Monday, September 3, 2018

28-06-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 89 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
28-06-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 89
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
சந்தையில் காணமல் போன
கடைக்குட்டி பாலுவை
இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறார் சித்தப்பா...
கருப்பு வெள்ளை புகைப்படம் காட்டி
கண்ணீர் சிந்தும் அலமு சித்திக்கு
தேர் திருவிழா மீது அத்தனை வெறுப்பு ...
ஒரு ஐப்பசி மழையில் அடித்து செல்லப்பட்ட
மீனுக்குட்டிக்கு பிடிக்குமே என்று
ஒவ்வொரு மழைநாளிலும்
வட்லப்பதுடன் காத்திருக்கும் தாமிரபரணி பெரியாத்தா..
ஆத்திரத்தில் வீட்டை விட்டு எங்கு போனாளோ
அம்மாவை தேடி காத்திருக்கும்
எதிர்வீட்டு ஏகாம்பரத்தின் இளைய மகன் ...
பேரன்களுடன் பேத்தியுடன் இருக்கமுடியாமல்
தலைமறைவாகி இருப்பரோ மாயாண்டி கிழவர் ..
அடிக்கடி சீண்டி வம்புக்கிழுக்கும்
ஆறுமுகசாமி பள்ளிசுற்றுலாவில்
காணாமல் போனதில் இருந்து
ஏக்கம் சுமக்கும் வகுப்பறையோடு நான் ..
தொலைந்தவர்களை தொலையாதவர்கள்
ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் ..
தொலைந்தவர்கள் தேடுவதேயில்லை
தொலைத்தவர்களை ஒருபோதும் ...
மொட்டைமாடியில் ஆண்டானாவில்
அமர்ந்து போகும் காகம்
கேட்டிருக்க வாய்ப்பில்லை
"காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பை "
- நாகா

No comments:

neelam enbathu song