 226
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
சந்திரபாபுவாக தான் இருந்தேன்
அவள் வந்த பிறகுதான் தெரிந்தது
ஒரு ஜெமினிகணேசன் சத்தமில்லாமல் உள்ளிருந்தது..
கத்தி சண்டையில் லாவகமாக மக்கள்திலகமும்
கம்பு சண்டையில் பிடிவாதமாக நடிகர் திலகமும்
மாறிமாறி வந்து போகின்றனர்
நம்பியாராகிறது என் காதல் அடிக்கடி ...
சுவரொட்டிகளில் சிரிக்கும்
பகல் நேர காட்சிகளாக அவள் வந்து போகிற போது
இடைவேளைகளில் மத்திய வெயிலாய்
எட்டிப்பார்க்கும் அணிலாகிறேன் நான் ...
ஒளியும் ஒலியும் நாட்களில்
கூடுதலாக ஒலித்த ஒற்றை பாடலின்
வருகையை போல அமையும் அவள் புன்னகை ..
நேயர் விருப்பங்களில் என் பெயரில் அவளையும்
அவள் பெயரில் நானும் ஒளிந்து கொள்ளும்
கண்ணாமூச்சி நிமிடங்கள்
இலங்கை வானொலி பொங்கும் பூம்புனலில்
நீராடிக் கொண்டிருக்கும் ...
பயாஸ்கோப்பில் ரீல் அறுந்துபோகும் வரை
ஓட ஆரம்பிக்கிறது காட்சிகள் ...
ஒரு பார்வையாளனாக
பார்த்துக் கொண்டிருக்கிறது காலம்.
- நாகா
05 -02-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 227
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
நிழல் உதிர்த்த புங்கை மரம்
சிதறி இருக்கும் சிறகுகள் போல தென்பட்ட போது தான்
தாத்தா ஞாபகம் வந்தார்..
பறவைகள் மீது அலாதி பிரியம் அவருக்கு ..
கூடு திரும்பும் பறவையாக
அடிக்கடி வீடு திரும்பும் என்னை
ஒரு பறவையின் கரிசனத்துடன்
அணுகுவது அவரின் இயல்பு....
சாளரம் திறக்கும் பறவையின் அலகில்
தாத்தாவின் நினைவுகள் சிறகடிக்கும் ...
ஆகாயத்தின் மறுமுனையில் நானும்
எதிர் முனையில் தாத்தாவும்
மாறிமாறி இழுக்கிறோம்
இடைவெளியில் நழுவி விழுகிறது
ஒரு தலைமுறையின் வால் நட்சத்திரம் ஒன்று...
- நாகா

Image may contain: bicycle, sky and outdoor

07 -02-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 228
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
யாருமற்ற சாலையில்
ஒற்றை மிதிவண்டியில் நானும் தம்பியும் ...
பின்னிருக்கையில் நான்
முன்னிருக்கையில் அவன் ...
அப்பா வியர்வை வழிய மிதிப்பார்
முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் ...
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் ஈரம்
சலசலக்க ஆரம்பிக்கும் எங்கள் காதுகளில் ..
அரவமற்ற நிமிடங்களில்
தம்பியும் நானும் பாட ஆரம்பிப்போம் ..
பிற்பாடு சைக்கிள் பழகிய பிறகு
தம்பியை பின்னிருக்கையில் அமர்த்தி
மிதித்திருக்கிறேன்
எங்களுக்குள் ஓட ஆரம்பித்தது ஆறு...
கத்தரி வெயிலில் ஒரு நாள்
பாலத்திற்கு கீழே மிதிவண்டி தள்ளிக்கொண்டு
நடத்திருக்கிறேன்
முதல் காதலை பூக்க வைத்தவளுடன் ...
தனிமையில் நெடுநேரம் உரையாடிய
நடுநிசி இரவில் பேச தொடங்கியது அந்த நிலா ..
ஒரு மிதிவண்டியில் சிக்கி கொண்ட
ஒற்றை கால் கொலுசாய் இன்னும்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது அந்த ஆறு
மனதில் பாலத்திற்கு கீழே
திருகாணி தொலைத்த காதலாக ......
- நாகா
PC : Aditya Ramanathan
08 -02-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 229
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த வெற்றிடத்தை
இட்டு நிரப்ப
பிரியம் காட்டுகிறது காற்று ....
ஓடைக்குள் ஒளிந்துகொண்டு
ஒற்றை இலையில் பயணிக்கிறது ஈரம்
துளைகளில் வெளியேறும்
இசையில் நனைந்து நிற்கிறது மூங்கில்...
வெயில் தூரிகை தீட்டும்
வன ஓவியத்தில் ஆற்றின் நிழல்....
காடு கடக்கும் காற்றில்
மிதந்து செல்லும் பூக்களின்
மேனியெங்கும் இசை வியர்வை ...
குடைபிடிக்கும் மேகத்தில் இருந்து
விழ ஆரம்பிக்கிறது இந்த கவிதை ...
-நாகா
11 -02-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 230
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
சித்தப்பாவை விட
சித்தி கொஞ்சம் உயரம் கம்மிதான் ...
சித்தியின் நிறத்தை
சித்தப்பாவிடம் பார்க்க முடியாது...
புன்னகையில் கடந்துவிட்டிருந்தது
ஒரு கால் நூற்றாண்டு கால
அவர்களின் தாம்பத்தியம் ..
கிளியை பிடித்து பூனை கையில் கொடுத்துவிட்டதாக
உறவுகளின் பேச்சில்
காயப்பட்டதில்லை சித்தப்பாவின் தன்மானம்..
சாய்வு நாற்காலியை போல
அசைந்து கொண்டுதான் இருக்கிறது
உருவங்களை தாண்டிய காதல்...
- நாகா
12 -02-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 231
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
புறாவின் கால்களில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
எழுத நினைத்த கடிதத்தின் சொற்கள் ...
சிதறிய தானியங்களை கொத்தும்
அதன் அலகுகளில்
தட்டு பட்டு போகின்றன சில...
வானத்தின் வார்த்தைகளில்
ஒளிந்து கொண்டிருக்கும் மேகத்தின்
துண்டொன்றில் மோதி போகிறது
மூங்கிலில் நுழைந்த காற்று ..
அதன் சிறகசைப்பில் சிதறும்
நட்சத்திரங்களை கொத்த ஆரம்பிக்கின்றன
வண்ணத்து பூச்சிகள் ..
ஜன்னல் வந்து அமரும் புறாவின்
கால்களை கவனித்தபடி
நீ மௌனமாய் நிற்கிறாய் ஒரு சிலையை போல ..
உன் பார்வையை சுமந்த படி
என் வலசை வரும் பறவையின்
கடிதத்தில் தொலைந்து கொண்டிருக்கிறேன்
ஒரு வரி விடாமல் வாசித்தபடி நான்
வெற்று காகிதத்தில்
நிரம்பி இருக்கிறது உன் அன்பு ......
- நாகா
13 -02-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 232
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தாத்தாவின் வானொலி பெட்டியில்
பாட்டியின் நினைவு நூலாம்படையாக.....
கிராமபோன் தட்டுகளில்
சுழன்றுகொண்டிருக்கிறது
நேற்றைய வர்த்தக ஒலிப்பரப்புகள் ...
ஒரு மழைக்கால ராத்திரியும்
அகல் விளக்கு வெளிச்சத்தில்
பகலில் பெய்த மழைதுளியும்
எரவானத்தில் சொட்டிக்கொண்டிருக்கிறது
Mp3 பாடல்களை போல ...
கல்லெறிந்து விட்டு எட்டி பார்க்கும்
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து
ஒலிக்கும் நேயர் விருப்பத்தில்
அப்பாவின் பெயரும் சில்லுகளாகி காதுகளை தொடும் ...
வானொலி நாடகங்களில்
அக்காவின் தாவணி பொழுதுகள்
ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூப்பறிக்கும் ...
சாலைகளில் பயணிக்கும் வாகனத்தில் இருந்து
யாரோ ஒரு தொகுப்பாளினியின் சிரிப்பில்
சிணுங்க ஆரம்பிக்கிறது வானொலி ...
பண்பலைகளை கேட்கும் அலைபேசியில் இருந்து
அடிக்கடி எட்டி பார்த்து தான் போகிறாள்
அப்பாவுக்கு முன்னால் வானொலி காதலியாய்
தன்னை காட்டிக்கொள்ளாத அம்மா
- நாகா
14 -02-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 233
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒத்த பூவ தொட்டு வாங்கும்
விரலில் வழியுது காதல்
அரண்டு மிரண்டு உருளும் விழியில்
தூண்டில் போடுது காதல்...
பட்டு தெறிக்கும் மழைதுளியெங்கும்
கொட்டி போகுது காதல் ...
உள்ளங்கையில் ஏந்திக்கொண்டால்
அழகாய் மிதக்குது காதல்...
புல்லாங்குழலை தொலைத்துவிட்டு
உதட்டில் ஒளியுது காதல் ..
இதய துடிப்பின் ஓசையில் மெல்ல
இசையாய் துளிர்க்குது காதல்...
செல்ல சிணுங்கல் சின்ன பதுங்கல்
மழலை யாகுது காதல் ...
திருகாணிக்குள் தீபமேற்றி
திசையில் தொலையுது காதல்...
நட்டுவைத்த செடியை சுற்றி
வட்டம் போடுது காதல் ...
காலை சுற்றும் பூனை போல
வாலை ஆட்டுது காதல்....
அக்கறையோடு கேசம் வருடி
நேசம் பேசுது காதல் ....
மடியில் போட்டு கதைகள் சொல்லி
தூங்க வைக்குது காதல் ....
தாயாய் சேயாய் பேயாய்
யாதும் ஆகுது காதல்
சோகம் மோகம் தாகம் யாவும்
தளும்பி வழியுது காதல்...
- நாகா
15 -02-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 234
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒற்றை புன்னகையில்
தீபம் ஏற்றி போவாள்
பிரகாசமாகும் என் வீடு ....
கூட்டி பெருக்கிய அறைக்குள்ளிருந்து
சுருட்டி கிடந்த கூந்தலில்
வந்தமர்கிறது அவள் ஞாபகம்
ஒரு பட்டாம்பூச்சியாய்
உள்நுழைய தொடங்கும் ...
சாளரம் படியும் தோட்டத்து செடியின் நிழல்
ஹைக்கூ கவிதையாய்
அவளை தேட ஆரம்பிக்கும் ...
முகம் பார்க்கும் கண்ணாடியில்
வந்து போகும் அவள் முகத்திற்கு
பொட்டு வைத்து பார்க்கிறது
முணுமுணுக்கும் பாடல் வரிகள் ....
அந்த தேவதைக்காக
ஒரு மாலை வெயிலில்
மருதாணி பறிக்கிறேன்..
விரல்கள் கோர்த்து நடந்த
சாலைகள் எங்கும்
உதிர்ந்து கிடக்கிறது நேற்றைய நினைவுகள் ..
பலூன்களில் நிரம்பிய காற்று
மூங்கிலில் நுழைந்து வெளியேறுகிறது
துளைகளின் வழியே காதல்....
- நாகா
18 -02-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 235
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு நீல இரவில்
வெண்ணிற தேவதையாய்
அவளுடன் நடக்க தொடங்கினேன் ...
அவள் பயணங்களில்
ஒரு வழித்துணையாக என்னை
அனுமதித்த போது தொட்டு பார்க்கிறேன்
முளைத்திருக்கிறது சிறகுகள்...
சாலைகள் எங்கும்
அவளின் புன்னகை மின்மினிகள்...
விண்மீனின் நிழலாக
அந்த வனாந்திரம் அழைத்து செல்கிறாள்...
பனித்துளியில் ஒளிந்துகொண்டு
விளையாட அழைக்கும் ஆகாயத்தை போல
அவளை பார்க்கிறேன் ...
என் இமைகளில் புகுந்துகொண்ட
அவள் கனவுகளோடு உறங்குகிறது
என் தனிமையும் அவள் பிரியங்களும் .....
எனக்குள் புதைந்து
தொலைந்துபோகும் அவளை
ஒரு அகழ்வாராய்ச்சியாளனின்
மனநிலையோடுதான் அணுக வேண்டி இருக்கிறது ...
காதலும் இன்னபிறவுமான வாழ்க்கையில்...
- நாகா
19 -02-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 236
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கொட்டும் மழையை
ஒரு குடை கொண்டு மறைப்பது போல்
உள்ளங்கை ஏந்தி மழைப்பிடிப்பாள்...
ஒரு நனைந்த பூனைக்குட்டியாய்
உள் நுழைவாள் நவீன ஓவியம்
தரையெங்கும் கொட்டி போகும் ..
தூரிகையின் நிழலில்
கத்தி கப்பலாகும் அவள் புன்னகை..
தோட்டம் முழுக்க பூக்களையும்
வாசல் முழுக்க தென்றலையும்
அடிக்கடி நினைவுப்படுத்துவாள்...
சிண்ட்ரெல்லாவாகும் அவளுடன்
ஒரு தட்டானாக தாழ பறந்து போகிறேன் ..
அவள் சுட்டு விரலும் கட்டை விரலும்
என்னை பிடித்துவிடும் தருணத்தில்
உயிர்பிக்கலாம் ஒரு தந்தையின்
ஆக சிறந்த குழந்தை பருவம் ...
- நாகா
21 -02-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 237
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு வட்ட மேசை மாநாட்டை
நிகழ்த்தி காட்டுகிறது
உன் அண்மை எனக்குள்...
யாரோ அழைத்த குரல்
காற்றில் மோதி திரும்ப வைக்கிறது
என்னை உன் திசை நோக்கி ...
பூவாசத்தில் தோட்டம் கண்டடையும்
என் முயற்சியின் வாலில் நூல் கட்டி
பறக்க விடுகிறது காதல் தட்டான் ...
உள்ளங்கை நிரம்பிய சோள மணிகளை
கொத்த வரும் குருவிகளாகிறது உன் புன்னகை ...
திடுக்கிட்டெழும் இரவு பொழுதின்
சுருண்ட படுக்கையை போல
சிதறி கிடந்தது உன் நித்திரை ...
உன்னுடனான என் தனிமையில்
கல்லெறிந்து போகும் குளமாகிறது
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஆகாயம்...
- நாகா
25 -02-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 238
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு தேநீர் கோப்பையும்
சில வேனிற் காலமும்
எனக்குள் அனல் மூட்டவே செய்கிறது
ஒவ்வொருமுறையும் ...
மழை துளியில் குட்டி குட்டி கங்குகள்
கத்தி கப்பல்களாய் மிதக்கிற போது
தேநீர் கோப்பையின் விளிம்பில்
தத்தளிக்கும் ஈயின் வாழ்வு போராட்டம்
எட்டி பார்த்து போகும் ...
பனிக்கட்டிகளை சாலையில் கொட்டி போகும்
நேசத்தின் பெரு வாழ்வு
ஆர்டிக் கனவை விதைத்து போகிறது…
வெடித்த வெள்ளரியாக
மனதின் குரல் சன்னமாய் ஒலிக்க
சலசலத்து ஓடுகிறது ஆறு ..
கரையெங்கும் பதுங்கி
தடயம் அழிக்கும் அலைகளில்
ஒரு கட்டுமரமாக மிதந்து செல்கிறது காதல்....
-நாகா
26 -02-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 239
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
குடை கவிழ்த்து
மழைப்பிடிக்கும் மகளின்
செல்ல விளையாட்டில் மேகமாகிறேன் நான் ..
வாளியில் நிரம்பிய அவளின் கடல்
என் காகித கப்பல்களை
கரைசேர்க்க போராடும் ...
நூல் அறுந்த காற்றாடி
பறந்து விழும் மொட்டைமாடி
படியேறிவரும் நிலவாக அவள்...
தரையெங்கும் மிதக்கும் ஆகாயத்தில்
விண்மீன்கள் பொறுக்குவாள் அவள்
பின்தொடர்வேன் ஒரு தூண்டில் காரனாய் நான் ....
கூடு சுமந்து பறக்கும்
பறவையின் பார்வையில்
அந்த மரத்தின் நிழல் ஒட்டிக்கொண்டிருந்தது ..
பறவையின் நிழல் விழுந்த நிலத்தில்
உணவு துணுக்கை இழுத்தபடி
எறும்புகள் என்னை போல ...
மகளின் புன்னகையில்
இருட்டுக்கு வெள்ளையடித்துக்கொண்டிருந்தேன் ...
- நாகா
28 -02-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 240
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஆடுகளும் ஆடு நிமித்தமுமாய்
ஒரு கவிதை...
மேய்ச்சலுக்கு போன ஆடுகள்
வழிதவறி போய் கசாப்பு கடை நோக்கி ...
வெள்ளாடுகளில் எப்போதாவது
சேர்ந்து விடுகின்றன சில கருப்பு ஆடுகள் ..
மேய்ப்பனை நம்பி பின்தொடரும் பயணம்
மந்தைகளில் முடிவதில்லை எப்போதும்...
செம்மறிகளை தேடி
தலை சாய்க்கும் கிளைகளில்
தொங்கிக்கொண்டிருக்கின்றன துரட்டிகள் ..
தழை பறித்து போடும் விரல்களில்
மலை சரிவுகளும் பள்ளத்தாக்குகளும் ...
ஒரு அனாமதேய சந்திப்பில்
புல் மேய ஆரம்பித்தன ஆடுகள்...
பட்டிகளில் அடைந்திருக்கும்
ஆட்டுக்கூட்டத்தில் உள் நுழைந்த
ஒற்றை அரவத்தின் அவசரம்
சிதறி ஓட வைக்கின்றன ஆடுகளை...
- நாகா
01 -03-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 241
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
குறுக்கெழுக்கு போட்டிக்குள் இருந்து
கண்டெடுக்கிறேன் வாழ்க்கையை
ஒவ்வொரு முறையும் கீழிருந்து மேலாக
இடமிருந்து வலமாக ....
சிதறிய எழுத்துகளை இணைக்கும்
லாவகத்தின் விளிம்பில்
எட்டிப்பார்க்கிறது என் பெயர் ...
உச்சித்தொட்ட தட்டானின்
வாலில் தொங்கும் நூலில்
சிக்கிக் கொண்ட முள்செடியில்
அசைகிறது பூ ஒன்று ...
சதுர கட்டைகளை அடுக்கி
வீடு உருவாக்கும் மகளின் விளையாட்டு வீட்டில்
குடியேறுகிறது என் பால்யம் ...
கட்டங்களின் நெருக்கடியில் மூச்சு வாங்கும்
என் தனிமையின் இடைவெளியில்
தேநீர் கோப்பையுடன் வருகிறாள் மனைவி
ஆவியாகி கொண்டிருக்கிறது வாழ்க்கை ...
- நாகா
04 -03-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 242
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
யானையை தூக்கி கொண்டு
காகம் ஒன்று பறந்து கொண்டிருந்தது ...
நீல காகத்தின் பச்சை அலகில்
யானையின் சிவப்பு ஒட்டிக் கொண்டிருக்க
மகளின் பிஞ்சு விரல்களில்
தொலைந்திருந்தது அந்த தூரிகை ...
யானைகள் பறக்கவும்
சிட்டுக்குருவிகள் நடந்து போகவும்
வரைய ஆரம்பிக்கிறாள் ..
ஒவ்வொரு ஓவியத்திற்குள்ளிருந்தும்
வெளியேற ஆரம்பித்தது பறவைகள் ....
எப்போதாவது என்னையும் வரைய
அவள் ஆர்வம் காட்டுவாள் ...
மாடு மேய்த்து கொண்டிருந்தது நிலா
விண்மீன்களை மேய்ந்து கொண்டிருக்கும்
அந்த புல்வெளியெங்கும்
தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது
கயிறு அறுந்த களிறு ஒன்று...
அவளின் தோட்டம் பச்சையாக இல்லாமல்
பூக்க ஆரம்பித்தது நிறமற்ற நிறத்தில் ஒரு பூ ....
-நாகா

neelam enbathu song