Tuesday, September 4, 2018

18-06-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 82 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
18-06-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 82
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அப்பாவிற்கு எப்போதும் ஒரு பொருளை
சரியான இடத்தில் வைக்க தெரியாது ...
தொலைத்த இடத்தை விட்டு
இல்லாத இடத்தில் தேடுவதே
பெரும்பாலான நேரம் கரைந்து போகும் ...
அப்பா தோட்டத்தில் பூக்களோடு பேசுவார்
வண்ணத்து பூச்சியுடன் கண்ணாமூச்சி ஆடுவார்...
கண்ணாடி தொட்டிக்குள் நீந்தும்
தங்க மீன்களோடு நனையாமல் நீந்துவார்...
அப்பா சுமக்க முடியாத பூ மூட்டையுடன்
வலம் வருவதாகவே தோன்றும் எனக்கு ...
ஒவ்வொரு பூவாக அவர் விநியோகித்தும்
வெற்றிடத்தை நிரப்பி கொண்டிருக்கும் தோட்டம் ...
புன்னகை மட்டுமே அதிகபட்ச உரையாடலை
எடுத்துக் கொள்ளும் அவரிடம்
தென்பட்டதே இல்லை புன்னகை...
வாழத்தெரியாதவராகவே
அறியப்பட்டுவிட்டார் அவர்...
வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்ன
கேள்விகளால் அவர் காயப்பட்டதாக தெரியவில்லை...
எல்லாம் அறிந்து தான் இருக்கிறார் அப்பா
அறியாத மனிதர்கள் நிரம்பிய உலகில் …
அவரின் அறியாமை
பனித்துளி ஏந்தும் பசும்புல்லாக
எனக்குள் ஆவியாகி கொண்டிருக்கிறது
இப்போது நானும் அப்பாவாகிறேன்...
- நாகா

No comments:

neelam enbathu song