Monday, July 30, 2018

01-10-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :150 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

01-10-2017
ஞாயிறு 
ஒற்றையடிப்பாதை :150

தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

முப்பது நாள் முடிச்சிடுச்சா
தூண்டாமணிவிளக்கு கண்மூடி தூங்கிடுச்சா....
கார்மேகம் கலைஞ்சிடுச்சா
அது இப்ப என் கண்ணுக்குள்ள புகுந்திடுச்சா ...

நட்ட இடத்துல தான்
செடி ஒண்ணு முளைச்சிருக்கு ..
எரிச்ச இடத்திலதான்
எருக்கம் பூ பூத்திருக்கு ...
எரவானம் பக்கத்தில நீ படிச்ச புஸ்தகத்த
சொருகி வச்சிருக்க
கரையான் படிக்கத்தான் கவனமா காத்திருக்கு ...

ஜிமிக்கி கம்மலாட்டம்
மனசு பொம்மலாட்டம் ஆடுதம்மா ...
நூலறுந்த காத்தாடியா
இப்போ மொட்டை மாடி தேடுதம்மா ...

சிம்னி விளக்கு பட்டு
பத்திக்கிச்சு உன் ஆசை...
சிலந்தி வலைக்குள்ள
சிக்கிக்கிச்சு ஊர் ஆசை ...
குப்பை மேனிக்கெல்லாம்
குணப்படுத்தும் குணமிருக்கு
குரக்கத்தி பூவுக்கும்
கொண்டாடும் மனமிருக்கு ...
அத்தி பூவுக்கும் கத பேச ஆளிருக்கு
அரளிபூவாட்டம் பாவி மக போயிட்டியே ...

பச்சை இலைக்குள்ள
என் தாத்தன் நோய்யெல்லாம் குணமாக்க ...
உச்சி வேளையிலும்
எங்காத்தா மருத்துவச்சி உசுர் கொடுக்க ..

ஸ்டெதாஸ்கோப்பு கழுத்த தொட
ஆசைப்பட்டு வளர்ந்த மக
சுருக்கு கயித்துக்குள்ள
தூக்கி போட்டு கொன்னுபுட்டோம் ...

காரை பெயர்ந்த சுவர்
உன் கனவை பொத்திவைக்க
குஞ்சுபொரிக்காமல்
பஞ்சாரம் பரிதவிக்க ...

தினந்தோறும் ஒரு சேதி
புதுசாக கிளம்பி வர
உன்னோட விசயத்தை
பூஞ்சணம் ஆக்கிடுமோ ..

விதை நெல்லா உன் நினைப்ப
அடிமனசில் விதைச்சிருக்கோம் ...
வெள்ளாமை வரும்வரைக்கும்
இமைக்காம காத்திருப்போம் ....

- நாகா


Image may contain: 1 person

No comments:

neelam enbathu song