Monday, August 25, 2008

பென்சில்.......!


காதில்
செருகி வைத்த பென்சில்
கணக்கெழுதும்
மளிகைக்கடை அண்ணாச்சி
நடராஜ் பென்சிலில்
ஆரம்பித்த நட்பு...

பூப்போட்ட
பென்சிலோடும்
ரப்பர் இணைத்த
வாசனை பென்சிலோடும்
வசதி பரிமாறும்
பாலுவின் பென்சில் ஊக்கில்
குத்துப்படும்
எங்கள் பள்ளிக்கூட மரபெஞ்ச்....

"செவன் ஓ கிளாக்" பிளேடில்
கூர்சீவும் சந்தர்ப்பங்களில்
விரலில்படும்
ரத்த துளிகளில்
அப்பா வாங்கித்தரும்
"காம்ளின்" பென்சில்
சிவப்பாகிபோவதுண்டு!

பென்சில் ஸ்டாண்ட்
வாங்கி
வரிசையாய் அடுக்கி
படம் வரையும்
ஓவிய பாடவேளையில்
அகப்படாமல் போவதுண்டு
வெள்ளை பென்சிலின்
உபயோகம்
பரிதாபமாய்
பென்சில் ஸ்டாண்டில்....

பென்சில்கள்
எப்போதும்
கிறுக்கிக்கொண்டேதான் இருக்கும்
சீவுகிறபோதும்
எழுதுகிறபோதும்.....

ஆனால்
பென்சில்களைவிட
பேனாக்களே
பலருக்கு பிடித்த ஒன்றாகிவிடுவதுண்டு!

நூல்கட்டி
கையெழுத்துப்போட
நூலகத்தில் கட்டிவைத்திருக்கும்
அந்த பென்சிலை
பார்த்தபோதுதான்
புரிந்துகொள்ள வேண்டயுள்ளது

மாட்டுக்கு மட்டுமல்ல
பென்சிலுக்கும்
மூக்கணாங்கயிறு
அவசியம்தான் போல!

No comments:

neelam enbathu song