Wednesday, July 25, 2018

10 -01-2018 புதன் ஒற்றையடிப்பாதை : 213 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

10 -01-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 213
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ராஜகுமாரி தியேட்டரை கடந்து தான்
அவள் வீட்டிற்கு போவது வழக்கம் ...
இரண்டொரு புளியமரங்கள் நிழல் பரப்பிய
நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டிவரும்...
பகல் பொழுதுகளை விட ராத்திரிகள்
வாகன சத்தத்தின் தனிமையில் கரையும் ...
நெல்லிக்காய் மரமும் மஞ்சள் செம்பருத்தி செடியும்
குத்தகைக்கு எடுத்திருந்தது அவள் வீட்டை....
பெயர் தெரியாத அவளுக்கு ராஜகுமாரி என்றே
பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டேன் நான் ...
ஒரு அரண்மனையின் சொந்தக்காரியாக அவள்
ஊதுகுழலில் அடுப்பூதி கொண்டிருப்பாள் எப்போதும் ..
பூக்களை பறிக்கும் அவள் விரல்களில்
அமர்ந்து போகும் மழைக்கு பிந்தைய அந்தி மாலை ....
பள்ளிக்கூடம் கடைக்கண்ணி முனீஸ்வரன் கோவில்
எங்குபோனாலும் அவளை கடந்துதான் செல்வதுண்டு...
அவளுக்கு வயதாவதாக நான் நம்பவில்லை ...
அரைக்கால் சட்டை பருவத்தில்
கண்ணாமூச்சி ஆடியவள் இன்னும்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறாள்
கண்டுபிடிக்க ஆள் இல்லாமல் தனியாக ...
தியேட்டர் வணிகவளாகமாகி விட்டிருக்க
பள்ளிக்கூடம் தியேட்டராகி கொண்டிருந்தது .....
ஒரு பார்வையாளனாக நின்றுகொண்டிருந்தது அந்த புளியமரம் ...
- நாகா

No comments:

neelam enbathu song