Tuesday, September 4, 2018

14-05-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 80 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
14-05-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 80
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கோலங்களால் நிரம்பியிருந்தது
எங்கள் வாசல் ...
வண்ணப்பொடிகளால் சிறைப்பட்ட
வாழ்வின் முற்று புள்ளிகள் அதில்
கண்சிமிட்டுவதாக தெரியும் எனக்கு ...
கோலங்களில் மிதிப்பட்ட
சைக்கிளின் முன் சக்கரம் போல
அடிக்கடி கலைந்து விடும் அதன் இருப்பில்
கழிவிரக்கம் பிறக்கும் எனக்கு ..
மார்கழி மாத காலை நேரங்களை
ஞாபகப்படுத்தும் கோலங்களில்
ஈரம் சொட்டும் கூந்தலுடன்
அவளும் அவளுமான அவர்களின் கோலங்களில்
நானும் நானுமான எங்களின் கனவுகள்
கோலமாகிக் கொண்டிருக்கும் ...
வெறுமனே இருக்கும் வாசல்களில்
வந்துவிழும் தெருவிளக்கின் வெளிச்சம்
ரங்கோலியை வரைந்து செல்லும் ....
கோலங்களை பத்திரப்படுத்தும்
வாசல்களில் இருந்துதான்
தூக்கி வீசப்படுகின்றன பூசணி பூக்கள்...
குனிந்து கோலமிடும் முத்துலட்சுமி அக்கா
ஒரு மழைநாளில் கூட்டி பெருக்கித்தான்
கோலமிட்டுப்போகிறாள் குடைபிடித்தபடி....
பாதி நனைந்து மீதி நனையாத அவளின் சொப்பனங்களில்
புள்ளி வைத்து போகிறது
கோலங்களில் மறைந்திருக்கும்
ஆதி கிழவி ஒருத்தியின் நடுங்கும் விரல்கள் ...
- நாகா

No comments:

neelam enbathu song