Monday, September 3, 2018

17-09-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை :140 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....


RJ Naga
17-09-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை :140
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ....
அந்த இரவில் நான்
கலாபமாகிக் கொண்டிருந்தேன் ...
மயில்பீலி போர்த்தும் தருணம்
எனக்குள் மழை மேகமாய் இறங்க ஆரம்பித்தது ..
எப்போது அப்படி நான் மாறினேன்
சொப்பன திசைநோக்கி
ஊர்ந்து சென்றது என் சர்ப்ப பகல் ..
ஒரு பக்கம் தோகை வளர ஆரம்பிக்க
இன்னொரு பக்கம் படமெடுக்க ஆரம்பித்தது நாகம்...
மகுடியின் ஓசை தாழம்பூ காட்டிலிருந்து
நிரப்ப ஆரம்பித்த நேரம் மயிலின் கழுத்து
பாம்பாகிக் கொண்டிருந்தது ..
உதறிய தூக்கத்தில் படுக்கை முழுதும்
சயனத்தின் துளிகள் மயில் இறகுகளாக ...
ஏதோ ஒரு புத்தகத்தில் ஒளிந்து கொண்டு
குட்டிபோடலாம் அந்த இறகு..
மயிலின் கனவை சர்ப்பத்தின் கண்களில் இருந்து
கடத்திக் கொண்டிருந்த அந்த ராத்திரி
தயார்படுத்திக்கொண்டது என் விழிக்குள் ..
கனவுகள் செலுத்தும் அதன் அடுத்த முயற்சி
என்னை மரியாகவும் தன்னை மேய்ப்பனாகவும்
செய்துகொள்ளலாம் ...
அப்போதும் அதுகுறித்து நான் எழுதுவேன்
நீங்கள் கவிதை என்பீர்கள்
நான் இல்லை என்று மறுதலிப்பேன் .......
ஒரு கவிதைக்கான எல்லா வசதிகள் இருந்தும்
எழுதப்படாமல் முடிந்துவிடுகிறது
கனவுகளைப்போல இந்த வாழ்க்கை ..
- நாகா

No comments:

neelam enbathu song