Thursday, July 26, 2018

06-12-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 191 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


06-12-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 191
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அக்காவின் கதாநாயகன்
இப்படித்தான் அழைப்போம் நாங்கள்...
வெட்டிவைத்த படங்களில் ஒவ்வொருமுறையும்
தன் ஆகாயம் தீட்டிக்கொள்வாள் அவள்
அந்தரங்கங்களுக்கு வண்ணங்கள் பூசாமல் ...
தனிமையில் அதிகம் முணுமுணுப்பாள்
அந்த நடிகன் நடித்த ஏதோஒரு படம்
ஏதோ ஒரு பாட்டாக இருக்கும் அது ...
ரகசியம் பேசும் அக்காவை
தனிமையில் சிரிக்கும் அக்காவை
கணக்கு நோட்டில் கோலமிடும் அக்காவை
கல்யாணத்திற்கு பிறகு
பார்க்க முடியாமல் போனதில் வருத்தம் எனக்கு ...
மாமாவுடன் சேர்ந்து அந்த நடிகன் படம் பார்ப்பதை
வலுக்கட்டயமாய் கடந்தே போகிறாள் ....
சேனல் மாற்றி ரசித்தப்பாடலை விடுதலைசெய்கிறாள்...
அந்த நடிகனின் திருமணத்தில் அதிகம் அழுத்தவள்
விவாகரத்தானபோது இனிப்பு செய்து கொண்டாடியவள்
தற்கொலை செய்துகொண்டபோது கதறியவள்
அக்காவின் பிம்பங்களில் யாதுமாகிற ஒன்று
அமர்ந்து போகிறது என்னையும் அறியாமல் ..
மாமாவிற்கு தெரியாமல் கண்ணீர் துடைக்கும் அவளிடம்
நான் சொல்லிக்கொண்டதேயில்லை
மனைவிக்கு தெரியாமல் தன் கதாநாயகியை
மனதிற்குள் வைத்திருக்கும் தம்பியின் ரகசியத்தை ....
- நாகா

No comments:

neelam enbathu song