Tuesday, May 29, 2018

16-04-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 270
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த வனாந்தரத்தில் பெயர் தெரியாத
பறவை ஒன்று நிறம் தொலைத்த பூவுடன்
நடத்திக் கொண்டிருந்த உரையாடலில்
நிரம்பி கொண்டிருந்தது அந்த வனம் ..
எந்த மொழி குடுவையிலும் அடங்க மறுத்து
ஒரு காட்டாறாக திமிறியது அது ....
மிடறு மிடறாக தாகம் தணிந்த பூவின்
பக்கத்தில் இறகு உதிர்த்த பறவை
வானத்தின் நீள அகலங்களில்
உடன் பறந்து வந்த மேகம் பற்றி
கதைகதையாய் சொல்லியது ......
மண்ணில் மறைந்திருக்கும் வேர்
எப்போதாவது கண்ணில் தென்பட்ட
அபூர்வ தருணங்களை சிலிர்ப்புடன்
சொல்லி கண்மூடி கொண்டது அந்த பூ ...
அந்த காடு இருவரின் உரையாடலில்
மொழி மறந்து கிடந்தது இரை விழுங்கிய
ஒரு மலைப்பாம்பை போல ...
பறவைக்கு ஒரு செல்ல பெயரை
தேட ஆரம்பித்தது அந்த பூ முடிவில் ...
எல்லா உரையாடலும் ஆவியானபிறகு
பூவை பறித்து கொண்டு
பறக்க ஆரம்பித்தது பறவை ....
இப்போது பறவைக்கும் சேர்த்து பூவே
பேச ஆரம்பிக்கவேண்டும் ...
- நாகா

No comments:

neelam enbathu song