Friday, August 8, 2008

ஒரு பனை மரத்தின் கீழே.....






பனை மரமாய்
தனியாய் வளர்ந்தார் அப்பா

மானவரி நிலத்தின்
மகசூலாக
அம்மா வந்த பிறகுதான்
மழை மேகமே பார்த்திருப்பார் போல .......


அவரின்
துண்டு போடாத தோள்களில்
தொங்கியபடி நானும் தம்பியும்......

துப்பாக்கி கேட்டு
அடம்பிடித்த
ஒரு தீபாவளியில்
ஜெலட்டின் குச்சியைமத்தாப்பு ஆக்கிய
தம்பியை என்ன சொல்ல ....

ஆகாயம் பார்த்தும்
பூமி பார்த்தும்பதுங்கியது
எங்கள் வீதிகள் முதல் முறையாக !

நுங்கு வெட்டும் லாவகத்தை
பிரமிப்பாய் பார்ப்பான் தம்பி....
வெட்டிப்பார்ப்பான்
அப்பா கொஞ்சம் நகர்ந்ததும்
இடைவெளியின்றி
நுங்கு சாப்பிடச் சொன்ன
அப்பாவின் வசியம்
சாப்பாட்டை தாண்டியும்
எதிரொலிக்கும் அம்மாவின் ருசி

மண் சாப்பிட்டு
வளர்ந்த தேகம்
கண்ணீர் குடித்து கரை ஏறினோம்!

அப்பாவை
தம்பியும் அம்மாவை நானுமாய் .....
கூறுப்போட்டுக் கொண்டோம்!

எங்களிடம்
பத்திரமாக எத்தனையோ......
அம்மாவும் அப்பாவும்
எதை வைத்திருப்பார்கள் பத்திரமாய்.....

எப்போதாவது
தொலைபேசியில்பேசும்போது
அப்பா கேட்பார்-
"மகள் நுங்கு சாப்பிடனும் போல இருக்கு "
எப்படிச்சொல்ல
அறிவாள்கள்
கூர் மழுங்கிக் கொண்டிருப்பதை!!!!!
(தமிழ் பிரவாகம் இலக்கிய போட்டிகளில் புதுகவிதைக்கு முதல் பரிசு பெற்றது)

2 comments:

Aruna said...

ரொம்ப உணர்ச்சிகரமான கவிதை.
மனதை வருத்தியது.
அன்புடன் அருணா

ரா.நாகப்பன் said...

நன்றி அருணா,
தங்களின் வலைத்தளத்தை பார்த்தேன் படித்து பின்னூட்டம் இடுகிறேன் ....

அன்புடன்,
ஆர்.நாகப்பன்.

neelam enbathu song