Tuesday, September 4, 2018

13-06-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 79 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
13-06-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 79
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
நெடுநேரம் அலைந்து கிடைக்காத
ஜில்லு குட்டியை தேடி
முதல் முறையாக அப்போதுதான்
உள் நுழைகிறேன் அந்த இடத்திற்கு ...
தலைக்கு மேல் பறந்த கழுகு
தரையில் எதையோ கொத்தி கொண்டிருந்தது ..
தென்னைமரத்தில் முடிந்திருந்த பொந்தில்
கிளி ஒன்று வசிக்க ஆரம்பித்திருந்தது
மரங்கொத்தியின் குத்து படலத்தில்
பக்கத்தில் இருந்த வேப்பமரம் தற்போது இலக்காக ..
உச்சி வெயில் யாரும் இல்லாத
எல்லோரும் இருக்கும் அந்த இடம்
எனக்குள் தகிக்க தொடங்கியது ...
இங்குதான் அப்பத்தாவை ,
மீசைக்கார மாயாண்டி கிழவரை
இன்னும் ஞாபகத்தில் இருந்தவர்கள் எல்லாம்
மண்ணுக்குள் புதைந்தும்
பக்கத்தில் புகைந்தும்....
பயம் கண்ணைப்பொத்தி
கண்ணாமூச்சி ஆட வைக்க
ஜில்லு குட்டியை தேடி ஓட ஆரம்பித்தேன் ...
இடுகாட்டின் அச்சம் துளிகூட இல்லாமல்
பறந்து போன ஒரு தட்டானை
பிடிக்க ஆரம்பித்தது ரெட்டைஜடை வயசு ..
மயானம் நுழைந்து வாசல் வந்த என்னை
மிரட்சியுடன் பார்த்தாள் அம்மா ...
தகன மேடையை பார்த்து வந்த
கண்களுக்கு அவள் கதவிடுக்கில் மாட்டிய
பல்லியாய் தெரிந்ததில் ஆச்சர்யமில்லை ..
நகரத்தில் இன்று மின்மயானங்களில்
வை-ஃபையுடன் ஜில்லுக்குட்டியை
தேடிக்கொண்டிருக்கிறேன்
மே என்கிற சத்தத்தில்
மேய்ந்து கொண்டிருக்கலாம் அது எனக்குள் ...
- நாகா

No comments:

neelam enbathu song