Tuesday, September 4, 2018

06-03-2017 திங்கள் ஒற்றையடி பாதை : 5 தமிழ் 89.4 பண்பலை வானவில்- லில் இன்று ஒலித்த கவிதையின் வரிவடிவம் ...


RJ Naga
06-03-2017
திங்கள்
ஒற்றையடி பாதை : 5
தமிழ் 89.4 பண்பலை வானவில்- லில் இன்று ஒலித்த கவிதையின் வரிவடிவம் ...
ஆத்துல வெள்ளம் வந்தா
அடிமனசு சில்லிடும்
ஆத்தா உன் நெனப்புல தான்
சாமியையே கும்பிடும் ...
நிழலாக நீயிருந்த
ராத்திரியில் தொலைச்சதென்ன
நிலவாக நீயிருந்த
நிழல் விழாம போனதென்ன ...
புளியங்கா புளிக்கறது
அது ஒண்ணும் குத்தம் இல்ல
வேப்பங்கா இனிக்கறத
கேட்க ஒரு நாதியில்ல...
பத்தாயம் நிரம்பாம
பாதகத்தி உன்னைத்தேடும்
பஞ்சார கோழிகூட
பட்டினியா கண்ண மூடும் ...
கட்ட வண்டி கடந்து போன
நதியில் இப்போ தண்ணி இல்ல
அடிமாட்டுக்கு போனதால
மூக்கணாங்கயிருக்கு வேலையில்லை ..
சிறுக்கி மக உன் நெனப்பு
செதறு தேங்கா ஆகிடுச்சு
சூடம் போல காத்துலதான்
கரைஞ்சுதானே போயிடுச்சு ..
நேத்திருந்த மீனெல்லாம்
கருவாடா ஆனதென்ன
காத்திருந்த கொக்கெல்லாம்
ஏமாந்து போனதென்ன ..
ஒரு வாட்டி வந்துவிடு
விட்டதெல்லாம் செஞ்சிடுறேன்
பட்ட கடனுக்கு நான்
என் உசுர தந்திடுறேன் ...
நீ போன பாதையெல்லாம்
நெருஞ்சியா பூத்திருக்கு
தொட்டி செடியெல்லாம்
உன் திசையை பார்த்திருக்கு ...
வாசல் கோலத்துல
புள்ளியாக நீ இருப்ப ...
பூசணி பூவாட்டம்
நாள் கணக்கா நீ சிரிப்ப...
ஆத்தா உன் சீலையை நான்
கொஞ்ச நேரம் போர்த்திக்கறேன்
கருவாகி உனக்குள்ள
கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்….
- நாகா.

No comments:

neelam enbathu song