Tuesday, September 4, 2018

14-03-2017 செவ்வாய் ஒற்றையடி பாதை : 12 தமிழ் 89.4 பண்பலையில் இன்றைய வானவில் நிகழ்ச்சியில் ஒலித்த கவிதை ....


RJ Naga
14-03-2017
செவ்வாய்
ஒற்றையடி பாதை : 12
தமிழ் 89.4 பண்பலையில் இன்றைய வானவில் நிகழ்ச்சியில் ஒலித்த கவிதை ....
அதுவரை இல்லாத பொறுமை
அவனை பார்த்த பின்னாலதான் வந்து போச்சு
செம்மறி ஆட்டு கூட்டம் போல
தறிகெட்டு போய் ஊர சுத்துது ...
அவன் முன்னால போக
நான் ஆட்டுக்குட்டியாட்டம் பின்னால போவேன் ..
வழிதவறி போன ஒரு மரிய போல
நான் பரிதவிச்சு நினைப்ப
தொரட்டி கண்ணால தழைப்பறிச்சு போடும்
அவன் காதல் என்னை பத்திரமா கூட்டிப்போகும் ...
பள்ளத்தாக்கோ சமவெளியோ
கடந்து போகும் நேரத்தை
கடத்தி போவான் கம்பீரமா..
கசாப்பு கடைய கடந்து போகும்
ஒரு சனிக்கிழமை சாயந்திர நேரத்து
லேசான அதிர்வை போல
எங்க போனானோ தெரியல பயபுள்ள
தேடிட்டு கெடக்கறேன் இப்போ வரைக்கும் ...
வீதியில அவன் நிழல் பார்த்தா
என் வீட்டு ஜன்னல் தொறக்கும் ...
சின்னதா இருமல் சத்தம்
லேசாக எட்டி பார்த்தா
அடுக்களையில் கசாயம் கொதிக்கும் ...
போதாது அவன் நெனப்பு
திருவிழாவா திமிர வைக்குது ...
யான புகுந்த கரும்புக்காடா
பாவி நெஞ்சு பரிதவிக்குது....
ஒத்தையில நின்ன காதல்
பந்தி வைக்க வக்கு இல்ல ...
கைபுடிச்சு கூட்டிப்போக
சிறுக்கிக்கிப்ப யோகமில்ல…
- நாகா

15-03-2017 புதன் ஒற்றையடி பாதை : 13 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்ற கவிதை ......


RJ Naga
15-03-2017
புதன்
ஒற்றையடி பாதை : 13
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்ற கவிதை ......
அப்பாவோட சட்டை
அளவு கொஞ்சம் பெருசுதான்
அம்மாவின் புடவை
அக்காவுக்கும் எனக்கும் தாவணியாகும் ....
அக்கா வச்ச மஞ்சக்கலர் கனகாம்பரமும்
என்னோட டிசம்பர் பூவையும் சேர்த்துதான்
பூத்தொடுப்பா அம்மா...
ஒத்த ஜடையோ ரெட்டை ஜடையோ
பூமுடிச்சு அனுப்பறதுல
அவ்வளவு ஆச அவளுக்கு ...
பல நேரம் என்னோட பையில
அவளோட புஸ்தகம் கெடக்கும் ...
நாமகிரி டீச்சர்கிட்ட உத்தரவு கேட்டுத்தான்
கிளாஸ் ரூம்ல கொடுத்திருக்கேன் பலநேரம் ...
கலாக்காயும் பெரப்பம்பழமும்
கொடுக்காபுளியுமா எங்க பொழுதும்
அப்பப்ப வந்து போகும் ...
அக்கா பெரியமனுஷி ஆனப்புறம்
அவளை பேருசொல்லி கூப்பிட்டதில்ல ....
நல்ல இடம் குதிராம கெடக்குதுன்னு
இசக்கி அம்மனுக்கு மாவிளக்கு போட்டது
இன்னும் ஞாபகத்தில இருக்குது ...
ஒருவழியா கண்ணாலம் முடிச்சு
புகுந்த வீட்டுக்கு அனுப்பி வெச்சுட்டோம் ...
வீட்டுல காலண்டர் மாத்தறதுக்குள்ள
திரும்பி வந்துட்டா ...
அத்திப்பூத்தாற் போல எப்பவாச்சும் சிரிக்கிறவ
பூக்காம போனதால சிரிக்கறதையே மறந்துட்டா ..
சின்னவளை கட்டித்தாங்கன்னு
சம்மந்தம் பேச வந்தாங்க அக்காவோட மாமியார் வீடு ...
அக்காவின் மிச்சத்தை எல்லாருக்கும்
என்ன வச்சு நிரப்ப ஆசை ...
என்னோட அனுமதியை யாருமே கேக்கல
அக்காவும் நிதானமா யோசிச்சு பாக்கல...
அக்கா போனப்புறம் எல்லாம் அப்படியே கெடக்குது
கொல்லையில பூத்த பூவ பறிக்கத்தான் ஆளு இல்ல
அக்கா இல்லாத இடம் மட்டும் வெறுமையா காயுது ...
- நாகா

16-03-2017 வியாழன் ஒற்றையடி பாதை: 14 தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் நிறைவில் ஒலித்த கவிதை ...


RJ Naga
16-03-2017
வியாழன்
ஒற்றையடி பாதை: 14
தமிழ் 89.4 பண்பலை வானவில் நிகழ்ச்சியில் நிறைவில் ஒலித்த கவிதை ...
வேலிகாத்தான் மரத்தை தாண்டி
வெக்கையில நிக்குது
ஓணாஞ்செடி ஓரத்துல
தட்டான் ஒண்ணு சுத்துது ...
கடையாணி தொலைச்ச வண்டி
குப்புற குடை சாயும்
சுத்துற சக்கரமோ
சட்டுனு இடம் மாறும் ....
அடிக்கடி தொலைச்சுப்புட்டு
தேடுறது வேற இடம்
விட்ட இடம் மறந்து போச்சு
விட்டிலாகுது இந்த நேரம் ...
வைக்கோல் பொதி போல
மனசுக்குள் சுமை அழுத்த
நெருஞ்சி முள் கணக்கா
குத்துறத என்ன சொல்ல ...
சுட்ட பான போல
சுணக்கம் ஏதுமில்லை
தப்பு கடலையாட்டம்
வீணா போனதென்ன ...
கம்மாக்கரையோரம்
நெலா விழுந்தும் நனையல
அய்யனார் தோப்புக்குள்ள
நட்சத்திரங்கள் காய்க்கல...
பம்பரம் சுத்துற
சாட்டைக்கிப்ப கிறுக்காச்சு ...
கிறுக்கச்சி மனசுக்குள்ள
பச்சை குத்தி நாளாச்சு ...
நெனப்பு தீப்பிடிச்சு
குப்பு எரியுது ...
நெருப்பு வச்சவளை
கைபுடிச்சு திரியுது . ...
- நாகா.

18-03-2017 சனிக்கிழமை ஒற்றையடி பாதை : 15 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...


RJ Naga
18-03-2017
சனிக்கிழமை
ஒற்றையடி பாதை : 15
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...
புங்கமரம் உதிர்த்த நிழல்
பூவொன்னு அமர்ந்து போச்சு .....
முனை உடைஞ்ச சிமெண்ட் பெஞ்சு
அணிலொன்னு குதித்து போச்சு ..
மேற்கால இருந்து வரும்
ரயிலுக்கு நேரமாச்சு
காத்திருக்க பொறுமை இன்றி
தட்டான் ஒண்ணு தாழ போச்சு ...
ஊருக்கு உள்ள வரும்
ஒத்த ரயில் போலத்தான்
எப்பவாச்சும் உள்நுழையும்
காதலொன்னு வந்து போச்சு ...
செருவாட்டு துட்டுக்குள்ள
ஆசைகளை பூட்டி வெச்சேன்
பரண்மேல பாத்திரமா
ஞாபகங்கள் நட்டு வச்சேன் ...
ஓடையில கால் நனைக்க
உச்சந்தலை சில்லாகும்
கூந்தல் தொடும் ஈரக்காத்து
குபுக்கென்னு சூடாகும் ....
சூடம் போல பத்திகிறேன்
ஒத்த சொல்ல சொல்லிப்போடு...
ஆறிப்போன நெஞ்சுக்குள்ள
அக்கறையா பேசிப்பாரு ....
காலுக்கு கொலுசு கட்டி
முத்தாக உன்னை வச்சேன்
உள்ளங்கை மருதாணியா
உன் காதலை நான் தொட்டு வச்சேன் ...
- நாகா

19-03-2017 ஞாயிறு ஒற்றையடி பாதை : 16 தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்ற கவிதை ......


RJ Naga
19-03-2017
ஞாயிறு
ஒற்றையடி பாதை : 16
தமிழ் 89.4 பண்பலை வானவில் - நிகழ்ச்சியில் இன்று இடம் பெற்ற கவிதை ......
ஏழுமலை எழுகடலை
இங்கிருந்து தாண்டினதா
தாத்தா சொன்னதை
நம்பின வயசு அது ..
முதல் ஹீரோவா தாத்தா தெரிஞ்சதுல
ஆச்சரியம் ஒன்னும் இல்ல ...
வெத்தலையில் மைதடவி
தொலைஞ்ச பொருளை
கண்டுபிடிக்க சொல்லி
ஊரே அப்பத்தாவை கேட்க
மிரட்சியா பார்த்த காலம் அது ....
வடை சுட்ட பாட்டிக்கும்
என்னோட பாட்டிக்கும் ஆறு வித்தியாசங்கள்...
அமாவாசை ராத்திரியில்
ஒத்தையில போனப்ப
முனிய பாத்து புளியமரத்தடியில்
ஒளிந்து கொண்ட சித்தப்பா
ஓயாம சொன்னப்பல்லாம்
வாய்பொத்தி கேட்ட ரெட்டைஜடை வயசு அது ...
காதுல பூவை தாராளமா சுத்துன சித்தப்பா
சித்திக்கிட்ட திக்கி திக்கிதான் பேசுவார்...
ஆளுக்கு ஒரு கதையை
அழகாக சொல்வாங்க
நெசமாவே நடந்ததுனு
நம்பவும் வைப்பாங்க....
திருநீறு பூசி தூங்கவச்சதும்
வேப்பில்லை அடித்து
பயத்தை விரட்டினதும்
இன்னமும் மனசுல அப்படியே கெடக்கு ...
உச்சிவேளையில
ஒத்தையில போகாத...
புளிய மரத்தடியில் தனியா நிக்காத..
வேப்பங்காடு கிணத்தடியில்
சத்தம் கேட்டு திரும்பாதா...
-இப்படி சொல்லியே
வளர்த்து புட்டாக செங்கல் சூளையாட்டம் ......
லாந்தரை ஏத்துற நேரமானா போதும்
யாராச்சும் வீட்டுல
இருக்கோணும் எனக்கு ..
சின்னதா சத்தம் காதுல கேட்டாலும்
யான புகுந்ததா பயம் வந்து தள்ளும்
மூச்சுக்க யாரோ ரயில் ஓட்றதா நெனப்பு ...
இப்போயெல்லாம் பயந்து பயந்து தான்
வாழவேண்டி கெடக்கு ...
துணிச்சல் செத்து ரொம்ப நாளாச்சு ...
பொட்டப்புள்ளைக்கு
இன்னும் வெளுக்கல கெழக்கு
பயத்தை அடகு வச்சா திரும்புமா வயசு ... ....
- நாகா

20-03-2017 திங்கள் ஒற்றையடி பாதை: 17 தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...


RJ Naga
20-03-2017
திங்கள்
ஒற்றையடி பாதை: 17
தமிழ் 89.4 பண்பலை " வானவில் " நிகழ்ச்சியில் இன்று ஒலித்த கவிதை ...
தோட்டத்து வீட்டுல
சின்னதா கூடிருக்கு
எங்கிருந்தோ வந்திருந்த
குருவி ஒன்னு கட்டுன வீடு அது ..
தோப்புக்கு போறப்ப
கீச்சுக்கீச்சு சத்தத்துல
செல்லமா அது பேசும் ...
அது மொழியை புரிஞ்சுக்க
எனக்கு நேரமில்லை
என் மொழியில் நலம் பேச
அது கத்துக்க மறந்ததில்லை ..
பொங்கலுக்கு அடித்த வெள்ளையில
குருவிக்கூடு கலைஞ்சு போச்சு
குப்புற விழுந்த கூடு
கோபுரமா சரிஞ்சு போச்சு ...
ஒத்த நெல்மணியை
செல்லமா கொத்தவரும்
சிறகு விரிக்கையில
ஆகாசம் கூட்டி வரும்
சிட்டுக்குருவிக்கு அப்பதான் சேதாரம் ...
குருவி கூடாட்டம் தான்
எங்க வீடும் இருக்கும் ..
கூடு சிதறிய வீடா போச்சு அப்புறம் ...
அன்னிக்கு பெய்ஞ்ச மழையில
மரத்துல தொங்குன
தூக்கணாங்குருவிக்கூடு
பொத்துனு விழந்தது மாதிரி
எல்லாம் முடிஞ்சு போச்சு எங்க வீட்டுலயும் ..
அதுக்கு பொறவுதான்
தோட்டத்துல கட்டுன வீட்டுல
கூடொன்னு கட்டிச்சு குருவி ...
பார்த்து பாத்துதான்
வெள்ளையடிச்சாங்க ...
சட்டுனு முடியும்னு
கனாக்கூட கண்டதில்லை ...
கூடில்லா வீட்டுக்குள்ள
குருவியா தங்கிகிட்டேன் ...
தந்தி கம்பத்தில் உட்கார்ந்த குருவியாட்டம்
சிறகுலர்த்த கத்துக்கிட்டேன் ...
சிட்டுக்குருவி லேகியத்தில்
செத்துப்போச்சு சில குருவி
சத்தம் போட்ட பேச்சைக்கேட்டு
மாயமாச்சு சிலகுருவி ...
எப்பவாச்சும் வழிதவறி
உள்ளவரும் குருவிக்கு
என் அட்ரஸ் தெரியாது
அது இருக்கும் இடத்துக்கு
வழிதேடி நான் போக முடியாது ...
மறுபடியும் கூடுகட்டும்
நம்பிக்கையில் காத்திருப்பேன் ...
மருதாணி அரைச்சு வச்சு
செவக்கும் வரை பார்த்திருப்பேன் ....
- நாகா

21-03-2017 செவ்வாய் ஒற்றையடி பாதை : 18 தமிழ் 89.4 பண்பலையில் வானவில் உங்களிடம் பகிர்ந்து கொண்ட கவிதை ...



RJ Naga
21-03-2017
செவ்வாய்
ஒற்றையடி பாதை : 18
தமிழ் 89.4 பண்பலையில் வானவில் உங்களிடம் பகிர்ந்து கொண்ட கவிதை ...
ஒட்டுமொத்த வானத்தையும்
கக்கத்துல சுருட்டி வெச்சுகிட்டு
படலை தாண்டி வெளிய போவார் அப்பா...
ஒரு மந்தகாசமான புன்னகை
அனுமதி கேக்காம உள்ள நுழையும் ...
சின்னதும் பெரிசுமான
எங்க வீட்டு வானத்துல
வெளக்கேத்துற அம்மாவாலதான்
அமாவாசை ஞாபகமே அடிக்கடி வரும் ...
அதிராம பேசும் அப்பாகிட்ட இருந்து
அடிக்கடி வரும் வார்த்தை இதுதான் -
" பொம்மனாட்டி இருக்கிற வீடு "
சாவி கொடுத்தா ஆடுற பொம்மையாட்டம் அம்மா
தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையாட்டம் அக்கா...
பரண்ல கெடக்கும் மரப்பாச்சியாட்டம் நான் ..
எல்லாரோட கயிறும் அப்பா கையில ..
அப்பாவுக்கு கயிறை ஆட்டவும் தெரியல
சரியா பிடிக்கவும் தெரியல...
அரளி செடி பூக்குற எங்க காம்பவுண்டு தாண்டி
அடிக்கடி வந்து போகுது ஒண்ணு ரெண்டு பட்டாம் பூச்சி ..
திருடன் போலீஸு ஆட்டம் போல
எப்போவாச்சும் கண்ணாமூச்சி நடக்கும் வீட்டுல ..
இருக்கும் வரைக்கும் தெரியாம போச்சு
போனதற்கு பொறவுதான் புரிஞ்சது
அக்காவுக்கும் மனசு இருந்ததுன்னு அப்பாவுக்கு லேட்டா ...
என்ன செய்ய அரளிச்செடியை
ஆடுமேயாம பார்த்தவரு
அரைச்சு சாப்பிடுவா அக்கான்னு
கனா கண்டாரா என்ன ...
இப்போயெல்லாம் வீட்டுக்குள்ளேயே
பட்டாம் பூச்சிகள் வந்துபோகுது
அப்பாவோட வானம் வீட்டுக்குள்ள முடங்கி போச்சு ..
முதல் முறையா ஜன்னல் மூடின அப்பா
கதவு தொறக்க ஆரம்பிச்சார்...
- நாகா

neelam enbathu song