கடைசியாக
தன் அப்பாவின்சட்ட்டைப்பையில்
எடுத்துக்கொண்ட பேனாவில்
கிறுக்கலை தொடங்கியிருந்தது
அந்த குழந்தை!
விடைப்பெற்று
கீழிறங்கிய நேரம்
நீ ஜன்னல் வழியே
தலைநீட்டி ஏதோ பேசினாய்....
புரிந்தும் புரியாமலும்
தலையாட்டிய என்னை
வினோதமாக
பார்த்திருக்கவேண்டும்
அந்த தாவணிப்பெண்...!
முதல் பாதி
முடிந்த நிலையில்
வேண்டாவெறுப்பாய்
கடாசிவிட்டு
வண்டி ஏறினான்
அந்த ஜீன்ஸ் இளைஞன் !
பரோட்டாக்கடையில்
இன்னும்
அதிவேகதாளகதியில்
கரண்டிகள்
மோதிக்கொண்டிருந்தன
நீயும்
காதுகளில்
மாட்டிக்கொண்டிருக்கும்
ஹியர்போன் தாண்டி
கேட்டிருக்க வாய்ப்பிருக்கலாம்....
ஊருக்கு போனதும்
கடிதம் போடு
என்பதான
சம்பிரதாய வார்த்தையில்
ராத்திரி உன்னை
ஒரு சின்ன மின்மினியாய்
கிளப்பிக்கொண்டு
இடம்பெயர்ந்தது
செல்போன் சிணுங்கலாய்!
அடுத்த முறை
வரும்போது
ராத்திரிகளில் பயணிப்பதை
தவிர்க்க சொல்லவேண்டும்
ஒரு அடர்ந்த இருட்டுக்குள்
உன்னை கொடுத்துவிட்டு
தனியாக நடக்கிறேன்
மேன்ஷன் நோக்கி!