Tuesday, May 29, 2018

15 -01-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 216
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மருத நிலத்தில் இருந்து
மேய ஆரம்பித்தது என் ஆநிரைகள் ...
மேய்ச்சலை மறந்திருந்த பொதி சுமக்கும் வேளை
அசைபோடஆரம்பித்தது என்னை போல் அதுவும் ...
தாடி வளர்த்த ஆட்டுக்கிடாவும்
கொம்பு முளைத்த காங்கேயமும்
தொழுவங்கள் மறந்து என்னைப்போல்
திசைக்கொன்றாய் அலைமோதியது ...
மேய்ப்பனைத்தேடும் நிலங்களில்
நெய்தலை விதைத்திருந்தது கோடை ..
கரம்புக்காடாக மாறிய பொட்டலில்
முளைக்க ஆரம்பித்தது
குழலில் இருந்து விலகியிருந்த மூங்கில் ..
மூக்கணாங்கயிறு பூட்டிய நுகத்தடிகளில்
வாலால் விசிறிக்கொண்டிருந்தன
எங்கள் வீட்டு செல்ல பசுக்கள்...
-நாகா
16 -01-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 217
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முன்வாசல் வழியாக உள் நுழைகிறது
ஒரு செல்ல பூனையாய் காதல்...
தோட்டம் கடந்து வந்த அதன் உடலெங்கும்
ஒட்டிக்கிடந்தது பூக்களின் வாசனை...
நேற்றைய பனித்துளியை சுமந்துவந்த அது
முற்றம் எங்கும் கொட்டிப் போகிறது ஒரு மேகத்தை போல ...
உள்ளங்கை தொட்டு மெல்ல
என்னை ஏந்திக்கொண்ட அதன் கதகதப்பில்
வெளுக்க ஆரம்பிக்கிறது என் ஆகாயம் ...
அதன் கால்களை கட்டிக்கொண்டு
வளைய வருகிறேன் ஒரு சிறுவெயிலைப்போல நான்...
பூனைக்கு இன்று பிறந்த நாள்
காதல் பிறந்திருக்கிறது என்கிறேன்
அதன் கண்களில் தெரியும் என் பிம்பத்தில்
அசடுவழிகிறது பூங்கொத்துகளுடன்
அணைத்துக்கொள்ளும் அதன் நேசம் ..
-நாகா
17 -01-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 218
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
வீசி செல்கிறது ஆகாயம்
நிலவின் துணுக்குகளில் சிதறுகிறது அறை...
சாளரம் எங்கும் ததும்பும் பௌர்ணமி
நனைத்து போகும் நினைவில்
துவட்டிச்செல்கிறாள் செல்லமாக...
ஈர கூந்தலில் சொட்டுச்சொட்டாய்
வரைகிறது தூரிகையில்லாமல் காதல்...
எனக்காக விழிக்கும் அவள்
தனக்காக எழுப்புகிறாள் என்னை...
போர்வைக்குள் இருந்து உதறி எழுகிறது
ஒரு சிறு மேகமென கவிதை ...
ஒன்றாக பறக்க ஆகாயம் தேடும்
அவள் சிறகில் உருவாகிறது எனக்கான கூடு..
என் தனிமை பயணத்தில் துணையாக
தொடர்கிறது அவள் அன்பு ...
உதடு திறக்க வார்த்தைகளாக அவள்
இதயம் திறக்கிறாள் துடிப்பாக நான் ..
அந்த சிறு வீட்டுக்குள் இருந்து
வானம் பார்க்கிறோம் ...
ஒரு நட்சத்திரமாக எங்களை
கவனித்து கொண்டிருந்தது அந்த பூமி ...
- நாகா
18 -01-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 219
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தரையிறங்கும் ஒரு பறவையை போல
காற்றில் மிதக்கிறேன் அவளுடன் ..
மேக கிளையில் அமர்ந்து போகும்
அந்த நதியில் நனைகிறது எங்கள் சிறகு ...
ஈரம் உலர்த்தும் கந்தர்வ நொடியில்
குளிர் காய்கிறது எங்கள் தனிமை ...
வெயில் சுமக்கும் பகலில்
ஒற்றை துளியில் ஆவியாகிறது நேசம்...
பயணங்களின் தொலைவை தீமானிக்கும்
திசைகளில் தொலைகிறோம் ஆனந்தமாக..
ஒரு செல்ல இடைவெளியில்
கொத்திக்கொன்டு பறக்கும் அவளிடமிருந்து
விடுபடாத என்காதல் இறையாகிறது
புசிக்க தன்னை இரையாய் கொடுத்த படி ....
பறவையாய் நான் மாறிக்கொண்டிருக்கிறேன்
ஆகாயமாய் அவள் வேர்விடத்தொடங்குகிறாள் ..
-நாகா

21 -01-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 220
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கத்தரிச்செடியில் பூ பூத்ததில்
சிலாகிக்கிறது என் காலை பொழுது ...
உள்ளங்கை தொட்டு தந்த விதை
முளைக்க ஆரம்பித்தது அன்றைய தோட்டம் ...
மொட்டுவிட்டிருந்த முல்லைக்கொடியுடன்
உள் நுழைவாள் ஒரு தட்டானாக அவள் ...
ஜன்னல் கம்பிக்கு வெளியே
தலைநீட்ட ஆரம்பிக்கும் பிரியம் ...
மேயாத தோட்டத்தில்
வெறுமனே கிடந்தது கம்பி வேலிகள்...
மீன் தொட்டியில் மூழ்கி கிடந்தது
செல்லுபடியான காலம்
காலணா அரையணா நாணயங்களாக ...
பூச்சி அரித்த கத்தரிச்செடியும்
ஆடு மேய்ந்த முல்லைக்கொடியுமாக
காற்றில் அசைகின்றன காதலும் இன்ன பிறவும்…..
- நாகா
22 -01-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 221
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முக நூலில் பார்க்க முடிகிறது
பழைய நண்பர்களை சிரித்த முகங்களுடன் ...
சுயமிகளில் உறைந்த புன்னகை
தேடி எடுக்க வேண்டியிருந்தது நேரில் சந்தித்த போது ...
இருந்துவிடலாம் போலிருக்கிறது
இன்ஸ்ட்டாகிராமிலும் டுவிட்டரிலும்....
முகம் பார்த்து பேசும் தோழமைகளை
அலைபேசியில் தேடி கண்டடைகிறது நட்பு ...
நொறுங்குகிறது கண்ணாடி இதயம்
வார்த்தை கல் பட்டு நிதானமாக ..
வலைத்தளங்களில் சிக்கிக்கொள்கின்றன
துருத்திக் கொண்டு திரியும் வார்த்தைகள்...
சொல் கொண்டு வீழ்த்தும் யுத்தத்தில்
நிராயுதபாணியாக நிற்கிறது மௌனம் ...
- நாகா
24 -01-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 222
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முகம் தொலைக்கும் பிரியத்தில்
வாங்க ஆரம்பிக்கிறேன் முகமூடிகளை ...
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ...
பொருந்தாத முகங்களைவிட
பொருந்திக்கொள்ளும் முகமூடிகள் வரவேற்புக்குரியவை ...
நேற்றைய முகத்தை சிலாகிக்கும் நிஜங்களுக்கு
இன்றைய முகமூடிகள் கொஞ்சம் ஆறுதல்...
அகத்தை வெளிப்படுத்தும் அதன் கருணை
சுயத்தின் மீது பூசுகிறது சுண்ணாம்பு ...
வன்மத்தை மறைத்து எப்போதும்
புன்னகையுடன் திரியும் அதன் வீதியில்
கேட்க முடிவதில்லை நிஜ முகங்களின் அழுகையை...
உறைந்திருக்கும் ஒப்பனை முகங்களில்
முகமூடிகளின் நிழல் தங்கிவிடுகிறது நிரந்தரமாய் ...
- நாகா