Monday, July 30, 2018

28-09-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :149 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....

28-09-2017
வியாழன் 

ஒற்றையடிப்பாதை :149

தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....

ஒரு மழை ஏந்துகிறது
இன்னொரு மழையை ...
காகித கப்பலில் மிதக்க ஆரம்பிக்கிறது
கரைத் தேடும் வார்த்தைகள் ..
கிளைகளின் இலைகளில்
இறங்கிக்கொண்டிருந்தன மேகம் ...
மீன்களை தேடி வீசப்படும் தூண்டில்
குளங்களை தூக்கி போகிறது ஒய்யாரமாக ..
ஆகாயம் நனைத்த வீதியில்
குளிர் போர்வைக்குள் விண்மீன்கள்...
தூறலில் காதலும் சாரலில் ஊடலுமாக
பயணிக்கும் வழிப்போக்கனாகிறது நிலா...
உதடுகள் தொட்டு உதடுகளில் கரையும்
கிளிஞ்சல்களாகிறது சிப்பி ...
ஈரத்தின் நிழலில் கூந்தல் உலர்த்தும்
நடைவண்டி நினைவில்
தேநீர் பருகுகிறது ப்ரியமானவளின் ஞாபகம் ..
குடைக் கம்பியில் குதித்தாடுகிறது
சிலிர்ப்புடன் இந்த கவிதை
ஏதோ ஒன்றை அர்த்தப்படுத்திய திருப்தியில் ....

- நாகா

Image may contain: nature, outdoor and water

01-10-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :150 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

01-10-2017
ஞாயிறு 
ஒற்றையடிப்பாதை :150

தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

முப்பது நாள் முடிச்சிடுச்சா
தூண்டாமணிவிளக்கு கண்மூடி தூங்கிடுச்சா....
கார்மேகம் கலைஞ்சிடுச்சா
அது இப்ப என் கண்ணுக்குள்ள புகுந்திடுச்சா ...

நட்ட இடத்துல தான்
செடி ஒண்ணு முளைச்சிருக்கு ..
எரிச்ச இடத்திலதான்
எருக்கம் பூ பூத்திருக்கு ...
எரவானம் பக்கத்தில நீ படிச்ச புஸ்தகத்த
சொருகி வச்சிருக்க
கரையான் படிக்கத்தான் கவனமா காத்திருக்கு ...

ஜிமிக்கி கம்மலாட்டம்
மனசு பொம்மலாட்டம் ஆடுதம்மா ...
நூலறுந்த காத்தாடியா
இப்போ மொட்டை மாடி தேடுதம்மா ...

சிம்னி விளக்கு பட்டு
பத்திக்கிச்சு உன் ஆசை...
சிலந்தி வலைக்குள்ள
சிக்கிக்கிச்சு ஊர் ஆசை ...
குப்பை மேனிக்கெல்லாம்
குணப்படுத்தும் குணமிருக்கு
குரக்கத்தி பூவுக்கும்
கொண்டாடும் மனமிருக்கு ...
அத்தி பூவுக்கும் கத பேச ஆளிருக்கு
அரளிபூவாட்டம் பாவி மக போயிட்டியே ...

பச்சை இலைக்குள்ள
என் தாத்தன் நோய்யெல்லாம் குணமாக்க ...
உச்சி வேளையிலும்
எங்காத்தா மருத்துவச்சி உசுர் கொடுக்க ..

ஸ்டெதாஸ்கோப்பு கழுத்த தொட
ஆசைப்பட்டு வளர்ந்த மக
சுருக்கு கயித்துக்குள்ள
தூக்கி போட்டு கொன்னுபுட்டோம் ...

காரை பெயர்ந்த சுவர்
உன் கனவை பொத்திவைக்க
குஞ்சுபொரிக்காமல்
பஞ்சாரம் பரிதவிக்க ...

தினந்தோறும் ஒரு சேதி
புதுசாக கிளம்பி வர
உன்னோட விசயத்தை
பூஞ்சணம் ஆக்கிடுமோ ..

விதை நெல்லா உன் நினைப்ப
அடிமனசில் விதைச்சிருக்கோம் ...
வெள்ளாமை வரும்வரைக்கும்
இமைக்காம காத்திருப்போம் ....

- நாகா


Image may contain: 1 person

02-10-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை :151 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

02-10-2017
திங்கள் 

ஒற்றையடிப்பாதை :151

தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

ஒரு வழிப்போக்கனை துணையாக
அழைத்துச்செல்கிறது இந்த கவிதை ...
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்
தனிமையின் நிழலை பூசிக்கொண்டு
திரியும் ஒரு நிலவை போல
அதன் எல்லைகள் நீண்டுகொண்டே செல்கிறது...
சுவடுகளை தேடி பின்தொடர
யாருமற்ற பொழுதுகளில்
எழுத ஆரம்பிக்கிறது தன்னை பற்றிய குறிப்புகளை ..
வெயில்நிலங்களையும் மழை பூமிகளையும்
கடந்து கடந்து போகிறது
அதன் பனிக்கால ராத்திரிகள்...
இலையுதிர் காலத்தின் புகலிடங்களை
தேடி அலையும் மலைப்பாம்பென
அதன் இரைதேடும் அவசரம்
வெளிப்படுகிறது கவிதையின் வார்த்தைகளில் ...
ஒரு வெளியில் தொடங்கி மறுவெளியில்
முடிந்துவிடும் உங்கள் வாசிப்பை போல
ஒரு பாதசாரியின் பயணமாய்
கனகச்சிதமாய் கடந்து போகிறது .....
தொலைவுகளில் தொலையும் குழந்தையாய்
இறக்கிவிட்ட பழக்கப்படாத இடத்தில்
மறுபடியும் உங்களை தேடவைத்தபடி….

- நாகா

No automatic alt text available.

03-10-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :152 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

03-10-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :152
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த சாவியை கடந்து தான்
எல்லோரும் போனார்கள் என்னை தவிர...
யாரோ தவறவிட்டிருந்த அது
பூட்டிய வீட்டை ஞாபகப்படுத்தியது ...
அறைக்குள்ளிருந்து வெளியேற துடிக்கும்
சிலந்தியாய் கிடந்து தவித்தது அது..
கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட
யாரோ எழுதிய கடிதமோ
வாலறுந்து தொங்கிக்கொண்டிருக்கும் பல்லியோ
இறந்து கிடக்கும் கரப்பானை
இழுத்துச்செல்லும் எறும்புகளோ
ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கலாம் அந்த அறைக்குள் ...
சாவியை கண்டுகொள்ளாத
பிறருடைய பிரியர்களின் மிச்சத்தில்
கூடுகட்ட ஆரம்பித்தது அதன் ஏக்கம்...
கள்ளசாவிகளை அனுமதிக்கும் பூட்டுகள்
எப்போதாவது தொலைத்துவிடுகிறது
இப்படிப்பட்ட சாவிகளை ...
சாவியை தொலைத்த யாரோ ஒருவன்
விட்டுச்சென்ற பரிதவிப்பை
சுமந்து நடக்கிறது இந்த கவிதை ...
- நாகா
No automatic alt text available.

04-10-2017 புதன் ஒற்றையடிப்பாதை :153 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

04-10-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :153
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
காற்றில் கரைதொட்டு மிதக்கும் குடைகளைப்போல
அவனுடன் நடந்துசென்ற மழை ராத்திரியை
யோசித்து கொண்டிருக்கிறாள் அவள்....
மழை நனைத்த அவளை பிம்பமாய்
வரைய ஆரம்பிக்கிறான் அவன்
கிறுக்கலில் உடைந்த பென்சிலை போல்
ஈரம் சொட்டும் இரவுகளில்
ஒரு தேசாந்திரியை ஞாபகப்படுத்தியபடி....
மின்மினி பூச்சியை உள்ளங்கையில் பொத்தியபடி
குளிர் போர்வைக்குள் உறங்க தொடங்கினர்
அவர்களை அப்படி யோசிக்க வைத்தவர்கள் ....
சாலையெங்கும் உடன் வந்த வார்த்தைகள்
கதவு தட்டிக்கொண்டிருக்க யாரையோ
தேடிக் கொண்டிருந்தது அந்த காதல் ஒரு பாதசாரியை போல் ...
விடைபெற்று வந்த பிறகுதான் தெரிந்தது
அழைப்பிதழுக்கு வெளியே அவனும்
அழைக்காமல் மனதின் உள்ளே அவளும் இருப்பது ....
ஒரு முறிந்த மரக்கிளையில்
மெல்ல பெய்துகொண்டிருந்தது
இரண்டு மழை ஒரு கூடைக்கு வெளியே ...
மழையேந்தும் மழைக்குள்
மழலையான காதலின் நடைவண்டி
உடைந்து போயிருந்தது அப்போது ...
மழையில் இணைந்த காதல் மழையில் பிரிவதை
கவிதையாய் பார்க்கிறேன் நான்
அய்யோ பாவம் என்று நீங்கள் கண்ணீர் விடுகிறீர்கள்
அதையும் துடைத்து எடுத்துச்செல்லும் இந்தபெருமழை ..
- நாகா
Image may contain: outdoor

5-10-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :154 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

5-10-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :154
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முதல் முறையாக
அப்போது தான் பார்க்கிறேன்
நிழல் பறவையை கொத்திக்கொண்டிருந்தது
அந்த நிஜ பறவை ...
தன்னைப்போல் அசைக்கும் அதன் சிறகை
பொறாமையாய் பார்த்தது ..
அந்த கண்ணாடி கடையை கடந்து போன
ஒரு இலையுதிர் கால மதியத்தில்
தன் பிம்பம் பார்த்து வேகமாய் பறந்தது அது..
கிளைகளில் அமர்ந்த போது
இரண்டொருமுறை குளத்தில் தன் உருவம் கண்டு
அது தானில்லை என்பதில் உண்டான நம்பிக்கை
அதன் ஆகாயத்தை காயப்படுத்தியது ....
மரம் கொத்தும் தன் அலகை
நிழல் கொத்த அனுமதித்தது அதன் விபரீதம்...
பறப்பது தான் அல்ல என்பதில்
காட்டும் அதன் அக்கறை
கவிதையுடன் அருகில் செல்லும் என்னை பார்த்து
பறக்க ஆரம்பித்தது நிதானமாக ..
இப்போது நிஜ பறவையை
கொத்த ஆரம்பித்தது நிழல் பறவை ...
- நாகா
Image may contain: bird

08-10-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :155 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

08-10-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :155
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு பெருமழையில் நனையாமல் நடக்கும்
என்னை நனைத்து பார்க்கிறது அவளின் பிரியம் ...
உதிரும் நீர்திவலைகளில் உருண்டோடுகிறது
அவளுக்கும் எனக்குமான உரையாடல்கள்...
கூந்தலில் சிக்கிய என் விரல்களில் இருந்து
செல்லமாய் பதுங்கி ஓடின காதல் முயல்கள்....
உயர உயர பறந்துசெல்லும் ஒரு பறவையாக
என் ஆகாயம் எங்கும் நீந்துகிறது அவளின் நேசம் ...
கன்னத்தில் பின்னங்கழுத்தில் நெற்றியில்
உதட்டில் உள்ளகையில் படர்கின்றன முத்தங்கள் ....
வேலிகளை தாண்டும் மரத்தின் நிழல் போல
உள்ளிறங்கும் வேர்களில்
கிளைவிரிக்கிறது எங்கள் தனிமை ...
பனித்துளி வார்த்தையில் பசியாறும்
எங்கள் ஊடல்களில் குளிர் காய்ந்த காதல்
முதல் முறையாக உறங்க செல்கிறது
எங்களை எழுப்பி விட்ட நிம்மதியில்....
- நாகா
Image may contain: outdoor and water

Thursday, July 26, 2018

10-10-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :156 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


10-10-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :156
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
புகைப்படங்களுக்கு பின்னே
கதை சொல்வது அவனுக்கு பிடிக்கும் ....
அவன் என்றால் நிச்சயம்
அது நீங்கள் இல்லை ...
அவனுக்கும் உங்களுக்கும்
இருக்கலாம் நிறைய வித்தியாசங்கள் ...
சமீபத்தில் எடுத்துக்கொண்ட சுயமியில்
அவனை பார்த்து சின்னதாய் புன்னகைத்த
உங்களில் சிலருக்கு அவனை தெரிந்திருக்கலாம் ...
அவனின் சுயமிகளில் அதிகம்
நிரம்பி இருந்தது நீங்கள் தான்
என்று தெரியாது உங்களுக்கு...
நிறங்களில் குறைந்திருக்கும் உங்கள்
புகைப்பட ஆல்பங்களில் அடிக்கடி
அவனை தேடும் உங்கள் விழிகளில்
உங்களையே நீங்கள் கண்டு
வியந்திருக்கலாம் அபூர்வமாக ...
வேலிகள் தாண்டும் உங்கள் மனக்கிளைகளில்
கூடுகட்டும் அவன் நினைவுகளை
தாலாட்டாவே செய்யலாம் உங்கள் இருப்பு ...
அவனை எப்போதாவது சந்திக்கும் ஆவலில்
உங்களை தொலைத்து விடக்கூடிய ஆபத்துக்கள் அதிகம் ...
இப்போது தான் முதல் முறையாக
அவன் எச்சரிக்கையை கவனிக்கிறீர்கள் ..
அவானாகி கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்
அவன் எப்போதும் நீங்களாகவே இருந்திருக்கிறான் ....
- நாகா

11-10-2017 புதன் ஒற்றையடிப்பாதை :157 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

11-10-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :157
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு சுற்றும் பம்பரமும்
சுற்றிவிட்ட சாட்டையுமாக
தென்படலாம் இந்த கவிதை.....
ஆனால் பம்பரம் பற்றியும் சாட்டை குறித்தும்
பேசப்போவதில்லை இது ..
சாட்டையின் லாவகம் தீர்மானிக்கும்
பம்பரத்தின் ஆயுளை
வேக வேகமாக சொல்லி செல்கிறது அவ்வளவுதான் ...
ஆணிகள் உராய்ந்து தேய்ந்த நிலம்
அசைக்கிறது ஒவ்வொரு முறையும் ..
சாட்டை தொலைத்த பம்பரம்
சுழல ஆரம்பித்தது கவிதையில் ...
உள்ளங்கையில் சுழலும் பம்பரம்
ஒரு பார்வையாளனாகவே
பார்க்க வைக்கிறது அனைத்தையும் ...
சுற்றும் பம்பரங்களும் சுற்றாத சாட்டைகளும்
சொல்லிக் கொள்கின்றன
சுற்றிவிட்டவனின் தீராத ஆசையை ..
அந்த சாத்தியமில்லாத பொழுதில்
சங்கடப்படுத்தவே செய்கின்றன சாட்டைகள்...
சாட்டையில் இருந்து அவசரமாக
கண்விழித்தது அந்த எறும்பு
சுழலும் பம்பரத்தின் சுற்றுப்புறங்களில் ஊர்ந்தபடி .....
-நாகா

12-10-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :158 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


12-10-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :158
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
எனக்கும் அந்த பறவைக்குமான உரையாடல்
எழுதி செல்கிறது இந்த கவிதையை ...
தானியங்களாக சிதறும் வார்த்தைகளை கொத்த ஆரம்பித்தது
நேற்று உங்கள் வாசல் வந்த அந்த பெயர் தெரியாத பறவை ...
என் மொழி உங்களுக்கு புரிந்திருந்தாலும்
அந்த பறவையின் மொழி உங்களுக்கு தெரிந்திருந்தாலும்
மொழிபெயர்க்காமல் கிடக்கலாம் அதன் மௌனம் ...
ஆகாயம் சுமந்து கண்டம் தாண்டும்
அதன் திசைகளின் விளிம்புகளில்
உதிர்ந்து கிடந்தது சிறகுகளாக அதன் தனிமை ...
கூட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட
அதன் இருப்பிடத்தில் நேற்றைக்கும் நேற்று
கவிதைகளை சுமந்து கூன்விழுந்து
கிடந்தது அதன் இரவுகள் ...
ஒரு உரையாடல் முற்றுபெறாமல்
அந்த பறவையை போல எதையோ தேட ஆரம்பித்தது ..
ஒவ்வொரு முறையும் பறக்கும் போது
அது விட்டுத்தான் செல்கிறது
கண்ணீர் விட தெரியாத அதன் கவிதைகளை...
-நாகா

15-10-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :159 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


15-10-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :159
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த குளத்தில் இருந்து இரண்டு மீன்கள்
கரையேறி சென்றுவிட்டதை பற்றிய
கவிதையாக இது தெரியலாம்...
ஆனால் இந்த கவிதைக்கும் மீனுக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை ....
ஈரம் சொட்ட கரையெங்கும்
மிதக்க ஆரம்பிக்கும் தூண்டில்களில்
தக்கையின் மீதே மொய்க்க
ஆரம்பிக்கிறது உங்கள் கண்கள்...
வலையில் சிக்கிய மீனொன்று
கொக்காக மாறி உங்களை தூக்கி போகிறது ....
கண்ணாடி பாட்டிலில் நீந்தும் இன்னொன்றை
கணக்கெடுக்க ஆரம்பித்தது அந்த ராத்திரி ...
மீன்களின் ஆயுள் அந்த குளத்தின்
கோடைகாலத்தை நினைவுபடுத்த
மீன்களின் காதலை இந்த கவிதை சொல்வதாக
நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள்...
மெல்ல நீந்திய அதன் சுவடு
கரை ஒதுங்கியபடி கருவாடிக்கொண்டிருந்தது ..
கைகோர்த்தபடி நீந்திய மீன்கள்
சமயலறையில் மசாலா வாசனையில் மூழ்க
முழுமை பெற்றதாய் முடிந்து போகிறது இந்த கவிதை ...
எந்த கரிசனமும் பெறவிரும்பாத
அந்த குளத்தில் நீந்திக்கொண்டிருக்கின்றன
வேறொரு இரண்டு மீன்கள் ....
-நாகா

17-10-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :160 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

17-10-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :160
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
பெயர் சொல்ல வெட்கப்பட்ட
ஒரு பெண்குழந்தையை நேற்று அங்காடியில் சந்தித்தேன்
அப்பாவுடன் தக்காளி பொறுக்கிக்கொண்டிருந்தாள்....
கேள்வியை மிரட்சியுடன் எதிர்கொண்ட அவளுக்கு
அப்பாவின் கைவிரல் அப்போதைக்கு பாதுகாப்பு...
சாலையை கடந்த போது அம்மாவின்
விரல் பிடித்து போன இன்னொரு பெண்குழந்தையிடம்
கேட்ட அதேகேள்விக்கு மறுப்பு மட்டுமே பதிலாய் வந்தது
கரைந்து வழிந்து உருகிக்கொண்டிருந்தது ஐஸ் க்ரீம் ...
அம்மாவும் அப்பாவும் உடன் வந்த தம்பியுமாய்
பின்னொருநாள் திரையரங்கில்
அதே கேள்விக்கு தன் வெள்ளைநிற டெட்டி பியருக்கு
வைத்த செல்ல பெயர்வரை பகிர்ந்து கொண்டாள்
பாப்கார்ன் கனவுகளை பங்கிட்டுக்கொண்டது...
இன்னொரு பெண் குழந்தை ....
கேள்விகளை நான் கேட்ட இடமும்
அதை எதிர்கொண்ட குழந்தைகளுமாக
இந்த கவிதை நிரம்பிக் கொண்டிருக்க
ஏதும் அறியாத ஒரு பெண்குழந்தை
என்னை விசாரிக்க ஆரம்பிக்க
முடிந்துவிடுகிறது இந்த கவிதை பலவீனத்துடன் ....
-நாகா

18-10-2017 புதன் ஒற்றையடிப்பாதை :161 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

18-10-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :161
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மழையுடன் மழை சேர்த்து
விளையாடுகிறது மனசு ..
இனிப்பின் இடைவெளியில் அம்மா
புதுத்துணியின் வாசனையில் அப்பா..
கடல் குடித்த கரையெங்கும்
ஒதுங்கும் நண்டுகளாகின்றன ஞாபகங்கள்...
முழுமை பெறாத கால்ச்சட்டையும் கைசட்டையுமாக
தையலகத்தில் நிற்கிறது பால்யம் ...
அப்பத்தாவின் பாம்படங்களாக
அசைகின்ற பட்டாசு சத்தம்
சுருதி சேர்க்கிறது இப்போது ...
தம்பியும் தங்கையும்
அண்ணனும் அக்காவுமான வாழ்க்கை
மத்தாப்புகளை பூப்பிக்க வைக்கிறது ..
ஒரு குடைக்கம்பியில் வடைசுட்ட பாட்டியின்
சீதனம் பல்லாங்குழியில் விளையாடும் மகளை
பார்த்தபடி தீபாவளி வாழ்த்துக்களுக்கு
பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
முகநூல் பக்கத்தில் நான் ...
-நாகா

22-10-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :162 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


22-10-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :162
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அவளை பிடிக்காத அவனும்
அவனை புறந்தள்ளும் அவளும்
தேட ஆரம்பிக்கின்றனர் காரணங்களை
பிடித்தும் பிடிக்காமலும்.....
வண்ண நூல்களால் தொங்கிக்கொண்டிருக்கும்
வீதியை கடப்பதில் மட்டும் அலாதி பிரியம்
தொற்றிக்கொள்கிறது இயல்பாக ...
தறிச்சத்தம் இசைக்க ஆரம்பிக்க
உற்று கவனிக்கும் விழிகளை புறந்தள்ளியது நிறமுரண் ...
புரியாமல் இருந்த சொல்
பிறகுதான் புரிகிறது கயிறு திரிதலின் சூட்சுமம் ...
உள்ளங்கை தொட்டு மணிக்கட்டில்
வண்ண நூல்களை கட்டிப்போனவள்
இப்போதும் பௌர்ணமியாகவே தெரிகிறாள் ...
தேர்வு அறைகளை போல சில நேரமும்
விடைத்தாள்களை போல பல நேரமும்
நூல்களின் இணைப்பில் மூச்சுவாங்கியது மனசு...
சுட்டுவிரல்களில் சிக்கிய நூலில்
சுற்ற ஆரம்பிக்கும் சக்கரங்களாக
சுழல ஆரம்பிக்கிறது வாழ்க்கை.....
ஒற்றை நூலில் ஆட ஆரம்பிக்கும்
பொம்மைகளாக அவனும் அவளும் ...
யாரோ இறுக்கமாக போட்ட முடிச்சில் இருந்து
கட்டறுத்து வெளியேறுகிறது நூலின் சுவாசம் ..
-நாகா

23-10-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை :163 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

23-10-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை :163
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தீர்ந்து போயிருந்த முத்தங்களிலிருந்து
உதடுகளால் அந்த தேவதையை
வரைய ஆரம்பிக்கிறது இந்த கவிதை ..
முத்தங்களில் நனைந்திருந்த தூரிகை
தீட்டிச்சென்ற இடங்களில் மென்விரல்களால்
பதியனிட பூக்களானது வியர்வை ...
எட்டாவது நிறத்தில் உண்டான இடைவெளியில்
தன்னை ஊற்றி நிரப்ப ஆரம்பித்தது காதல்...
செலவழித்த கனவுகளை சேகரிக்கும்
ஒரு பாதசாரியாக கடக்கிறது தினமும்..
ஒருஅதிகாலையில் தீர்ந்துபோன
சமையல் எரிவாயுக்காக காத்திருக்கும் சமயலறையாக
நிமிடங்கள் நகர பிடிவாதம் பிடிக்க
வாசல் நோக்க ஆரம்பிக்கலாம் யாதுமான நேசம் ....
தீராத காதலை தினம் தினம்
கோப்பையில் ஊற்றி பருகியபடி நகர்கிறது யாவும் ...
வார்த்தைகள் தீர்ந்த மௌனத்தில்
பேச ஆரம்பிக்கறது இந்த கவிதை முடிவாக ..
-நாகா

24-10-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :164 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


24-10-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :164
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
யாரோ எறிந்த கல்
குளத்தின் மேலே மிதக்கிறது வளையங்களாக ..
ஒவ்வொரு வளையத்திற்குள்ளும்
மூழ்கி எழுகிறது ஒரு பட்டாம்பூச்சி ...
நதியில் துள்ளிக்குதித்த மீனின்
அதிர்வில் குலுங்கி அடங்கிய
அதன் கரையெங்கும் ஒதுங்கியது சிப்பிகள்...
தேநீர் கோப்பையில் கரைந்த சர்க்கரையை
பிரித்தெடுக்கும் உதடுகளில்
தொட்டு போகிறது அந்த ஒற்றை மழைத்துளி ...
குழம்பிய நிறக்கலவையில்
தனித்து தெரிய ஆரம்பித்த ஓவியம்
மேலிருந்து கீழாக இடமிருந்து வலமாக
சிதறிய வார்த்தைகளில் எழுத ஆரம்பித்தது ...
கொட்டிய தானியங்களை
குழப்பமில்லாமல் கொத்திச்செல்லும்
புறாவாகும் தருணங்களை
பறக்கவிடுகிறது இந்த கவிதை....
நீங்கள் வாசித்து முடிக்கும் போது
அந்த வெற்றிடத்தை நிரப்பி இருக்கும்
பறவை உதிர்த்த அந்த ஒற்றை இறகு ....
-நாகா

25-10-2017 புதன் ஒற்றையடிப்பாதை :165 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


25-10-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :165
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

பூச்சாண்டிகளை துரத்த ஆரம்பிக்கிறது
பூச்சாண்டியாய் மாறிய இந்த கவிதை ..
சிதறிய பருக்கைகளில் அம்மாவின் நேசம்
காலிபாத்திரத்தில் நிரம்பி வழியும் ...
அழுகை எழுதிய கிண்ணங்களில்
பாதியாய் வந்து ஒளிகிறது நிலா...
கொடுத்துவிடுவதாய் சொல்லியபிறகும்
தூக்கிப்போகாத பிரியம் பூனையாய் மெல்ல பதுங்கும் ...
இடுப்பில் அமர்ந்த படி தூங்கிபோகின்றன
குழந்தைகள் பூச்சாண்டிகளின் பயத்தில் ...
அழகான பூச்சாண்டிகளை சொப்பனத்தில் கண்டு
கண்விழிக்கின்றன ராத்திரிகள் ...
முகமூடிகளை தொலைத்த பூச்சாண்டிகளை
விண்மீன்களில் தேட ஆரம்பிக்கறது
முதல் முறையாக அழ ஆரம்பிக்கும் குழந்தை ...
பூச்சாண்டிகளுடன் விளையாடும் குழந்தைகள்
உங்களை போல பாக்கியாயசாலிகள் ...
-நாகா

26-10-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை :166 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

26-10-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை :166
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு பறவை அமர்ந்து போன கிளை போல
காற்றில் மெல்ல அசைகிறது இந்த கவிதை ...
தரைதொட்ட பூவில் மிதக்க ஆரம்பித்தது
காற்றின் கதவு திறக்கும் அதன் முயற்சி ...
உதிரும் நிழல் போல் மரம் சுற்றி அலைந்தது
வேர்களை விசாரிக்கும் அதன் நேசம் ....
ஒரு பெருமழைக்கு பிந்தைய மதியம்
முறிந்த கிளையில் தொங்கிய கூடு தேடி
பறந்தது அந்த பறவை யாருக்காகவோ ..
அசையும் இலைகளில் கொட்டிச்செல்லும்
அதன் தீராத இசையில் திசைகள் நனைய ஆரம்பித்தது ...
தலை துவட்டிப்போன தட்டான்களாக
தாழப்பறக்கும் அதன் சிறகு பிடிக்கும் உங்கள் முயற்சியில்
சிக்கிக் கொள்ளலாம் தட்டானுக்கு பதில் இந்த கவிதை ....
-நாகா

29-10-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :167 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

29-10-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :167
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
பூவரசம் இலையில் நுழைந்து
வெளியேறும் காற்றில்
நிரம்பி வழிகிறது இசை
மேய்ச்சலில் தொலைந்த ஆட்டுக்குட்டியாய்
கேட்கவேண்டி இருக்கிறது ஒவ்வொருமுறையும் ..
மழையேந்தும் உள்ளங்கையில்
சில்லென்று படரும் சிறுவெயில் போல
அனிச்சையாகிறது அதன் தனிமை ...
கொட்டிச்சென்ற அதன் இருப்பில்
தொட்டுச்செல்கிறது உச்சியின் நிழல்..
கை நிறைய அள்ளி வீசிவிட்டு போகும்
வண்ணக்கலவையில் நிறமிழக்கிறது வானம் ...
ஆலோசனைகளை பூசணிக்கொடியாக்கும்
நிலமெங்கும் மறைகிறது அதன் உருவம் ...
தொட்டிகளில் பதியனிட்ட விதைகளில்
முளைக்க ஆரம்பிக்கிறது கேள்விகள் ...
கேரியரில் அமர்ந்த பொதிபோல
நகர மறுக்கும் மிதிவண்டியாகிறது அதன் யோசனைகள்..
யாரும் உணராத பொழுதில்
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது
பூமராங் வார்த்தைகளை வீசிட்டு போகும்
யாரோ ஒருவரின்
அதிமேதாவித்தனமான வார்த்தைகள்....
-நாகா

30-10-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை :168 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

30-10-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை :168
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கொஞ்சம் ஜன்னல் திறந்து வையுங்கள்
உங்கள் அனுமதிக்காக என்னைப்போல்
காத்திருக்காது என் கவிதை ...
சட்டென்று நனைக்க ஆரம்பிக்கும் மழைபோல
சில்லிட வைக்கலாம் உங்களை ...
சமரசம் செய்துகொள்ள பழகிய எதுவும்
கைவசம் இல்லாத பொழுதில் உங்களை
வாசிக்கவைத்தில் அதன் அடாவடித்தனத்தை
நீங்கள் உணர முற்படலாம்…
மெல்ல உங்களில் தன் வேர்களை
இறக்கி செல்லும் அதன் வனத்திற்குள்
உங்களை கூட்டிபோகும் ஒரு குழந்தையாக ...
ஒரு மின்மினியாகி உங்கள் பாதையில்
அரிக்கேனாகும் அதன் அடையாளம் ...
ஒரு வித்தியாசம் நான் உங்களால் நேசிக்கப்படுகிறேன்
என் கவிதையால் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள்...
-நாகா

31-10-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :169 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


31-10-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :169
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
வழிதெரியாமல் மாட்டிக்கொண்ட
ஒரு வழிப்போக்கனை போல
அந்த இரவு நேர பேருந்தில் சிக்கிக்கொண்டது
சாயம்போகாத அந்த வண்ணத்துப்பூச்சி ....
தேநீர் இடைவேளையில் இறங்கிய கூட்டத்திற்கிடையில்
உடன் வந்து உள் நுழைந்திருக்கவேண்டும் ...
இரவின் இருள் போர்த்திய சாலையில்
ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில்
சதா அலைந்து கொண்டிருந்தது அது ...
தோட்டத்தின் முகவரி தொலைந்திருந்ததை
படபடக்கும் அதன் இறக்கைகள் சொல்லிக் கொண்டது ...
களைத்து ஒரு கட்டத்தில் ஜன்னல் வழி வெளியேறி
மீண்டும் உள் நுழைந்துவிட்டது அது....
அதன் விடுதலை உள் இல்லை என்பதை
உணர முற்பட்டிருக்கும் பொழுதில்
அமர ஆரம்பித்தது குடைக்கம்பிகளுக்கு மேல் ..
வண்ணத்து பூச்சியின் மொழி தெரிந்திருந்தால்
ஒருவேளை விசாரித்து இருக்கலாம் ...
மின்மினி இரவுகளை ரசிக்க ஆரம்பிக்கும்
என் கண்களில் விழுந்தது அதன் தனிமையின் நிழல் ..
உடன் அழைத்து போகும் என் எண்ணதில்
நள்ளிரவில் இறங்கிய என்னுடன்
இறங்கிய அதன் துணிச்சல்
அந்த நீல இரவை வெண்ணிற இரவாக்கியது ...
அனேகமாக என் வீட்டிற்கு பின்னே
ஒரு தோட்டம் உருவாகலாம் ....
-நாகா

01-11-2017 புதன் ஒற்றையடிப்பாதை :170 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


01-11-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :170
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த பறவையை அந்த அதிகாலையில்
அப்படி பார்த்திருக்கக்கூடாது நான் ...
தார்சாலையின் இடது ஓரம்
தரை ஓவியமாய் மாறியிருந்தது அது..
முன் சக்கரம் அல்லது பின்சக்கரம்
ஏதோ ஒன்றில் முடிந்திருந்தது அதன் கனவு ..
இரைத்தேடும் அதன் பசி
இரையாக்கி இருந்தது அதை...
வானம் கவிழ்ந்து குடைபிடிக்க
அதன் நிழலெங்கும் ஊர்ந்தது வெயில் ..
உதிர்ந்த இறகுகளில் தென்படவேயில்லை
அதன் கூடிருக்கும் மரம்....
நடக்கும் பறவைகளை அமைதியாய்
விசாரிக்கிறது அந்த வீதி ...
பயணிக்கும் வாகனங்களின்
முன்சக்கரங்களை நோக்கியே
பார்த்துக்கொண்டிருந்தது அந்த குட்டி பறவை ...
ஏதோ சொல்ல முற்படும் அதன் அலகிலிருந்து
வெளிப்பட்டது ஏக்கமாய் கீச் கீச் ....
-நாகா

05-11-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :171 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


05-11-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :171
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மனிதர்களை கடந்து
விரைந்து கொண்டிருக்கிறது சாலைகள் ...
தெருவிளக்குகள் உதிர்த்த
வெளிச்ச பூக்களை சுற்றி கூடுகட்டுகிறது
ஒரு தேசாந்திரியின் மின்மினி இரவு ...
இலக்கில்லா அதன் பயணத்தில்
தொடர்ந்து வரும் நதியாகிறது கனவு ..
கதவில்லாத வீடுகளாக சாலைகளை
பார்க்க தொடங்கும் அதன் கைகளில் இருந்து
நழுவ ஆரம்பிக்கிறது சாவி......
நெடுஞ்சாலை உடம்பை உதறி தள்ளி
எழத்தொடங்கும் விழிப்பில் தளும்புகிறது ஆசை..
இருட்டை போர்த்தும் திசையில்
தொலைகிறது ஆடாக சாலைகள் ...
சாலைகளின் நீளம் தீர்மானிக்கும் பயணங்களில்
இளைப்பாறும் வழிப்போக்கனின் நிழல்
கிடைத்தேடி அலைகிறது ..
வழக்கம் போல வலசை திரும்பும்
பறவையின் ஒரு பக்க சிறகாக
இந்த கவிதை மாறிப்போகுமானால்
உங்கள் ஆகாயத்தை அலமாரியில்
நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் ...
- நாகா

07-11-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை :172 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


07-11-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை :172
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கொஞ்சம் நிழலும் கூடுதல் வெயிலுமாக
இந்த பொழுது உன்னை போல் எனக்கும் ...
போர்வை போர்த்தும் இரவை
மழை கண்களுடன் பருக ஆரம்பித்தது...
கார் கண்ணாடியில் யாரோ எழுதிய
ஒருத்தியின் பெயரை ஞாபகப்படுத்தியது
இன்னொருத்தியின் முகம் ...
பின்னங்கழுத்தில் படரும் மூச்சு காற்றில்
நீந்த ஆரம்பித்தது ஞாபக மீன்கள்...
நீர் இறைக்கும் ராட்டினத்தில்
ஏறி இறங்கும் வாளியாக
கொட்டி நிரப்புகிறது ஒவ்வொருமுறையும் ..
பாசிபடர்ந்த குளத்தில் தளும்பும்
தாமரை இலைகளை தழுவிச்செல்கிறது காற்று ...
மூங்கிலை இசைக்க ஆரம்பிக்கும்
வனத்தில் இருந்து முதன் முறையாக கேட்கிறேன்
என் பெயரை உனது உதடுகளில் இருந்து ...
- நாகா

08-11-2017 புதன் ஒற்றையடிப்பாதை :173 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


08-11-2017
புதன்
ஒற்றையடிப்பாதை :173
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
எனக்கும் அவளுக்குமான அன்பு
நனைக்கிறது அந்த இரவை ...
மழை ஏந்தும் மழையாக
ஒரு சாரல் தினத்தில் தேநீர் பருகும்
அவளுடனான என் கவிதைகள்
தலைதுவட்ட ஆரம்பிக்கறது முதல்முறையாக ...
திவலைகள் வரையும் அதிசிறந்த ஓவியமாக
புன்னகைகிறாள் ஒவ்வொரு விடைபெறுதலிலும் ...
எனக்குள் இருந்து ஒலிக்க ஆரம்பிக்கிறது
அவளுக்கான விருப்ப பாடல் ...
என் ஒலிபரப்பின் எதிர் வாசலில்
பூத்தொடுக்கும் அவளுக்காக
பூக்க ஆரம்பிக்கிறது என் தோட்டம் ...
தொட்டி செடியில் வந்தமரும் பாட்டாம்பூச்சிக்கும்
கண்ணாடி தொட்டியில் நீந்தும் மீனை
விசாரித்து போகும் சாளரம் நுழையும் சிறு வெயிலுக்கும்
சம்பந்தப்பட்டதில்லை இந்த கவிதை ...
நிழலாக சரிந்த அவளின் பிம்பம்
முதன்முதலாக பிரதிபளிக்கிறது
என் நிலைக்கண்ணாடியில் ...
காகிதகப்பலை கவிழ்த்த காற்றில்
அமர்ந்து செல்கிறது அந்த மழை
முதல் முறையாக எங்களை நனைத்தபடி...
- நாகா

neelam enbathu song