Friday, March 14, 2008

அவ்வளவு தான் முடிந்தது.....


கண்ணீர் வராமல்
வெங்காயம் அறிகிறாய்.....
காம்பஸ் தேவையில்லை உனக்கு
வட்டமாய் தோசைச்சுட!
பதினாறு கஜத்தையும்
பாந்தமாய் சுற்றிக் கொள்கிறாய்....

நடுவோ, கோணலோ
வகிடெடுக்கா விட்டாலும்
வாய்த்து விடுகிறது அழகாய் பின்னிக்கொள்ள!

பம்புசெட்டோ மணியக்காரர் கிணறோ
குளிக்க முடிகிறது பயமில்லாமல்....
இடித்து கட்டிய வீட்டிற்குள்
விளக்கேற்றவும்
புள்ளிவைக்கா விட்டாலும்
வாசலில் கோலமிடவும்
பழகி இருக்கிறாய்!
மருதாணி அரைக்கும் போதே
சிவக்க துவங்கி விடுகிறது விரல்கள்......
சோகமாய் சொல்லிக்கொள்கிறாய்
"வந்ததாக ஞாபகம் இல்லை
அந்த மூன்று நாள் வலி
மீசை மழிக்கிற போது மட்டும்
தொட்டுச் செல்கிறதே உதிரம்"

ஷேவிங் கிரீமாய் நுரைக்கிறது
ரணமான உன் வார்த்தை........

No comments:

neelam enbathu song