Friday, December 12, 2008

அறைகளின் வெளியே...!


வீதியில் இருந்து
அன்னியப்பட்டிருந்தது
அந்த அறை நம்மை இணைத்த
நம் வீட்டைப்போல்!

பழகிய சாலை
பார்த்த முகங்கள்
அடையாளங்களை வைத்தே
அடைந்துவிடுகிறோம் சுலபமாய்....!

ஆணியில் தொங்கும்
சட்டைப்பை உள்ளிருக்கும்
சில்லரைப்போல்
சும்மா இருந்துவிடுகிறோம்
அவசியமில்லாத நேரங்களில்!

பந்துப்பட்டு
உடையாத கண்ணாடி ஜன்னல்
அழைப்புமணியோ கதவுத்தட்டலோ
கேட்காத அறை
எறும்புகள் பார்க்காத
விஷேச தின கோலம்
குழந்தைகள் கிறுக்காத சுவர்கள்
-எதோ ஒன்றில்
உட்கார்ந்திருக்கும்
நம் தாம்பத்தியம்!

மின்விசிறியின்
புழுக்கம் தாளாமல்
கதவுக்கு வெளியே காத்திருக்கலாம்
சில கவிதைகளும்
சில கனவுகளும்
குடை இல்லாமல்
மழையில் நனைந்தபடி!

Thursday, December 11, 2008

நிறவொவ்வாமை...!


துடைக்க மறந்து
வெளிறிப்போன
பவுடர்பூச்சு!

நாணய அளவுகளைத் தாண்டும்
நெற்றி கன்னம்
நிறைத்தபோட்டு
நிற வொவ்வாமையில்!

பின்னிய கூந்தல்
அகல்விளக்காய்....
தனித்திருக்கும் கார்த்திகையில்!

கூரை ஏறிய
பூசணிக்கொடியில்
தென்பட்டு மறையும்
செங்கல் சூளை.....

அப்பாவின் சட்டை
அம்மாவின் புடவை
மாறிய வடிவங்களில்....!

அரிக்கேன் விளக்காய்
செம்மண் சாலைகளில்
எப்போதாவது நிற்கும் பேருந்துகள்!

அமாவாசை பகல்பொழுதுகளில்
மின்மினி பொறுக்கும்
மரப்பாச்சி பொம்மைகள்!

எத்தனை எறும்புகள்
செத்ததோ
யாருக்குத் தெரியும்
சீனி டப்பாவின் பக்கத்தில்!


Saturday, December 6, 2008

உயரம்-2


சிறுவயதில்
மொட்டைமாடி
கலங்கரை விளக்கக்கோபுரம்
ராட்சத ராட்டினம்.....

உயங்களின் விளிம்பு
தொடுகிரபோதெல்லாம்
பயத்தில் அலறிவிடுவேனாம்..
-அம்மாச் சொல்ல கேள்வி!

மனைவி சொல்கிறாள்
நேரம் கிடைக்கிறபோதெல்லாம்-
மற்றவர்கள் அலறுவதை
கீழிருந்து ரசித்தபடியே
என் உயரத்தை
உயர்திக்கொண்டிருகிறேனாம்......


யாருக்குத்தெரியும்
குறுக்கெழுத்துப் போட்டிக்கு
இடமும் வலமும் நிரப்பி விட்டால்
மேலிருந்து கீழ் சுலபம் என்று!

Friday, December 5, 2008

உயரங்கள்...!

உயந்த இடங்களில் கூடுக்கட்டவே
பிரியம்காட்டுகின்றன புறாக்கள்
பிள்ளைகளிடமிருந்து
பலகாரங்களை பத்திரபடுத்தும
அந்தக்கால அம்மாக்களைப்போல...!

மலையுச்சியை தேடியே பயணிக்கின்றன
தோற்றக் காதல்கள்...
கைகெட்டும் தூரத்தில்
புத்தகங்கள் தேடும்
படைப்பாளி அப்பாக்களைபோல்!

கம்பங்களின் உயரத்தில்தான்
கட்டப்படுகின்றன கொடிகள்
அறுந்துவிடும் நூல்பயத்தில்
பறந்துகொண்டிருக்கும் காத்தாடிகளைபோல்!

உயங்களின் நிழல் மிதித்தே
நடைபழகுகின்றன வாழ்க்கை
எப்போதும் வான் பார்க்க ஆசைப்படும்
விதைநெல்போல்....!

எழுதுவதற்கு முன்பும்
எழுதியதற்க்குபின்பும்
உயரமான இடத்தில் இருந்து இறங்கிவரவே
பிரியம் காட்ட செய்கின்றன இந்த கவிதை!

Thursday, December 4, 2008

செதில்களால் சுவாசித்தபடி....!



ஒரு பின்மாலைப் பொழுதில்
சாளரம் திறந்து
உள்நுழைந்தது அது!

நெரிசல் சாலையில்
பயணித்த அதன் விலாஎலும்புகள்
போக்குவரத்துக்காவளர்களின்
சிநேக புன்னகைப்போல்
நிலைக்குத்திப்போய்....

தன் திசைகளின் கதவுகளை
யாரோ பூட்டிச்சென்றதாய்
வேர்த்துப்போய்
சொல்லிக்கொண்டது!

கள்ளச்சாவி உபயத்தால்
திறக்க எத்தனித்த
என் இயலாமையின் இடைவெளியில்
அது துள்ளிக்குதிக்க
கைக்குட்டைநீட்டிய என்னை
பரிதாபமாய் பார்த்தது!

முழுபலத்தையும் சேர்த்து அழுத்த
என் வீட்டு
மீன்த்தொட்டிக்குள் நுழைந்து
தண்ணீர் குடித்து கரையேறியது....

கடைசியாய்
என்னை மீனாக மாற்றிப்போனதை
சொல்லிப்போயிருக்கலாம்!

neelam enbathu song