Thursday, July 26, 2018

28 -12-2017 வியாழன் ஒற்றையடிப்பாதை : 205 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

28 -12-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 205
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழி
ஆண்டாளை நினைக்க வைக்கிறாள் அக்கா ...
சூடி கொடுத்த சுடர் கொடியை பெயராக்கிய
அப்பாவை ஞாபகப்படுத்துகிறது இந்த மார்கழி ..
கண்ணனை எழுப்பிய அவளின் வாசல் கோலங்கள்
மிதித்தே பயணப்பட்டன பேப்பர்காரன் சைக்கிள்...
பூசணிப்பூக்களில் அக்காவின் முகம்
தென்படும் போதெல்லாம் கொல்லைப்புறம் சென்று
திரும்பி வருவேன் ராட்டின சத்தத்தில்
விழித்துக்கொள்ளும் எங்கள் வீட்டு கிணறு...
பாசுரங்களில் கரைந்திருக்கும் அவளை
எம்பாவாய் என்று எழுப்பத்தான்
இப்போது யாருமில்லை ..
அக்காவின் பனிபடர்ந்த காலைகள்
இன்னும் வெளுக்கவே இல்லை ....
வெண்பொங்கலும் சுண்டலும் வாங்கும் கூட்டத்தில்
என்னை போல யாரோ ஒருவன்
அக்காவிற்கும் சேர்ந்து வாங்கி வரலாம் ...
ஆண்டாள்களால் நிரம்பி இருக்கும்
வீடுகளில் இருந்து வெளிப்படலாம்
இப்படியும் சில மார்கழி கவிதைகள் ...
- நாகா

No comments:

neelam enbathu song