Tuesday, September 4, 2018

11-08-2017 சனிக்கிழமை ஒற்றையடி பாதை : 9 தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...

RJ Naga
11-08-2017
சனிக்கிழமை
ஒற்றையடி பாதை : 9
தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...
மயிலிறகு வச்சிருந்த
கணக்கு நோட்டு புத்தகத்தை
ஒட்டடை அடிக்கையில
பரண்மேல கண்டெடுத்தேன் ..
ஆறாம் வகுப்பு
ஆ பிரிவு படித்தபோது
ஒரு மத்தியான மழைநேரம்
பச்சை குத்தி போகக்கண்டேன் ...
நேத்திக்கு முன்தினம்
நடந்ததா இருந்தாலும்
டூரிங் டாக்கீஸ்ல பார்த்த
படம் போல ஓடுது ...
ஒத்த மயிலிறகு
கெஞ்சிக்கேட்டும்
பிஞ்சு விரலால
பிச்சி தரல பயபுள்ள ....
திருட்டு தனமாத்தான்
பிச்சி எடுத்துக்கிட்டேன்
களவு செஞ்சதை நான்
மறைக்க கத்துக்கிட்டேன் ...
மாமா வீட்டில்
விசில் திருடினேன்
பெரியப்பா வீட்டுல
ஹீரோ பேனா திருடினேன் ..
திருட்டுத்தனமா
பறிச்சுவந்த பட்டுரோசா
எங்கவீட்டுல பூத்ததுன்னு
நம்புற மாதிரி பொய் சொன்னேன் ...
காது பிடிச்சு திருகல
தோப்புக்கரணம்
போடச்சொல்லி அதட்டல
எனக்குள்ள குற்றவாளியை
சுட்டிக்காட்ட ஆளில்ல..
மெல்ல சிரிச்சுக்குவேன்
மத்தவங்கள நெனச்சு
லேசான ரசிச்சுக்குவேன் ...
சின்ன பதுமையாட்டம்
சிறகை விரிச்சுக்குவேன் ..
இல்லாத ஒண்ண
யாராச்சும் வெச்சிருந்தா
என்ன போல யாரோ
களவாடி போகலாம் ....
நேசத்தை களவாடி
போனவங்களுக்கு தான் தெரியும்
இருந்தும் இல்லாமல்
இருக்கும் அவஸ்தை ...
- நாகா.

No comments:

neelam enbathu song