Thursday, July 26, 2018

29-11-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 186 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


29-11-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 186
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அப்படியே பார்த்து பழகிவிட்டது
நிலைக்கண்ணாடியும் குங்குமச்சிமிழும்
புழக்கடை கிணற்றடியும்
துணி துவைக்கும் கல்லும்
கதவிடுக்கில் இருந்து வரும் குரலுமாக
எந்த மாற்றமும் இல்லாமல் ...
அதனதன் இருப்பில் அதுஅது இருக்க
மாறியிருக்கிறேன் நான் மட்டும் ..
அப்பாவின் வெள்ளைவேட்டியை
கிழித்து ஆக்கி விட்டோம் இட்லித்துணியாக ...
அடுப்பில் இருந்து சுடுபாத்திரம் இறக்கும்
பிடித்துணியாய் ஆகிவிட்டது அக்காவின் தாவணி ..
மிச்சம் மீதி துணியை எனக்கும் தம்பிக்கும்
தலையணை ஆக்கிக்கொண்டோம் ...
மழைச்சாரலில் ஜன்னல் சாத்தியதும்
வெயில் காலத்தில் தாழிட மறந்ததும்
மொட்டைமாடியில் உதிர்ந்த
முருங்கை பூக்களை கூட்டி பெருக்கியதும்
அப்படி அப்படியே தங்கி விடுகிறது
மனதாழ்வாரத்தின் இடுக்குகளில் ......
ஊறுகாய் ஜாடி இப்போது சர்க்கரையால்
நிரம்பி வழிகிறது ..
சாவி தொலைத்த மறுநாளுக்கும் மறுநாள்
எலுமிச்சைமர நிழலில் இளைப்பாறுகிறது
அணிலொன்று பாதிக்கடித்த கொய்யாவுடன் ....
- நாகா

No comments:

neelam enbathu song