Wednesday, July 25, 2018

04 -01-2018 வியாழன் ஒற்றையடிப்பாதை : 209 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

04 -01-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 209
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
எங்கு கரகாட்டம் நடந்தாலும் தாத்தா போய்விடுவார் ..
வீட்டில் இருக்கும் பொழுதுகளைவிட
வெளியில் கழிக்கும் பொழுதுகளே அதிகம்...
சிம்னி விளக்கின் வெளிச்சம்
தாத்தாவின் இரவை ஒப்பனைப்படுத்தும் .....
அரிதாரம் இல்லாமல் சிரிக்கும் பாட்டியின்
அடுக்களையில் அடிக்கடி கடுகு வெடிக்கும் ..
வெள்ளாமை பொய்த்தாலும்
விளைச்சல் மிதமிஞ்சி போனாலும்
தாத்தாவின் தாகத்தில் வறட்சி வந்ததில்லை ...
கரகாட்டக்காரி அலமேலு
அல்லி வேடம்கட்டும் வேதவல்லி
இப்படியான பெயர்களை உளறும் தாத்தாவின் உதடுகள்...
மல்லுவேட்டி மைனர்சைன் சிலுக்கு ஜிப்பா
தாத்தாவின் கிளாமருக்கு குறைச்சல் இல்லை...
வெடக்கோழி சமைக்கும் போதும்
கருவாட்டுக்கொழம்புக்கு
சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்க்கும் போதும்
சத்தம் போட்டு பாடுகிறாள் பாட்டி
அர்ஜுனன் தபஸ் தெருக்கூத்து பாடலை ....
சுவரில் தொங்கும் தாத்தாவின் புகைப்படத்தில்
பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறாள் பாட்டி ..
எல்லாம் நடந்த வீட்டுக்குள்ளிருந்து
வெளியேறுகிறேன் ஒன்றும் தெரியாமல் நான் ..
-நாகா

No comments:

neelam enbathu song