Thursday, July 26, 2018

15-10-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :159 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


15-10-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :159
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த குளத்தில் இருந்து இரண்டு மீன்கள்
கரையேறி சென்றுவிட்டதை பற்றிய
கவிதையாக இது தெரியலாம்...
ஆனால் இந்த கவிதைக்கும் மீனுக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை ....
ஈரம் சொட்ட கரையெங்கும்
மிதக்க ஆரம்பிக்கும் தூண்டில்களில்
தக்கையின் மீதே மொய்க்க
ஆரம்பிக்கிறது உங்கள் கண்கள்...
வலையில் சிக்கிய மீனொன்று
கொக்காக மாறி உங்களை தூக்கி போகிறது ....
கண்ணாடி பாட்டிலில் நீந்தும் இன்னொன்றை
கணக்கெடுக்க ஆரம்பித்தது அந்த ராத்திரி ...
மீன்களின் ஆயுள் அந்த குளத்தின்
கோடைகாலத்தை நினைவுபடுத்த
மீன்களின் காதலை இந்த கவிதை சொல்வதாக
நீங்கள் சொல்லிக்கொள்கிறீர்கள்...
மெல்ல நீந்திய அதன் சுவடு
கரை ஒதுங்கியபடி கருவாடிக்கொண்டிருந்தது ..
கைகோர்த்தபடி நீந்திய மீன்கள்
சமயலறையில் மசாலா வாசனையில் மூழ்க
முழுமை பெற்றதாய் முடிந்து போகிறது இந்த கவிதை ...
எந்த கரிசனமும் பெறவிரும்பாத
அந்த குளத்தில் நீந்திக்கொண்டிருக்கின்றன
வேறொரு இரண்டு மீன்கள் ....
-நாகா

No comments:

neelam enbathu song