Tuesday, September 4, 2018

12-04-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 36 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
12-04-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 36
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து
வந்தமர்கிறது அந்த பறவை ..
அதன் சூடான கதகதப்பில்
அமர்ந்து போகும் வண்ணத்துப்பூச்சி
உதிர்ந்த சிறகில் ஏதோ பேசி போகலாம் ...
பறவைக்கும் எனக்குமான உரையாடல்
அடிக்கடி தடைபடுகிற போதெல்லாம்
இட்டு நிரப்புகிறது அதன் வெற்றிடம் ...
ஜன்னல் கம்பிகளில் பதிந்திருக்கும்
கைரேகையை வாசிக்கும்
காற்றின் ஈரக்கரங்கள்
தீட்டி போகிறது தனிமை ஓவியத்தை...
உலுக்கி பறித்திருந்தாலும்
ஒரு சில பழங்கள் இனிக்கவே செய்கிறது
கிளை விரிக்கும் மரத்தின் நிழலில்
விழாமல் இருந்தது அதன் இருப்பிடம் .....
தானியம் கொத்தும் பறவை
சேகரிக்க தொடங்குகிறது
சிதறி விழும் பருக்கைகளில் இருந்து ஒரு ஆகாயம் ...
கிளைகளில் அமர்ந்து
வேர்களில் கூடு கட்டும்
அதன் இருப்பிடம்
என்னை தேட தொடங்கி இருக்கலாம் ...
நேற்றுக்கும் நேற்று மரம் விழுந்த சோகத்தில்
கூடொன்றை பெருக்கி கொண்டிருந்ததை
வேடிக்கை பார்த்தப்படி
வெகுநேரம் இருந்தது அந்த பறவை
இப்போதும் அதன்
உதிர்ந்த சிறகொன்றை
வைத்திருக்கிறேன் பத்திரமாய் ...
வாசல் வரலாம் அந்த பறவை
என்னைப்போல் அதனிடமும்
என்னை ஞாபகப்படுத்தும் ஏதோ ஒன்று இருக்கலாம் .....
- நாகா

No comments:

neelam enbathu song