Tuesday, September 4, 2018

10-05-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 57 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....



RJ Naga
10-05-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 57
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
கல்யாண பந்தலாகட்டும்
கட்சி மாநாட்டு பந்தலாகட்டும்
அப்பாவுக்கு எல்லாம் அத்துப்படி...
பந்தல்காரர் என்றழைக்கும் போது
அவரிடம் கர்வம் எட்டிபார்ப்பதை
உணரமுடியும் என்னால்...
கோவில் திருவிழாக்களில்
சமபந்தி நடந்த போது கூட
கீத்து வேய்ந்த பந்தலுக்கு கீழே
நிழல் மிதித்து ஓடும் அவர் பாதங்கள்
ஏதோ சொல்லிக் கொண்டே செல்லும் ...
பித்த வெடிப்புகளால்
பிளவுபட்ட பாதங்களில்
உரசி செல்லும் புல்லின் பனித்துளி
எப்போதாவும் சிக்கிக்கொள்ளும் சிறு கற்களையும்
ஒன்றாகத்தான் பார்த்திருக்கிறார்...
கடைசி வரை சைக்கிளில் தான்
அவர் காலமும் உருண்டது ..
கருத்த மீசை நரைத்ததும்
ஒரு முறை பந்தல் தீப்பற்றியதும்
ஆக சிறந்த தருணங்களாக
சிலாகித்து சொல்வார்...
ஊரில் எல்லோருக்கும் பந்தல் போடும்
அப்பாவுக்காகவும் வீட்டில்
பந்தல் போட வேண்டி இருந்தது ..
அந்த மத்திய நேரம்
தென்னங்கீற்று பந்தலில்
உள் நுழைந்து அப்பாவின் முகம் தொட்டிருந்தது
சிறு மாலை வெயிலொன்று
யாரும் கவனிக்காத தருணத்தில் ...
இப்போது மொட்டைமாடியில்
சாமியானா பந்தலுக்கு கீழே
நடந்து கொண்டிருக்கிறது விருந்து...
அச்சப்பட்ட வெயிலொன்று
கை கழுவிக்கொண்டிருந்தது
எல்லோருக்கும் தெரிந்து படிக்கட்டுக்கு கீழே....
- நாகா

No comments:

neelam enbathu song