Saturday, August 30, 2008

பயத்துடன் தான் புணரமுடிகிறது ........


ஒரு கோப்பையில்
உட்காரும் ஈயாக நானும்
ஆவிப்பறக்கும் தேநீராக நீயுமாக
பேசிக்கொள்கிறோம்....


எதோ ஒரு உதடு
தொட்டுவிடும் அவசரம்
முன்பைவிட கூடுதல் சிரத்தையாய்
விரட்டிவிடும் கையில்
தெரிந்ததில்லை இதுவரை நேசம்.....


எப்போதும் இல்லாத
பயத்துடன் தான்
புணரமுடிகிறது
நம்மையும் தாண்டி வீதியில்
விளையாடிக்கொண்டிருக்கலாம் நம் பால்யம்....


ஈரமண்ணில் கிளம்பிவந்த
மழைக்காலத்தின் கர்ப்பம்
மெல்ல மெல்ல கரைகிற போதுதான்
நீயும் நானும்
உருண்டு திரண்டு மீண்டிருந்தோம்.....


இப்போதெல்லாம்
மழைச் சத்தத்தில்
காதடைக்கும் நான் கதவடைப்பதில்லை.....
மகனுக்கு காகித கப்பல்களை
செய்துத்தந்தபடி மனைவி
எப்போதுமில்லாத குழந்தைத்தனத்துடன்!


Friday, August 29, 2008

எழுத முடிந்தது இவ்வளவுதான்....


ஒருவேளை நீ
வாசிக்காத ஒரு சந்தர்ப்பத்தில்
யாரோ ஒருவரின் வாசிப்பில்
உயிர்ப்பித்திருக்கலாம்
இந்த கவிதை.....!


உனக்காகஎழுதியதை
பிறர் வாசிக்கிற அவஸ்தையில்
நெகிழ்ந்து
மூச்சு வாங்கும் வார்த்தைகளில்
நாணத்தால் சிவந்து போயிருக்காலம்
என் காதல்!


திரும்பிவந்து விட்ட
ஆயிரத்து எட்டாவது கடிதத்தோடு
இதுவும் ஒன்றாகிப்போனத்தில்
வருத்தம் இல்லைஎன்றாலும்
அதையே நான் வாசித்து வாசித்து
பசியாரிக்கொண்டிருக்கிற கொடுமையில்
கல்லெறிந்து போகிறது
உன்னை தொலைத்து நிற்கும்
என் தனிமை....


எந்த
முன்னெச்சரிக்கையும் இல்லாமல்
நீ இடப்போகிற
பின்னூட்டத்தில்தான் இருக்கிறது
இனிமேல் எழுதப்போகிற
எனக்கான உன் படைப்புகள்......


ஆரவாரமில்லாத
கடற்கரை மணல்வெளியில்
இட்டு சென்ற உன் கால்தடங்களை
எதேச்சையாய் அழித்த ஒருவன்
வருந்திக்கொண்டிருக்கிரான்
என்னைப்போல!


ஒருவேளை நீயும்
சில அதிகபடியான கணங்களுடன்
எழுதி வைத்திருக்கலாம்
உனக்கான காதலை
பிறருக்கான பதிவுகளில்!

Tuesday, August 26, 2008

பென்சில்- 2



பென்சில்சுப்பிரமணி
பென்சில் ரகு
பென்சில் வனிதா
பென்சில் ரீட்டா
-இப்படி நண்பர்கள் இருக்கலாம்......


அப்பா வாங்கித்தரும்
புது பென்சிலுக்காக
பென்சில் தொலைக்கும்
மகன்களும் மகள்களும் அதிகம்!


பள்ளிக்கூடங்களில்
தொலைக்கும் பென்சில்கள்
கல்லூரிகளில்
கண்டுப்பிடிக்கபடுகின்றன


குழந்தையாய்
பிறக்கும் பென்சில்
குமரியாய் கண்சிமிட்டலாம் !


பென்சிலும் வாழ்க்கையும்
சற்றேறக்குறைய ஒன்றுதான்.....
ஒன்று வளர வளர தேயும்....
இன்னொன்று எழுத எழுத தேயும்...


பென்சில்களின் உலகில்
கண்ணீர்க் கதைகள் ஏராளம்!


உடைகிறஊக்குகளாகவே
படைக்கப்படுகிற பென்சில்கள்
உடையாத பென்சில்களை
அச்சத்துடன் தான் அணுகுகின்றன.....


பென்சில்-
உயர்தினையாய்
தன்னை சுவீகரித்துக்கொண்டாலும்
பென்சில் மீசைக்காரர்களை
புகைப்படங்களில்
எழுதிச்செல்கிற காலத்தை
எச்சில் தொட்டே அழிக்கின்றனர்
பேனா மையால்
கைநாட்டு இடுபவர்கள்!


பென்சில் குறித்து
எத்தனையோ
சொல்ல இருந்தாலும்
எழுதிக்கொண்டிருப்பதோ பேனாவால்!

Monday, August 25, 2008

பென்சில்.......!


காதில்
செருகி வைத்த பென்சில்
கணக்கெழுதும்
மளிகைக்கடை அண்ணாச்சி
நடராஜ் பென்சிலில்
ஆரம்பித்த நட்பு...

பூப்போட்ட
பென்சிலோடும்
ரப்பர் இணைத்த
வாசனை பென்சிலோடும்
வசதி பரிமாறும்
பாலுவின் பென்சில் ஊக்கில்
குத்துப்படும்
எங்கள் பள்ளிக்கூட மரபெஞ்ச்....

"செவன் ஓ கிளாக்" பிளேடில்
கூர்சீவும் சந்தர்ப்பங்களில்
விரலில்படும்
ரத்த துளிகளில்
அப்பா வாங்கித்தரும்
"காம்ளின்" பென்சில்
சிவப்பாகிபோவதுண்டு!

பென்சில் ஸ்டாண்ட்
வாங்கி
வரிசையாய் அடுக்கி
படம் வரையும்
ஓவிய பாடவேளையில்
அகப்படாமல் போவதுண்டு
வெள்ளை பென்சிலின்
உபயோகம்
பரிதாபமாய்
பென்சில் ஸ்டாண்டில்....

பென்சில்கள்
எப்போதும்
கிறுக்கிக்கொண்டேதான் இருக்கும்
சீவுகிறபோதும்
எழுதுகிறபோதும்.....

ஆனால்
பென்சில்களைவிட
பேனாக்களே
பலருக்கு பிடித்த ஒன்றாகிவிடுவதுண்டு!

நூல்கட்டி
கையெழுத்துப்போட
நூலகத்தில் கட்டிவைத்திருக்கும்
அந்த பென்சிலை
பார்த்தபோதுதான்
புரிந்துகொள்ள வேண்டயுள்ளது

மாட்டுக்கு மட்டுமல்ல
பென்சிலுக்கும்
மூக்கணாங்கயிறு
அவசியம்தான் போல!

Friday, August 22, 2008

ஜன்னல்கள் திறப்பதில்லை!


வாசல் திறந்து
உள் நுழையும்
திமிர்பிடித்த வெயில்!


அதிகப்பிரசங்கியாய்
தலை நீட்டும் நிழல்...


எல்லத்துளிகளிலும்
ஒளித்து
ஓய்ந்துப்போயிருக்கும்
நேற்றைய மழை!


பல்லிடுக்கில் சிக்கிய
பருக்கையை
எடுக்கும் போராட்டத்தில்
சிதறும் ரத்தத்துளி....


மூச்சிரைப்பில்
விளங்காத வாசனை!


உளிச்செதுக்கும்
சத்தத்தில்
கண்மூடிதூங்கும்
சிலை!


எதிர்வீடுஎன்றாலும்
ஜன்னல் திறக்க முடிவதில்லை
"அழைப்புமணி" ஒலிக்காதவரை!

Thursday, August 21, 2008

பச்சை காகம்!


பச்சைக் காகம்
சிவப்பு அலகில்......


"கிளி" என்கிற
என்னை
கிண்டலடிக்கிறாள் மகள்!


அவளின் காகம்
வடைத் திருடுவதில்லையாம்
அதற்க்கு பதிலாக
வடை சுடுகிறதாம்....


வண்ணங்களில்
அடையாளப்படுத்தும்
அவளின் குழந்தைத்தனம்
என் பழைய புகைப்படத்தின்
நிரமிழப்பில் தெரிந்தது!


இது யானைதானே
என்கிற என்னை
திட்டிவிடுவாளோ
என்பதால்
எலி என்பதாக
சொல்கிற என்னை
குட்டவருகிறாள்...


புரிவதேயில்லை
குழந்தைகளின் உலகம்!


Thursday, August 14, 2008

ஆகவே சுதந்திரம்.......



உதிரும்
இலை-


நிலம் தொடும்
நிழல்-


கவிதை
கிறுக்கும்
இறகு-


மேகம்
தொலைத்த
மழைத்துளி-


கயிறு
அறுக்கும்
காளை......


இன்னும்
ஒட்டாமல்
உருண்டுச்செல்லும்
நீர்த்துளி....



பம்பரம் சுழல
அமைதியாய்
சாட்டை!


சுவர் தொட்ட
விதை
சொல்லாமல்
சொல்கிறது
விருட்சம்
சுதந்திரமாய் சுவாசித்தபடி...!


குடைப்பிடிக்காத
நிழல்
எப்போதும்
வேர்த்துப்போனதாய்
சொல்லிக்கொள்வதில்லை......

Monday, August 11, 2008

சுட்டாச்சு சுட்டாச்சு ...............


அம்மாவால்
சுட முடிகிறது
தோசையை அழகாக....


அப்பாவின்
சட்டைப்பையில்
லாவகமாய்
சுட்டுவிடுகிறான் அண்ணன்
தனக்கான சில்லரைகளை......


யாரோ செலவழித்த
மூளையை
தனக்கானதாய்
சொல்லிக்கொண்டு சுட்டு
தந்துவிடமுடிகிறது
எல்லோராலும்
காதல் கவிதைகளை.....


சுடாமல் இருக்கிற
பொழுதுகளை
சுட்டிக்காட்டவும்
சுட வேண்டி இருக்கிறது ....

முதல் முறையாய்
வரலாறு
தங்கம்
கொடுத்து
சுட்டுகொண்டது.....


சுட்டவரெல்லாம்
கேட்டவர் இல்லை!
அபிநவ்
நீ சுடாமல் இருந்திருந்தால்
சும்மா கிடந்திருக்கும்
எங்கள் சமையலறை தோசைக்கல்!!!!!!

சுட்டாச்சு சுட்டாச்சு ...............

அம்மாவால்

சுட முடிகிறது

தோசையை அழகாக....


அப்பாவின்

சட்டைப்பையில்

லாவகமாய்

சுட்டுவிடுகிறான் அண்ணன்

தனக்கான சில்லரைகளை......


யாரோ செலவழித்த

மூளையை

தனக்கானதாய் சொல்லிக்கொண்டு

சுட்டு தந்துவிடமுடிகிறது

காதல் கவிதைகளை எல்லோராலும் .....


சுடாமல் இருக்கிற

பொழுதுகளை சுட்டிக்காட்டவும்

சுட வேண்டி இருக்கிறது ....


முதல் முறையாய்

வரலாறு

தங்கம்
கொடுத்து சுட்டுகொண்டது.....


சுட்டவரெல்லாம்

கேட்டவர் இல்லை!

அபினவ் நீ சுடாமல் இருந்திருந்தால் சும்மா கிடந்திருக்கும் எங்கள் சமையலறை தோசைக்கல்!!!!!!

Saturday, August 9, 2008

நானும் அவரும்!

அவரை

எனக்கு பிடித்திருந்தது
காரணமில்லாமல்
கோபித்து கொள்ளாத
அவரின் பெருந்தன்மையில்
உருவாகியிருக்கலாம் எங்கள் சிநேகம்.....!

கல் நிரப்பி
நீர் குடிக்கும் காகமாய்
தந்திரம் தெரியாத
அவரின் இயல்பின்
இடுப்புக்குக்கீழே
கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறேன்.......

எதற்க்காக என்பதான
எந்த புரிதலிலும்
அவருக்கான இருப்பு
நிலையாகவே இருந்தது என்னிடம்.....
வரும் போகும்போது
என்றில்லாமல்
எப்போதுமே
பிடித்தாய் இருந்திருக்கிறது
அவரின் முரட்டு சுபாவம்......

அந்த பேருந்தில்
அவரின் விசிலுக்கு
அடிபணிந்தது
பேருந்தும் பயணிக்கும் நானும்......
வந்துகொண்டிருக்கிறது
ஜன்னலுக்கு வெளியே
சில்லறை சத்தத்துடன்
சிலரின் பிடிவாதம்
நிற்காத வண்டியை சபித்தப்படி........

Friday, August 8, 2008

ஒரு பனை மரத்தின் கீழே.....






பனை மரமாய்
தனியாய் வளர்ந்தார் அப்பா

மானவரி நிலத்தின்
மகசூலாக
அம்மா வந்த பிறகுதான்
மழை மேகமே பார்த்திருப்பார் போல .......


அவரின்
துண்டு போடாத தோள்களில்
தொங்கியபடி நானும் தம்பியும்......

துப்பாக்கி கேட்டு
அடம்பிடித்த
ஒரு தீபாவளியில்
ஜெலட்டின் குச்சியைமத்தாப்பு ஆக்கிய
தம்பியை என்ன சொல்ல ....

ஆகாயம் பார்த்தும்
பூமி பார்த்தும்பதுங்கியது
எங்கள் வீதிகள் முதல் முறையாக !

நுங்கு வெட்டும் லாவகத்தை
பிரமிப்பாய் பார்ப்பான் தம்பி....
வெட்டிப்பார்ப்பான்
அப்பா கொஞ்சம் நகர்ந்ததும்
இடைவெளியின்றி
நுங்கு சாப்பிடச் சொன்ன
அப்பாவின் வசியம்
சாப்பாட்டை தாண்டியும்
எதிரொலிக்கும் அம்மாவின் ருசி

மண் சாப்பிட்டு
வளர்ந்த தேகம்
கண்ணீர் குடித்து கரை ஏறினோம்!

அப்பாவை
தம்பியும் அம்மாவை நானுமாய் .....
கூறுப்போட்டுக் கொண்டோம்!

எங்களிடம்
பத்திரமாக எத்தனையோ......
அம்மாவும் அப்பாவும்
எதை வைத்திருப்பார்கள் பத்திரமாய்.....

எப்போதாவது
தொலைபேசியில்பேசும்போது
அப்பா கேட்பார்-
"மகள் நுங்கு சாப்பிடனும் போல இருக்கு "
எப்படிச்சொல்ல
அறிவாள்கள்
கூர் மழுங்கிக் கொண்டிருப்பதை!!!!!
(தமிழ் பிரவாகம் இலக்கிய போட்டிகளில் புதுகவிதைக்கு முதல் பரிசு பெற்றது)

Thursday, August 7, 2008

நிழல் மனசு!




எல்லைகளைச் சுறுக்கி
இருக்க முடியவில்லை
நீளவாக்கில் படர்வதையும்
தவிர்ப்பதற்க்கில்லை
தகராறுதான் எப்போதும்
பக்கத்து வீட்டாருடன்.....
மரத்தின் நிழலுக்கு
என்ன தெரியும்!

neelam enbathu song