Tuesday, September 4, 2018

28-03-2017 செவ்வாய் ஒற்றையடி பாதை: 24 தமிழ் 89.4 பண்பலை நமது " வானவில் " நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
28-03-2017
செவ்வாய்
ஒற்றையடி பாதை: 24
தமிழ் 89.4 பண்பலை நமது " வானவில் " நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
துவைத்த துணி காயப்போடும்
நைலான் கயிறு அது....
ஈரம் சொட்ட சொட்ட
காயும் என் பள்ளிக்கூடசீருடை
அப்பாவின் வேட்டி
அம்மாவோட புடவை...
உலர்வதற்குள் உடுத்திக்கொள்ளும்
அவசரம் எங்கிருந்து வருமோ தெரியல ...
அது நீல கலரா இருக்கும்
முனையில் மெழுவர்த்தி கொளுத்தி
பத்தவச்சி அப்பாதான் இழுத்து கட்டினார்...
ஒரு நாள் எனக்கு
ஸ்கிப்பிங் ஆட உதவும்னு நெனச்சேன் ...
ரொம்ப பிடிவாதமா காத்திருந்தும்
கிடைக்காம போனதில் வருத்தம் தான் ..
ஒருவேளை ஊஞ்சல் ஆட கேட்டிருந்தா
கொடுத்திருக்கலாம் அப்பா...
என்னவோ துணி காயப்போட்ட கயிறில்
எறும்புகள் ஊர்ந்து பார்த்திருக்கிறேன்
கொடுக்காப்புளி மரத்துக்கு கீழ
கட்டி வச்சிருந்த கொடிக்கயிற்றில்
ரெண்டொருதரம் பட்டாம்பூச்சி கூட
உட்கார்ந்து போய் இருக்கு ..
மழை நேரத்தில
வீட்டுக்குள்ள கட்டிவச்சது தான் தப்பாய் போச்சு ...
அப்பா திட்டினது தப்பா
அம்மா அவசரப்பட்டது தப்பா தெரியல ..
அம்மாவின் கழுத்தை கட்டிக்கிற எனக்கு
போட்டியா அது வரும்னு
கனாக்கூட கண்டதில்லை ...
நீல கொடி கயிறில் துணி தொங்கி பார்த்த கண்கள்
அம்மா தொங்கி பார்த்தபோதுதான்
மிரண்டு போனது முதல்தடவை ...
ஒரு துளி அம்மாவின் கழுத்து ரத்தம்
கொடி கயிறில் இன்னும் ஈரம் காயாமல் ...
இப்போல்லாம் துணிகாயப்போட
கயிறுகளை தேடறதில்லை நான் ..
- நாகா

No comments:

neelam enbathu song