Friday, December 12, 2008

அறைகளின் வெளியே...!


வீதியில் இருந்து
அன்னியப்பட்டிருந்தது
அந்த அறை நம்மை இணைத்த
நம் வீட்டைப்போல்!

பழகிய சாலை
பார்த்த முகங்கள்
அடையாளங்களை வைத்தே
அடைந்துவிடுகிறோம் சுலபமாய்....!

ஆணியில் தொங்கும்
சட்டைப்பை உள்ளிருக்கும்
சில்லரைப்போல்
சும்மா இருந்துவிடுகிறோம்
அவசியமில்லாத நேரங்களில்!

பந்துப்பட்டு
உடையாத கண்ணாடி ஜன்னல்
அழைப்புமணியோ கதவுத்தட்டலோ
கேட்காத அறை
எறும்புகள் பார்க்காத
விஷேச தின கோலம்
குழந்தைகள் கிறுக்காத சுவர்கள்
-எதோ ஒன்றில்
உட்கார்ந்திருக்கும்
நம் தாம்பத்தியம்!

மின்விசிறியின்
புழுக்கம் தாளாமல்
கதவுக்கு வெளியே காத்திருக்கலாம்
சில கவிதைகளும்
சில கனவுகளும்
குடை இல்லாமல்
மழையில் நனைந்தபடி!

Thursday, December 11, 2008

நிறவொவ்வாமை...!


துடைக்க மறந்து
வெளிறிப்போன
பவுடர்பூச்சு!

நாணய அளவுகளைத் தாண்டும்
நெற்றி கன்னம்
நிறைத்தபோட்டு
நிற வொவ்வாமையில்!

பின்னிய கூந்தல்
அகல்விளக்காய்....
தனித்திருக்கும் கார்த்திகையில்!

கூரை ஏறிய
பூசணிக்கொடியில்
தென்பட்டு மறையும்
செங்கல் சூளை.....

அப்பாவின் சட்டை
அம்மாவின் புடவை
மாறிய வடிவங்களில்....!

அரிக்கேன் விளக்காய்
செம்மண் சாலைகளில்
எப்போதாவது நிற்கும் பேருந்துகள்!

அமாவாசை பகல்பொழுதுகளில்
மின்மினி பொறுக்கும்
மரப்பாச்சி பொம்மைகள்!

எத்தனை எறும்புகள்
செத்ததோ
யாருக்குத் தெரியும்
சீனி டப்பாவின் பக்கத்தில்!


Saturday, December 6, 2008

உயரம்-2


சிறுவயதில்
மொட்டைமாடி
கலங்கரை விளக்கக்கோபுரம்
ராட்சத ராட்டினம்.....

உயங்களின் விளிம்பு
தொடுகிரபோதெல்லாம்
பயத்தில் அலறிவிடுவேனாம்..
-அம்மாச் சொல்ல கேள்வி!

மனைவி சொல்கிறாள்
நேரம் கிடைக்கிறபோதெல்லாம்-
மற்றவர்கள் அலறுவதை
கீழிருந்து ரசித்தபடியே
என் உயரத்தை
உயர்திக்கொண்டிருகிறேனாம்......


யாருக்குத்தெரியும்
குறுக்கெழுத்துப் போட்டிக்கு
இடமும் வலமும் நிரப்பி விட்டால்
மேலிருந்து கீழ் சுலபம் என்று!

Friday, December 5, 2008

உயரங்கள்...!

உயந்த இடங்களில் கூடுக்கட்டவே
பிரியம்காட்டுகின்றன புறாக்கள்
பிள்ளைகளிடமிருந்து
பலகாரங்களை பத்திரபடுத்தும
அந்தக்கால அம்மாக்களைப்போல...!

மலையுச்சியை தேடியே பயணிக்கின்றன
தோற்றக் காதல்கள்...
கைகெட்டும் தூரத்தில்
புத்தகங்கள் தேடும்
படைப்பாளி அப்பாக்களைபோல்!

கம்பங்களின் உயரத்தில்தான்
கட்டப்படுகின்றன கொடிகள்
அறுந்துவிடும் நூல்பயத்தில்
பறந்துகொண்டிருக்கும் காத்தாடிகளைபோல்!

உயங்களின் நிழல் மிதித்தே
நடைபழகுகின்றன வாழ்க்கை
எப்போதும் வான் பார்க்க ஆசைப்படும்
விதைநெல்போல்....!

எழுதுவதற்கு முன்பும்
எழுதியதற்க்குபின்பும்
உயரமான இடத்தில் இருந்து இறங்கிவரவே
பிரியம் காட்ட செய்கின்றன இந்த கவிதை!

Thursday, December 4, 2008

செதில்களால் சுவாசித்தபடி....!ஒரு பின்மாலைப் பொழுதில்
சாளரம் திறந்து
உள்நுழைந்தது அது!

நெரிசல் சாலையில்
பயணித்த அதன் விலாஎலும்புகள்
போக்குவரத்துக்காவளர்களின்
சிநேக புன்னகைப்போல்
நிலைக்குத்திப்போய்....

தன் திசைகளின் கதவுகளை
யாரோ பூட்டிச்சென்றதாய்
வேர்த்துப்போய்
சொல்லிக்கொண்டது!

கள்ளச்சாவி உபயத்தால்
திறக்க எத்தனித்த
என் இயலாமையின் இடைவெளியில்
அது துள்ளிக்குதிக்க
கைக்குட்டைநீட்டிய என்னை
பரிதாபமாய் பார்த்தது!

முழுபலத்தையும் சேர்த்து அழுத்த
என் வீட்டு
மீன்த்தொட்டிக்குள் நுழைந்து
தண்ணீர் குடித்து கரையேறியது....

கடைசியாய்
என்னை மீனாக மாற்றிப்போனதை
சொல்லிப்போயிருக்கலாம்!

Tuesday, November 25, 2008

அர்த்தங்கள்...!அர்த்தமாகவே பேசும் எல்லோரிடமிருந்தும்
அர்த்தமற்ற சிரிப்புகளுக்க்கிடையில்

அமைதியாகிப்போகின்றன
அடிமனசு வேதனைகள்!


அழகான தேவதைகளை சந்திக்கிற
எந்த சாத்தானின் இதயமும்
ஒருகணம் நின்று துடிக்கக் கடவது!


ஆயிரம் வாசல்களுக்கு மத்தியில்
நிழல் ஒன்று எட்டிப்பார்க்கலாம்
எதோ ஒரு சாளரம் வழியே!


கடவுளின்
ஆசீர்வாதங்களில்
இறுமாப்புடன் எதிர் வரும்
வெள்ளை நிழல்களின் விழிகளில்
லேசாய் இருட்டின் வாசனை
அர்த்தமில்லாமல்
அனாயசியமாய்
அர்த்தங்களின் விளிம்புகளில் நின்று!

Monday, November 24, 2008

"டேய் ராஸ்க்கல் உன்னத்தான்டா


சிரமப்படும் அளவிற்கு
கசப்புக்காட்டாத
பிரியம் பொத்தி
தரவேண்டியிருக்கிறது
ஒவ்வொருமுறையும்முத்தம் என்ற பெயரில்....

ச்ச் சீ.....என்று தள்ளும்
கரங்களில்
சூடு தணிந்த இதம்
இருட்டிலும் பிரதிப்பளிக்கும்...


ஒரு நிசி உப்புக்கரிப்புடன்
கொஞ்சம்கொஞ்சமாய் ஆவிப்பறக்க
ஊற்றி குடிக்கவேண்டியதாய்......


சாத்தியப்படாத இடத்தில்
சாத்தியப்படுத்திய அவனை
திட்ட முடியாமல்
மெதுவாய் ஊர்ந்து!


பின்புறம் ஒட்டிய
மணல் தட்டி எழுந்த இடம்
பிற்பாடு
பிணம் புதைத்த
மேடாகும்!


நெடுஞ்சாலைகளில்
கிரீச்சிட்டு விளக்கணைக்கும்
வண்டிகளை தொடந்து
மல்லிகை சிதறலுடன்
வியாபாரம் பேசும் .....


அடுத்த வண்டி
நிற்கும் வரை
குளிருக்கிடையில் சிறுநீராய்
ஞாபகப்படுத்திப் போகலாம்-
முதலிரவும் முதல் முத்தமும்!

Wednesday, October 29, 2008

அதுவரை இல்லாத கரிசனம்....!


எந்த ஒரு இரைச்சலின்
வெளிப்பாடாய் தென்பட்டிருக்கும்
இந்த அமானுஷ்யம்!

மௌனிக்கிற
வார்த்தைகளின் பிணம்
இரைச்சல் ஈக்களால்
மொய்க்கப்பட்டிருக்கும் தருணம்
அந்த உதடு உதிர்த்த அமைதியில்
வந்திருந்தது அது.......

எல்லாம் தெளிவாக
காதுகளை தொடும் சத்தங்களில்
கேட்காமல் விடப்படும்
சத்தங்களின் தூரிகை
தீட்டிக்கொண்டிருந்தது!

சந்தர்பங்களை மறுதலிக்கும்
சலன ஓவியம்
மௌன வண்ணங்களால்
அதன் புன்னகை
அழகுப் படுத்தபட்டிருந்ததை மறுப்பதற்கில்லை!

குழந்தைகளின்
விளையாட்டைப்போல் இனிமையானது
அழுகை மறந்து மீண்டும்
மணல் வீடு கட்டுவது!

இருந்தும்
அதுவரை இல்லாத கரிசனத்துடன்
கேட்க வேண்டியுள்ளது
"என்ன ரொம்ப மௌனமாய்
இருக்கீங்க போல கோபமா"

Saturday, October 25, 2008

தீபாவளி வாழ்த்துகள்!


மழையுடன் துவங்கும் தீபாவளி
தைத்த துணி வாங்க
டைலர் கடைக்கு செல்ல நினைக்கும்
அவசரம் நனைய
பட்டாசு கொள்ளுத்துவோம்...!

பட்டன் கட்டாத சட்டையுடன்
சிரிக்கும் சிநேகம்
எந்த டைலரையும்
பார்க்கமுடியாமல் போகிறது இப்போது!

ரெடிமேட் துணிகளில்
ஒட்டிக்கொள்ளும் உடம்பு
மனசு மட்டும் ஓட்டமறுத்து
கதவுக்கு வெளியே வெடிச்சத்தத்தில் பயந்தபடி!

எல்லா தீபாவளியின் இனிப்பையும்
வாரியிரைத்துவிட்டு
போவதில்லை கனவுகள்!

தலைதீபாவளியும்
சியக்காய் விலையேற்றத்தில்
கண்கள் கசக்க எண்ணெய் வடிய
திருதிருவென விழிக்கும் தீபாவளி பட்ஜெட்!

போதும் என்பதான
அதிசய வெயில் எட்டிப்பார்க்க
குளித்துவிட்டு வந்திருக்கும் நிஜம்!
தீபாவளிகளில் எப்போதும்
வேடித்துச்சிதறுவது
பட்டாசுகளோடு பற்றாக்குறை வாழ்க்கையும்!

இருந்தும் சொல்லிக்கொள்ளவே செய்கிறோம்
"தீபாவளி வாழ்த்துகள்"

Wednesday, September 24, 2008

சொல்லத்தான் நினைக்கிறேன்....!


கடைசியாக
தன் அப்பாவின்
சட்ட்டைப்பையில்
எடுத்துக்கொண்ட பேனாவில்
கிறுக்கலை தொடங்கியிருந்தது
அந்த குழந்தை!


விடைப்பெற்று
கீழிறங்கிய நேரம்
நீ ஜன்னல் வழியே
தலைநீட்டி ஏதோ பேசினாய்....


புரிந்தும் புரியாமலும்
தலையாட்டிய என்னை
வினோதமாக
பார்த்திருக்கவேண்டும்
அந்த தாவணிப்பெண்...!


முதல் பாதி
முடிந்த நிலையில்
வேண்டாவெறுப்பாய்
கடாசிவிட்டு
வண்டி ஏறினான்
அந்த ஜீன்ஸ் இளைஞன் !


பரோட்டாக்கடையில்
இன்னும்
அதிவேகதாளகதியில்
கரண்டிகள்
மோதிக்கொண்டிருந்தன


நீயும்
காதுகளில்
மாட்டிக்கொண்டிருக்கும்
ஹியர்போன் தாண்டி
கேட்டிருக்க வாய்ப்பிருக்கலாம்....


ஊருக்கு போனதும்
கடிதம் போடு
என்பதான
சம்பிரதாய வார்த்தையில்
ராத்திரி உன்னை
ஒரு சின்ன மின்மினியாய்
கிளப்பிக்கொண்டு
இடம்பெயர்ந்தது
செல்போன் சிணுங்கலாய்!


அடுத்த முறை
வரும்போது
ராத்திரிகளில் பயணிப்பதை
தவிர்க்க சொல்லவேண்டும்


ஒரு அடர்ந்த இருட்டுக்குள்
உன்னை கொடுத்துவிட்டு
தனியாக நடக்கிறேன்
மேன்ஷன் நோக்கி!

Wednesday, September 10, 2008

காணாமல் போதல்....!

வழிதலும்
வழிதல் நிமித்தமும்
இல்லாமல் உருவான
சிநேகத்தின் கடைசிநாள்...
எனக்கான பில்லையும்
நீயே கொடுத்திருந்த
அற்புதமான தருணத்தில்தான்
அது நிகழ்ந்தது!
ஓடிப்போயிருந்த
கோகிலாவிற்காக
சோகம் வாசித்த
உன் தெரு ரோமியோக்களை
தாறுமாறாய் வாரிக்கொண்டிருந்தாய்.....
அடுத்த மாத வீடுமாறுதலும்
யாரோ ஒருவரின் வலைத்தளத்தில்
கண்ட பின்னூட்டத்தையும்
கிண்டலடித்தபோதுதான்
இடறிவிட்டிருக்க வேண்டும் நான்!
உன் வண்டியின்
பின்னுருக்கையில்
சிதறியிருந்த மல்லிகைபூவை
தட்டிவிட்டபடி பேசினாய்
கடன் வாங்காத வார்த்தைகளுடன்....
முகம் தெரியாத
அந்த பெண்ணின்
அத்தனைத் திட்டுகளுக்கும்
சொந்தக்காரனாகிப்போனான்
அந்த முகம் தெரியாத அவன்!
ஒருவேளை
இங்கு தொடங்கியிருக்கலாம் ....

தொலைதலை
முன்னிருத்தியே செல்கிறோம்
ஒவ்வொருமுறையும்
கூடுதல் ப்ரியங்களுடன்!

Tuesday, September 9, 2008

ஒரு வயலின் ஊமையானது.......!


வயலின் தூரிகை
தீட்டிய ஓவியம்
குன்னக்குடி.....


காதுகளை
கௌரவப்படுத்தியது
உன் இசை!

பேசிப்போனதில்
சிதறும் வார்த்தைகளாய்
உன் புன்னகை!


இசையால்
ஆடைக்கட்டுவார்கள்
நீ மட்டும்தான்
ஆடை நெய்தாய்!


உன் கச்சேரிகளில்
உதடுகளை பொருத்தியிருப்பாய்
உன் வயலினுக்கு....

ராகங்களை மொண்டு
டம்ப்ளர்களில்
விநியோகிப்பாய்....


"எந்தரோ மகானுபாவலு"வும்
வாசித்தது உன் வயலின்....
"லாலாக்கு டோல்டப்பிமா"வுக்கும்
வளைந்துகொடுத்தது உன் வயலின்!


பதினோராவது
விரலாகிப்போனது
வயலின்!
எட்டாவது
சுரமாகிப்போனது
உன் பெயர்!
ஒன்பதாவது
திசையாகிப்போனது
உன் ஊர்!


களத்துமேட்டின்
கனத்த
நெருஞ்சிபூக்களுக்கு
மத்தியில் இருந்து
எழுதுகிறேன்.....

எழுந்துவா
அனாதையாய்
அழுதுக்கொண்டிருக்கிறது
உன் வயலின்
கண்ணீர்த்துடைக்க
விரல்கள் இல்லாமல்!!

Friday, September 5, 2008

மறப்பதில்லை யாரும்!!!!!!!!!!!!!!


கணக்கு எடுக்கும்
கனகா டீச்சருக்கு
காச நோயாம்!
பி.டி.மாஸ்டர் டேவிட்டுக்கு
போன மாசம்தான்
கேன்சர் ஆப்பரேசன் முடிந்ததாம்.....

தமிழய்யா தங்கவேலுக்கு
சக்கரைநோயால்
இடது காலைஎடுத்து விட்டார்களாம்.....

ஹெட்மாஸ்டர் ராமசுப்ரமணியத்தை
மனநலமருத்துவமனையில்
சேர்த்திருக்கிறார்களாம்....
-நோயுடன்
அவதிப்படுவதாகவே
சித்தரிக்கும் நண்பர்கள்
ஆசிரியர் பணிக்கு
விண்ணப்பங்களை
நிரப்பிக்கொண்டிருப்பதாக கேள்வி!

இருந்தாலும்
சொல்ல மறப்பதில்லை
வெளிநாடுகளில்
பேரன் பேத்திகளுடன்
வீடியோகேம் விளையாடும்
ஆசிரியர்களையும்!

நிறங்களின் அவசியம்!


பிரம்புடன் உள் நுழையும்
ஆசிரியர்களை விட
கனவுகளுடன் வரும்
மாணவர்களையே பிடித்திருக்கிறது
பள்ளிக்கூடங்களுக்கு.....


ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும்
சில மரங்கள்
வியர்த்துக்கொண்டிருக்கலாம்
வீட்டுப்பாடம் எழுதாத
மாணவர்களின் விரல்கள்
நிழலுக்கடியில்!


பட்டப்பெயர்கள் வைக்கும்
மாணவர்களைவிட
பட்டம் பெரும் மாணவர்களை
மறந்துவிடுவதுண்டு
பல ஆசிரியர்கள்........


ஜாமென்ட்ரி பாக்ஸின்
உள்ளிருக்கும் இறகில்
காதுகுடைகிறது
ஒவ்வொரு பள்ளிக்கூடமும்.....


உதிரும் இறகின்
வலித்தெரியாமல்
பறக்கவே செய்கின்றன எப்போதும்!


எல்லா வண்ணங்களையும்
செலவழித்த பிறகுதான்
தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது
நிறங்களின் அவசியம்!


வானவில் வரையும்
இறகின் மிச்சத்தில்
உதிரலாம்
வண்ண சாக்பீஸ் துகள்கள்.......!

Saturday, August 30, 2008

பயத்துடன் தான் புணரமுடிகிறது ........


ஒரு கோப்பையில்
உட்காரும் ஈயாக நானும்
ஆவிப்பறக்கும் தேநீராக நீயுமாக
பேசிக்கொள்கிறோம்....


எதோ ஒரு உதடு
தொட்டுவிடும் அவசரம்
முன்பைவிட கூடுதல் சிரத்தையாய்
விரட்டிவிடும் கையில்
தெரிந்ததில்லை இதுவரை நேசம்.....


எப்போதும் இல்லாத
பயத்துடன் தான்
புணரமுடிகிறது
நம்மையும் தாண்டி வீதியில்
விளையாடிக்கொண்டிருக்கலாம் நம் பால்யம்....


ஈரமண்ணில் கிளம்பிவந்த
மழைக்காலத்தின் கர்ப்பம்
மெல்ல மெல்ல கரைகிற போதுதான்
நீயும் நானும்
உருண்டு திரண்டு மீண்டிருந்தோம்.....


இப்போதெல்லாம்
மழைச் சத்தத்தில்
காதடைக்கும் நான் கதவடைப்பதில்லை.....
மகனுக்கு காகித கப்பல்களை
செய்துத்தந்தபடி மனைவி
எப்போதுமில்லாத குழந்தைத்தனத்துடன்!


Friday, August 29, 2008

எழுத முடிந்தது இவ்வளவுதான்....


ஒருவேளை நீ
வாசிக்காத ஒரு சந்தர்ப்பத்தில்
யாரோ ஒருவரின் வாசிப்பில்
உயிர்ப்பித்திருக்கலாம்
இந்த கவிதை.....!


உனக்காகஎழுதியதை
பிறர் வாசிக்கிற அவஸ்தையில்
நெகிழ்ந்து
மூச்சு வாங்கும் வார்த்தைகளில்
நாணத்தால் சிவந்து போயிருக்காலம்
என் காதல்!


திரும்பிவந்து விட்ட
ஆயிரத்து எட்டாவது கடிதத்தோடு
இதுவும் ஒன்றாகிப்போனத்தில்
வருத்தம் இல்லைஎன்றாலும்
அதையே நான் வாசித்து வாசித்து
பசியாரிக்கொண்டிருக்கிற கொடுமையில்
கல்லெறிந்து போகிறது
உன்னை தொலைத்து நிற்கும்
என் தனிமை....


எந்த
முன்னெச்சரிக்கையும் இல்லாமல்
நீ இடப்போகிற
பின்னூட்டத்தில்தான் இருக்கிறது
இனிமேல் எழுதப்போகிற
எனக்கான உன் படைப்புகள்......


ஆரவாரமில்லாத
கடற்கரை மணல்வெளியில்
இட்டு சென்ற உன் கால்தடங்களை
எதேச்சையாய் அழித்த ஒருவன்
வருந்திக்கொண்டிருக்கிரான்
என்னைப்போல!


ஒருவேளை நீயும்
சில அதிகபடியான கணங்களுடன்
எழுதி வைத்திருக்கலாம்
உனக்கான காதலை
பிறருக்கான பதிவுகளில்!

Tuesday, August 26, 2008

பென்சில்- 2பென்சில்சுப்பிரமணி
பென்சில் ரகு
பென்சில் வனிதா
பென்சில் ரீட்டா
-இப்படி நண்பர்கள் இருக்கலாம்......


அப்பா வாங்கித்தரும்
புது பென்சிலுக்காக
பென்சில் தொலைக்கும்
மகன்களும் மகள்களும் அதிகம்!


பள்ளிக்கூடங்களில்
தொலைக்கும் பென்சில்கள்
கல்லூரிகளில்
கண்டுப்பிடிக்கபடுகின்றன


குழந்தையாய்
பிறக்கும் பென்சில்
குமரியாய் கண்சிமிட்டலாம் !


பென்சிலும் வாழ்க்கையும்
சற்றேறக்குறைய ஒன்றுதான்.....
ஒன்று வளர வளர தேயும்....
இன்னொன்று எழுத எழுத தேயும்...


பென்சில்களின் உலகில்
கண்ணீர்க் கதைகள் ஏராளம்!


உடைகிறஊக்குகளாகவே
படைக்கப்படுகிற பென்சில்கள்
உடையாத பென்சில்களை
அச்சத்துடன் தான் அணுகுகின்றன.....


பென்சில்-
உயர்தினையாய்
தன்னை சுவீகரித்துக்கொண்டாலும்
பென்சில் மீசைக்காரர்களை
புகைப்படங்களில்
எழுதிச்செல்கிற காலத்தை
எச்சில் தொட்டே அழிக்கின்றனர்
பேனா மையால்
கைநாட்டு இடுபவர்கள்!


பென்சில் குறித்து
எத்தனையோ
சொல்ல இருந்தாலும்
எழுதிக்கொண்டிருப்பதோ பேனாவால்!

Monday, August 25, 2008

பென்சில்.......!


காதில்
செருகி வைத்த பென்சில்
கணக்கெழுதும்
மளிகைக்கடை அண்ணாச்சி
நடராஜ் பென்சிலில்
ஆரம்பித்த நட்பு...

பூப்போட்ட
பென்சிலோடும்
ரப்பர் இணைத்த
வாசனை பென்சிலோடும்
வசதி பரிமாறும்
பாலுவின் பென்சில் ஊக்கில்
குத்துப்படும்
எங்கள் பள்ளிக்கூட மரபெஞ்ச்....

"செவன் ஓ கிளாக்" பிளேடில்
கூர்சீவும் சந்தர்ப்பங்களில்
விரலில்படும்
ரத்த துளிகளில்
அப்பா வாங்கித்தரும்
"காம்ளின்" பென்சில்
சிவப்பாகிபோவதுண்டு!

பென்சில் ஸ்டாண்ட்
வாங்கி
வரிசையாய் அடுக்கி
படம் வரையும்
ஓவிய பாடவேளையில்
அகப்படாமல் போவதுண்டு
வெள்ளை பென்சிலின்
உபயோகம்
பரிதாபமாய்
பென்சில் ஸ்டாண்டில்....

பென்சில்கள்
எப்போதும்
கிறுக்கிக்கொண்டேதான் இருக்கும்
சீவுகிறபோதும்
எழுதுகிறபோதும்.....

ஆனால்
பென்சில்களைவிட
பேனாக்களே
பலருக்கு பிடித்த ஒன்றாகிவிடுவதுண்டு!

நூல்கட்டி
கையெழுத்துப்போட
நூலகத்தில் கட்டிவைத்திருக்கும்
அந்த பென்சிலை
பார்த்தபோதுதான்
புரிந்துகொள்ள வேண்டயுள்ளது

மாட்டுக்கு மட்டுமல்ல
பென்சிலுக்கும்
மூக்கணாங்கயிறு
அவசியம்தான் போல!

Friday, August 22, 2008

ஜன்னல்கள் திறப்பதில்லை!


வாசல் திறந்து
உள் நுழையும்
திமிர்பிடித்த வெயில்!


அதிகப்பிரசங்கியாய்
தலை நீட்டும் நிழல்...


எல்லத்துளிகளிலும்
ஒளித்து
ஓய்ந்துப்போயிருக்கும்
நேற்றைய மழை!


பல்லிடுக்கில் சிக்கிய
பருக்கையை
எடுக்கும் போராட்டத்தில்
சிதறும் ரத்தத்துளி....


மூச்சிரைப்பில்
விளங்காத வாசனை!


உளிச்செதுக்கும்
சத்தத்தில்
கண்மூடிதூங்கும்
சிலை!


எதிர்வீடுஎன்றாலும்
ஜன்னல் திறக்க முடிவதில்லை
"அழைப்புமணி" ஒலிக்காதவரை!

Thursday, August 21, 2008

பச்சை காகம்!


பச்சைக் காகம்
சிவப்பு அலகில்......


"கிளி" என்கிற
என்னை
கிண்டலடிக்கிறாள் மகள்!


அவளின் காகம்
வடைத் திருடுவதில்லையாம்
அதற்க்கு பதிலாக
வடை சுடுகிறதாம்....


வண்ணங்களில்
அடையாளப்படுத்தும்
அவளின் குழந்தைத்தனம்
என் பழைய புகைப்படத்தின்
நிரமிழப்பில் தெரிந்தது!


இது யானைதானே
என்கிற என்னை
திட்டிவிடுவாளோ
என்பதால்
எலி என்பதாக
சொல்கிற என்னை
குட்டவருகிறாள்...


புரிவதேயில்லை
குழந்தைகளின் உலகம்!


Thursday, August 14, 2008

ஆகவே சுதந்திரம்.......உதிரும்
இலை-


நிலம் தொடும்
நிழல்-


கவிதை
கிறுக்கும்
இறகு-


மேகம்
தொலைத்த
மழைத்துளி-


கயிறு
அறுக்கும்
காளை......


இன்னும்
ஒட்டாமல்
உருண்டுச்செல்லும்
நீர்த்துளி....பம்பரம் சுழல
அமைதியாய்
சாட்டை!


சுவர் தொட்ட
விதை
சொல்லாமல்
சொல்கிறது
விருட்சம்
சுதந்திரமாய் சுவாசித்தபடி...!


குடைப்பிடிக்காத
நிழல்
எப்போதும்
வேர்த்துப்போனதாய்
சொல்லிக்கொள்வதில்லை......

Monday, August 11, 2008

சுட்டாச்சு சுட்டாச்சு ...............


அம்மாவால்
சுட முடிகிறது
தோசையை அழகாக....


அப்பாவின்
சட்டைப்பையில்
லாவகமாய்
சுட்டுவிடுகிறான் அண்ணன்
தனக்கான சில்லரைகளை......


யாரோ செலவழித்த
மூளையை
தனக்கானதாய்
சொல்லிக்கொண்டு சுட்டு
தந்துவிடமுடிகிறது
எல்லோராலும்
காதல் கவிதைகளை.....


சுடாமல் இருக்கிற
பொழுதுகளை
சுட்டிக்காட்டவும்
சுட வேண்டி இருக்கிறது ....

முதல் முறையாய்
வரலாறு
தங்கம்
கொடுத்து
சுட்டுகொண்டது.....


சுட்டவரெல்லாம்
கேட்டவர் இல்லை!
அபிநவ்
நீ சுடாமல் இருந்திருந்தால்
சும்மா கிடந்திருக்கும்
எங்கள் சமையலறை தோசைக்கல்!!!!!!

Saturday, August 9, 2008

நானும் அவரும்!

அவரை

எனக்கு பிடித்திருந்தது
காரணமில்லாமல்
கோபித்து கொள்ளாத
அவரின் பெருந்தன்மையில்
உருவாகியிருக்கலாம் எங்கள் சிநேகம்.....!

கல் நிரப்பி
நீர் குடிக்கும் காகமாய்
தந்திரம் தெரியாத
அவரின் இயல்பின்
இடுப்புக்குக்கீழே
கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறேன்.......

எதற்க்காக என்பதான
எந்த புரிதலிலும்
அவருக்கான இருப்பு
நிலையாகவே இருந்தது என்னிடம்.....
வரும் போகும்போது
என்றில்லாமல்
எப்போதுமே
பிடித்தாய் இருந்திருக்கிறது
அவரின் முரட்டு சுபாவம்......

அந்த பேருந்தில்
அவரின் விசிலுக்கு
அடிபணிந்தது
பேருந்தும் பயணிக்கும் நானும்......
வந்துகொண்டிருக்கிறது
ஜன்னலுக்கு வெளியே
சில்லறை சத்தத்துடன்
சிலரின் பிடிவாதம்
நிற்காத வண்டியை சபித்தப்படி........

Friday, August 8, 2008

ஒரு பனை மரத்தின் கீழே.....


பனை மரமாய்
தனியாய் வளர்ந்தார் அப்பா

மானவரி நிலத்தின்
மகசூலாக
அம்மா வந்த பிறகுதான்
மழை மேகமே பார்த்திருப்பார் போல .......


அவரின்
துண்டு போடாத தோள்களில்
தொங்கியபடி நானும் தம்பியும்......

துப்பாக்கி கேட்டு
அடம்பிடித்த
ஒரு தீபாவளியில்
ஜெலட்டின் குச்சியைமத்தாப்பு ஆக்கிய
தம்பியை என்ன சொல்ல ....

ஆகாயம் பார்த்தும்
பூமி பார்த்தும்பதுங்கியது
எங்கள் வீதிகள் முதல் முறையாக !

நுங்கு வெட்டும் லாவகத்தை
பிரமிப்பாய் பார்ப்பான் தம்பி....
வெட்டிப்பார்ப்பான்
அப்பா கொஞ்சம் நகர்ந்ததும்
இடைவெளியின்றி
நுங்கு சாப்பிடச் சொன்ன
அப்பாவின் வசியம்
சாப்பாட்டை தாண்டியும்
எதிரொலிக்கும் அம்மாவின் ருசி

மண் சாப்பிட்டு
வளர்ந்த தேகம்
கண்ணீர் குடித்து கரை ஏறினோம்!

அப்பாவை
தம்பியும் அம்மாவை நானுமாய் .....
கூறுப்போட்டுக் கொண்டோம்!

எங்களிடம்
பத்திரமாக எத்தனையோ......
அம்மாவும் அப்பாவும்
எதை வைத்திருப்பார்கள் பத்திரமாய்.....

எப்போதாவது
தொலைபேசியில்பேசும்போது
அப்பா கேட்பார்-
"மகள் நுங்கு சாப்பிடனும் போல இருக்கு "
எப்படிச்சொல்ல
அறிவாள்கள்
கூர் மழுங்கிக் கொண்டிருப்பதை!!!!!
(தமிழ் பிரவாகம் இலக்கிய போட்டிகளில் புதுகவிதைக்கு முதல் பரிசு பெற்றது)

Thursday, August 7, 2008

நிழல் மனசு!
எல்லைகளைச் சுறுக்கி
இருக்க முடியவில்லை
நீளவாக்கில் படர்வதையும்
தவிர்ப்பதற்க்கில்லை
தகராறுதான் எப்போதும்
பக்கத்து வீட்டாருடன்.....
மரத்தின் நிழலுக்கு
என்ன தெரியும்!

Monday, July 28, 2008

இருப்பின் அவசியம்.......


நீண்ட பிரயாணத்தில்
குறைந்திருந்தது
உலகின் நீளம்......

உதிரும்
ஒரு சிறகில்
வெளிப்பட்டது
பறவையின் வரலாறு....

நங்கூரம்
இட்டப்பிறகுதான்
காற்றுக்கு
ஈடுகொடுக்க முடிந்தது கப்பல்....

மின்தடை
வருகிறபோதுதான்
உணரமுடிகிறது
இருப்பின் அவசியம்!

நிழலை
தொட்டுச்சென்ற பகலில்
இருட்டின் கைரேகை .....

நிஜமாகவே
உப்புக்கரிக்கிறது கண்ணீர்......
-ஆனந்தமாய் அழுகிறபோதும்!

Friday, July 25, 2008

இதயம் பேசட்டும்.....

மழை போர்த்தும்
குளிர் ஆடையுடன்
உள் நுழைகிறாய்.....


ஈரம் லேசாய்
கோலங்கள் கிறுக்க
மனதாழ்வாரத்தின்
ஜன்னல்கள் திறக்கிறேன்....


எதிரெதிர் புறமாய்
நின்றபடி
அலசிக்கொள்ள
காத்திருக்கிறது
நமது இடைவெளி ...


எப்போதுமே
உரைப்பதுஎதுவாயினும்
உதடுகளை முன் நிறுத்தும்
வழக்கத்தை கட்டி
காப்பாற்றுகிறோம்


இதயம் பேசினால் என்ன
மௌனித்தால் என்ன
வார்த்தைகள் புரியாதபோது........

இருப்பதாக எதையும் .....எப்போதும்
நிகழ்வதில்லை
இருப்பினும்
நிழலாக போகும் சுவட்டை
தவிர்ப்பதற்க்கில்லை......


ஆரம்பிக்கிற
எழுத்தின் வளைவில்
உட்க்காரும் மனசு
நாற்காலி தேடும்
இனிப்பை
புறம்தள்ளும் வாழ்க்கை
கனவில்
எறும்பு மொய்த்தப்படி சிரிக்கும்....

ஒருகை மூடி
மறுகை நீட்டுகிற
திமிரின்
உச்சபட்சம்
அழவைக்கிற செயலில்
மும்முரமாய் இருக்கும்....

வரும்போதும்
போகும்போதும்
இருப்பதாக எதையும்
சொல்லிக்கொள்ளாத சமயம்
பட்சியாக மாறி
எச்சமிடலாம்
நிகழ்கால மானுட சிலைகளின் மேல்!

Wednesday, April 9, 2008

தோற்றவளின் தேம்பல்.....மொட்டைமாடியின்
நிலா வெளிச்சத்தில்
சுற்றி உட்கார்ந்து
அரட்டை அடிப்போம்....


முறைமாற்றி
துண்டு கைமாறும்
ஓடியது நிற்க
அமர இடம் தேடும் !

மறுபடியும்
தொடரும் விளையாட்டில்
பொழுது
ஆவியாகிக்கொண்டிருக்கும்....

கண்கள்
தூக்கத்தில் கெஞ்ச
படியிறங்குவோம்
எல்லோரும்
இறங்கியப்பின்
இன்னும்
ஒலித்து கொண்டே இருக்கும்
எங்களின் விளையாட்டில்
தோற்றவளின் தேம்பல்......

Saturday, March 15, 2008

சந்திப்புகள் அரிதானவை.....


உனக்கும் எனக்குமான
சந்திப்புகளில்
தண்டவாளங்களுக்குப் பக்கத்தில்
விட்டுப்போன கொலுசின் ஓசை தேடி
ஒவ்வொரு முறையும்
ரயில் போன பிறகும் பார்கிறேன்!

லெவல் கிராசிங்கில்
பேருந்து ஜன்னலில் இருந்து
எட்டிப் பார்த்து போகும்
உன் முகம் பார்க்க வேண்டி
என் மிதிவண்டி மிதிப்பட்ட நாட்களில்
உன் சிறகுகள்
பனியில் நனைந்திருக்கும்.....
என்பதுகூட தெரியாமல் பார்த்துவிட்டு போகிறேன்!

உனதேயான வாசிப்புகளில்
எனது பெயரின் வாசனை
ஒருவேளை இம்சைப்படுத்தி இருக்கலாம் உன்னை....

உனது ஞாபகமும்
உன் ஈரம் தொட்ட கூந்தலசைவும்
எனக்குள் மூட்டிய தீயில்
குளிர்காய்ந்து கொண்டிருக்கலாம் நீ
என்பதான என் புரிதல்
அந்நியப்படுத்தவே செய்திருக்கிறது
ஒவ்வொருமுறையும்
என்னிடமிருந்து உன்னை......

Friday, March 14, 2008

அவ்வளவு தான் முடிந்தது.....கண்ணீர் வராமல்

வெங்காயம் அறிகிறாய்.....

காம்பஸ் தேவையில்லை உனக்கு

வட்டமாய் தோசைச்சுட!

பதினாறு கஜத்தையும்

பாந்தமாய் சுற்றிக் கொள்கிறாய்....

நடுவோ, கோணலோ

வகிடெடுக்கா விட்டாலும்

வாய்த்து விடுகிறது அழகாய் பின்னிக்கொள்ள!

பம்புசெட்டோ, மணியக்காரர் கிணறோ

குளிக்க முடிகிறது பயமில்லாமல்....

இடித்து கட்டிய வீட்டிற்குள்

விளக்கேற்றவும்,

புள்ளிவைக்கா விட்டாலும்

வாசலில் கோலமிடவும் பழகி இருக்கிறாய்!

மருதாணி அரைக்கும் போதே

சிவக்க துவங்கி விடுகிறது விரல்கள்......


சோகமாய் சொல்லிக்கொள்கிறாய்

"வந்ததாக ஞாபகம் இல்லை

அந்த மூன்று நாள் வலி

மீசை மழிக்கிற போது மட்டும்

தொட்டுச் செல்கிறதே உதிரம்"


ஷேவிங் கிரீமாய் நுரைக்கிறது

ரணமான உன் வார்த்தை........

Wednesday, March 12, 2008

இன்றைய எனது கவிதை.........
யாரும் அமராத
ரயில் பெட்டியில்
பயணிக்கும் வண்ணத்து பூச்சியாய்
கனமான நிமிஷத்தில் இருந்து
உருவாகும் கவிதையாய் இருக்கிறேன் எப்போதும்.....

சுழலும் மின்விசிறியின்
இறக்கையின் வேகம்
இயலாதாகினும் படபடக்க முடிகிறது
என்பதான சுயத்தில்
தண்டவாளத்திலும்
அமர்ந்து போக முடிகிறது என்னால்!

இன்னும்
வயதுக்கே வராத சிறுமி ஒருத்தியின்
அளவுக்கு மீறிய வளர்ச்சியில்
எச்சில் ஒழுகும்
நடுத்தர வயதுக்காரனின்
காமத்தில் கொப்பளித்து
வெளி கிளம்புகிறது
அடையாளம் தொலைத்த ரௌத்திரம்!

நிறம் இழக்கிற
கபடத்தில்
வெள்ளையாய் தூசியாய்,
இருந்து விட்டு போகட்டுமே எப்போதும் மேனி.....
அழுக்கு பிச்சைக்காரியின்
உப்பிய வயிற்றுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும் கந்தலாக
இயல்பாகவே இருந்துவிடுகிறேன்
எறும்புகள் மொய்க்காதவரை ......

வண்ணம் இல்லாவிட்டாலும்
பூச்சி என்று சொல்வதில்லை யாரும்!

முதல் சொல்


கவிதையாய் இருக்க கவிதைகள் படிக்க